பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538 / அயோத்திதாசர் சிந்தனைகள்


தேன்பாவணி என்னும் மொழிதிரிந்து தேவபாணியாயிற்றா அன்றேல் தேவபாணி என்னும் மொழியை மாற்றி தேன்பாவனி என்று வரைந்திருக் கின்றனரா என்பதை அவர்கள் கண்டுமிரார்கள் கேட்டுமிரார்கள் என்பது திண்ணம்.

இத்தகைய அறியா குதர்க்கங்களைச் செய்து வீணே மனத்தாங்கலை உண்டுசெய்து வருவார்களாயின் தேவபாணியின் ஆக்கியோன் யாரென்றும், அஃது யாருடைய சரித்திரமென்றும் எக்காலத்தில் அச்சரித்திரத்தை மணிமேகலை மாதவிக்குப் போதித்தாளென்றும் அச்செய்யுளுள் எத்தனைச் செய்யுட்களைக் கூட்டியுங் குறைத்தும் பெயரை மாறுபடுத்தியும் இருக்கின்றார்கள் என்றும், அதன் பிரட்டை சரித்திர ஆதரவுடனும் செய்யுட்களின் ஆதரவுடனும், நமது பத்திரிகையில் வெளியிடக்கார்த்திருக்கின்றோம். இனியடங்காது மீருகிறவர்களை அடக்கும் ஆயுதம் அதுவேயாகும்.

யாப்பருங்கலக்காரிகை - செய்யுளியல்

கூறிய வுருப்பிற் குறைபாடின்றித் | தேறிய விரண்டுந் தேவபாணியுந்
தரவே யொழியினுந் தாழிசையொழியினு / மிருவகை முத்திறத் தெண்ணே நீங்கினு
மொருபோகென்ப வுணர்த்திசினாரே.

3:22, நவம்ப ர் 10, 1909

6. புத்தகம் என்னும் மொழி

வினா : புத்தகமென்னு மொழி பூர்வசாஸ்திரங்களில் ஏதேனும் வரைந்திருக்கின்றார்களா அவற்றை அன்னூற் பெயருடன் விளக்கித் தெளிவிக்கும்படி வேண்டும்,

வீ. பாலக்கிருஷ்ணன், வேலூர்.

விடை. : தாம் வினாவியுள்ளவற்றிற்கு சிறுவயதில் கற்றுத்தேர்ந்த கலை நூற்களே போதுஞ்சான்றாகும். அதாவது, பிடகத்தை விளக்கிய பிடஹறியை சிந்திக்குமிடத்து, புத்தகத்துள்ளுரை மாதே பூவிலமர்ந்தருள் வாழ்வே - என்றும்,

சீவகசிந்தாமணி

அணங்கெனவுரித்த தோலனைய மேனியன்
வணங்குநோன்சிலை யெனவளைந்த யாக்கையன்
பிணங்கு நூன்மார்பினன் பெரிதோர் புத்தக
முணர்ந்துமூப்பெழுதின தொப்பத்தோன்றினான்.

மூவர்தமிழ் - நாலடி நானூறு

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியா
ருய்த்தக மெல்லா நிறைப்பினு - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

3:28, டிசம்ப ர் 22, 1909

7. முச்சங்கங்கள்

வினா : ஐயா நமது தென்னிந்தியாவிலுள்ள மதுரையில் முதற்சங்க மென்றும் நடுச்சங்கமென்றும், கடைச்சங்கமென்றும் மூன்று சங்கங்கள் இருந்தன வென்று கூறுகின்றார்களே அதன் காரணமென்னை. அவ்வகை யாகவே தமிழ்ச் சங்கங்களிருந்திருக்குமாயின் பௌத்த சங்கத்தோர்களாகும் சமணமுநிவர்கள் இயற்றியுள்ள இலக்கிய நூற்களும், இலக்கண நூற்களும், கலை நூற்களும் கணித நூற்களும் இருக்கின்றனவேயன்றி முதற்சங்கம், நடுச் சங்கம், கடைச்சங்கம் என்னும் சங்கத்தோர் இயற்றியுள்ள நூற்கள் யாதோ விளங்கவில்லை .

ப. கோபால், தஞ்சை .

விடை : அன்பரே, தாம் வினவியுள்ள சங்கங்களின் பெயர்களைக் கொண்டே அவைகளிருந்தன என்பதும், இல்லை என்பதும் தாமே உணர்ந்துக் கொள்ளலாம்.