பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536 / அயோத்திதாசர் சிந்தனைகள்

74. இருவர்சொல்லையு மெழுதரங்கேட்டு
இருவரும்பொருந்த வுரையாராயின்
மநுநெறிமுறையால் வழுத்துதநன்று

நியாயாதிபதியானவன் வாதிப்பரதிவாதி இவர்களின் வார்த்தைகளை எழுதரம் மடக்கிமடக்கி விசாரித்து யதார்த்தமொழிகண்டு நீதியளித்தல் வேண்டும்.

75. மநுநெறி முறையின் வழக்கிழந்தவர்தாம்
மனமறவுறுகி யழுதகண்ணீர்
முறையுறத்தேவர் முநிவர்க்காக்கினும்
வழிவழியூர்வதோர் வாளாகும்மே

அங்ஙனம் மநுநீதி தவறி, நியாயவழுவி கெடுநீதி உரைத்து விடுவானாயின் அந்நியாயமடைந்தோன் தான் அடைந்தக் கேட்டை முநிவரிடத்தேனுந் தேவரிடத்தேனும் அழுது முறையிடுவானாயின் அம்முறைப்பாடு பொய்ச்சான்று கூறியவன் சந்ததியையும், அந்நியாயம் அளித்தவன் சந்ததியையும் விடாமல் வாள்போன்றறுத்துவரும்.

ஆதலின்,

76. பழியாய்வருவதும்மொழியாதொழிவதும்
சுழியாய்வருபுன லிழியா தகல்வதும்
துணையோடல்லது நெடுவழி போகேல்
புணைமீதல்லது நெடும்புன லேகேல்
வழியே யேகுக வழியே மீளுக
இசைகாணுலகிற் கியலாமாறே.

ஒருவர் பழிச்சொல்லை நீதிமொழியால் அகற்றுவதும், சுழலிட்டுவரும் நீரோட்டத்தில் இறங்காது அகல்வதும் யாதொரு துணையுமின்றி நெடுவழிச் செல்லுதலும், யாதாமோர் ஓடத்தின் உதவியின்றி ஆறுகளைக் கடப்பதுங் கூடாது. (ஆதலின்)

சரியானப்பாதையிற் செல்லுவதும், சரியானப்பாதையில் மீளுவதுமே உலகில் வாழும் விவேகிகளுக்கு அழகாகுமென்பது கருத்து.

வெற்றிஞான மூலமுங் கருத்துரையும்

முடிவு பெற்றது

இவ்வெற்றிஞான வாசகந் தோற்றிய காரணம் யாதென்பீரேல், பாண்டியன் வம்மிஷ வரிசையைச்சார்ந்த கிள்ளை வள்ளுவனென்னும் அரசனுடைய மூதாதை சயம்பென்பவன் தனது மாளிகையைவிட்டு வேணுவிஹார அறஹத்துவை தெரிசிக்கப்போகுங்கால் வழியே சென்று வழியே மீளாமல் குறுக்குவழியாக ஓர் நந்தவனத்தினடுவே போகுங்கால் ஓர் சிற்றரசன் புத்திரி சயம்பனென்னு அரசபுத்திரனைக் கண்டு விரகமீறியபோது அவனதற்கிணங்காது வியாரஞ்சென்று மறுபடியும் அவ்வழி வருங்கால் வேவுகர்களால்பிடித்து மந்திரிகளால் சரிவர விசாரியாது தெண்டித்து விட்டபடியால் அவற்றை அம்பிகா தேவிக்குத்தெரிவிக்கவும் அம்மன் இவ் வெற்றிஞானத்தையெழுதி திவாகர சிற்றரசர்களுக்கனுப்ப அவன் மறுபடியும் சங்கதிகளைத் தேற விசாரிணைச்செய்து சயம்பனை விடுவித்து வெற்றி ஞானவாசத்தையும் வேண திரவியத்தையும் மகனுக்களித்து தனது மாளிகைக்கு அனுப்பிவிட்டான் அன்றுமுதல் புத்ததன்மத்தைச் சார்ந்த சமணமுநிவர்கள் யாவரும் முன் வாசகநூற்கள் இரண்டுடன் இவற்றையும் சேர்த்து திரிவாசக மென வழங்கிவந்தார்கள். சத்திய தன்மமாம் புத்ததன்மம் மாறுபட்டு அபுத்ததன்மம் மேற்கொண்டபோது திரிவாசகத்தில் இருவாசகம் ஔவை வாக்கென்றும், ஒருவாசகம் பின்கலை நிகண்டிலில்லா ராமபாண்டியன் வாக்கென்றுங்கூறி வேறுபடுத்தி விட்டார்கள். இதன் சரித்திரத்தை கிறிஸ்து பிறந்த 95 வருஷம் அரசாண்ட கிள்ளை வள்ளுவன் மூதாதை வம்மிஷவாளியிற் காணலாம்.