பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 45


இத்தேசத்தில் நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட சாதிக் கட்டிற்கு பயந்து சிலர் மகமதியர்களாகவும், சிலர் கிறிஸ்தவர்களாகவும் சேர்ந்துவிட்டதன்றி மற்றுமுள்ளோர் தங்கள் பூர்வநிலயை உற்றுநோக்காமல் சத்துருக்களை மித்துருக்கள் என்று எண்ணி அன்னியனுக்குப் பெற்றப் பிள்ளையைத் தன்பிள்ளை என்று தாலாட்டுதல்போல அன்னியர் மார்க்கங்களை தங்கள் மார்க்கங்கள் என்றும், அன்னியர் தேவதைகளைத் தங்கள் தேவதைகள் என்றும் கொண்டாடி கஷ்டார்ச்சித சொத்துக்களையும் அழித்து விடுகின்றார்கள். இத்தகைய மயக்கத்தில் ஆழ்ந்துள்ளோரைத் தெளிவடையச் செய்து பூர்வ நிலக்குக் கொண்டுவரவேண்டியது விவேகிகளின் கடனாம்.

- 1:21; நவம்பர் 6, 1907 -


7. தீபாவளி பண்டிகை என்னும் தீபவதி ஸ்னான விவரம்


தற்காலம் ஜப்பான் தேசத்தோர் என வழங்கும் பௌத்தமார்க்கத்தோர் ஆனந்தச் செய்கைகள் யாதெனில், அவர்கள் விவேக விருத்தியில் நூதனமாகக் கண்டுபிடிக்கும் கனிவர்க்கங்களையும், நெய்வர்க்கங்களையும், விருட்ச வர்க்கங்களையும் விருத்தியடையச் செய்து பலன்களை நுகர்ந்துவருங்கால் அப்பொருட்களைக் கண்டுபிடித்தக் காலத்தை வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடவேண்டி வீடுகடோரும் அப்பொருளைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு நூதன ஆடைகளணிந்து பலவகை பதார்த்தங்களை வட்டித்து ஏழைகளுக்குக் அளித்துத் தாங்களும் உண்டு ஆனந்தித்து வருவதை நாளது வரையிலும் காணலாம்.

அதுபோல் இத்தேசத்தில் சத்தியதன்மமாகும் புத்தமார்க்கம் பரவி இருந்த காலத்தில் புத்த சங்கத்தோர் ஒவ்வோர் மடங்களிலும் வீண்காலங்களைப் போக்காமல் ஞான விசாரிணைகாலம் நீங்கலாக மற்றகாலங்களில் விருட்ச குணாகுணங்களையும், கனிவர்க்க குணாகுணங்களையும், நெய்வர்க்க குணாகுணங்களையும், மற்றும் உலோகோபகார கலை நூல் விருத்திகளிலும், தங்கள் தருமத்தைப் பரவச்செய்து அரசர்களுக்குத் தெரிவித்துவருவது வழக்கமாய் இருந்தது. அதுபோல் (எள்) என்னும் ஓர் தானியத்தைக் கண்டு அதிலுள்ள நெய்யை எடுத்து அவுஷத உபயோகத்தில் விடுத்து அடியிற் குறித்துள்ள குணாகுணங்களைக் கண்டுபிடித்து, அக்கால் தென்பரதத்துள் பள்ளி என்னும் நாட்டை அரசாண்டுவந்த பகுவன் என்னும் அரசனுக்குத் தெரிவித்தார்கள்.

பதார்த்த சிந்தாமணி

நேத்திரக் கபால ரோகம் நீங்கிடுஞ் சுரங்கள் மேகங்
காத்திரமான சேத்மம் கறைந்திடு மலத்திரட்சை
மாத்திடுஞ் சோமரோகம் வளரெலும் புருக்கியீளை
சேத்த நல்லெண்ணெ யாலே தேகமுங் காந்தியாமே
.

அவன் அதின் குணாகுணங்களை ஆராய்ச்சிச் செய்து எள்ளை மிக விளைவித்து நெய்யெடுத்து தன் தேசக்குடிகள் யாவரையும் வரவழைத்து எள் நெய்யைக் கொடுத்து சிரசில் தேய்த்துக் கொண்டு அருகிலோடும் தீபவதி என்னும் நதியில் தலைமுழுகச்செய்து மற்றும் அந்நெய்யில் பலகாரங்களும் வட்டித்து புசித்து ஆனந்தங்கொண்ட செய்கையை மாறாமல் வருடந்தோருஞ் சகல குடிகளும் எள்ளின் நெய்யாற் பலகாரம் செய்து தீபவதிந்தியில் தலைமுழுகி புதுவஸ்திரம் அணிந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து (நல் எள் நெய்) நல்லெண்ணெய் கண்டுபிடித்த அற்பிசிமாதச் சதுர்த்தசி நாளை தீபவதி ஸ்னான நாளென வழங்கி வந்தார்கள்.

பெருந்திரட்டு - பாண்டிப் படலம்

பள்ளியம்பதியிலூர்ந்த பகுவனார் கிழவகாலந் தெள்ளிய லுழவிலூறுஞ் சேர்புதல்புஞ்சைவாவி எள்ளகவெண்ணெயாய்ந்த விடயமற்றவர்குறிப்ப வெள்ளியல்மற்றாகார மேற்சிரமகிழ்வென்றாங்கே சிரமுருவெள்நெய்மற்றுத் திரளொடு செந்நெலீய்ந்து கரமுகிலேந்திகங்கைக் கரைதீபவன்நாடித்