பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540 / அயோத்திதாசர் சிந்தனைகள்

னாலும் ஆராய்ச்சி செய்வார்களாயின் பத்தாயிரவருட சங்கத்தின் கணக்குப் பரக்க விளங்கும்.

ஒரு சங்கம் 4,500-வருடம் இருந்ததென்றும் மறுசங்கம் 3,500-வருடம் இருந்ததென்றும், இன்னொரு சங்கம் 2,000 வருடம் இருந்ததென்றும், வரையறுத்து வெளியிட்டுள்ள கணிதத்தின்படி முதற்சங்கம், நடுச்சங்கம், கடைச்சங்கமென்னும் பெயர் தோன்றுமா, கடைச்சங்கமென்னும் பெயரைக் கொடுத்தோர்கள் சங்கத்தோரா, குடிகளா, மதுராபுரியில் இச்சங்கங்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

இஸ்தாபனபீட சிலாசாசனங்கள் ஏதேனுமுண்டா, இல்லை. ஈதன்றி கடைச்சங்கம் ஒன்றிருந்து நசிந்ததென்பதை குடிகள் நன்கறிந்திருப்பார்களாயின், நான்காஞ் சங்கமென்றும் ஒன்று தோன்றுமோ. கடைச்சங்கமாக முடிவு பெற்றதை மூன்றாஞ் சங்கமாகத் தொடரப்போகுமோ. இத்தகையச் செயல்களைக்கொண்டே முச்சங்கங்கள் இருந்ததுண்டா இல்லையா என்பதை தாமே அறிந்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஞான நூற்களில் தோன்றிய முச்சங்கங்கள் யாதென்பீரேல், ஓர் குழந்தை பிறந்தபோது அமுதூட்டி அன்னமளிக்குங்கால் ஓர் கூட்டங்கூடுவது முதற்சங்கமென்னப்படும். இரண்டாவது விவாகத்திற்காகக் கூடுவது நடுச்சங்கம் என்னப்படும். மூன்றாவது இறந்தப்பின் கூடுவது கடைச்சங்கம் என்னப்படும்.

இத்தகையச் செயல்களுக்கும் முதற்சங்கம், நடுச்சங்கம், கடைச்சங்க மென்று கூறுவர்.

பட்டினத்தார்பாடல்

முதற்சங்கமுதூட்டு மொய்குழலார்தம்மெய் / நடுச்சங்க நல்விலங்கு பூட்டுங் - கடைச்சங்க
மாம்போதனவூது மம்மட்டோ விம்மட்டே / நாம்பூமி வாழ்ந்த நலம்.

பத்தாயிர வருட பண்டைகாலச் செய்யுட்களையும், விண்டகாலச் செய்யுட்களையும் விரித்துணரில் வெள்ளென விளங்கும்.

3:32, சனவரி 18, 1910

8. நாயனார் செத்தமாடெடுத்தாரா

வினா : நமது திருவள்ளுவநாயனார் ஆற்றியுள்ள ஞானவெட்டியில் செத்ததோர் மாடெடுப்போமென்று எப்போது கூறியிருக்கின்றாரோ அப்போதே செத்தமாட்டைப் புசித்திருக்கவேண்டுமென்று சிலர் சங்கிக்கின்றார்கள்.

பா. வேணுகோபாலன்.

விடை : அந்நூலின் பெயர் ஞான வெற்றியா அல்லது ஞானவெட்டியா. அந்நூலின் ஆக்கியோன் திருவள்ளுவ சம்பவனாரா அல்லது திருவள்ளுவ நாயனாரா, அந்நூற்றொகை ஆயிரத்திஐநூறா, ஆயிரத்தி எண்ணூற்றித் தொண்ணிற்றொன்பதா வென்பதை தேற விசாரித்தவிடத்துத் தெள்ளென விளங்கும்.

இஞ்ஞானவெற்றியை அச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்தவர்கள் பராயசாதியோரும், பராய மதஸ்தர்களுமாதலின் தங்கள் மனம்போனவாறு செத்ததோர் மாடெடுப்போமென்றும், கட்டையும் அடுக்கிக் கொள்ளுவோமென்றும் குறள் செய்த காலத்தில் என்றும் பலமதங்களை கண்டித்தும் நூதனப் பாடல்களை அனந்தமாக அதில் நுழைத்தும் விட்டார்கள்.

சாம்பவனார் தான் பாடியுள்ள நொண்டி சிந்தினுள் தன்னுடைய பௌத்ததன்ம ஞானத்தின் சிறப்பையும், விருதிகளின் வல்லபத்தையும் விளக்கி வந்தவர் செத்ததோர் மாடெடுப்போமென்றும், கட்டையை அடுக்கிக் கொள்ளுவோமென்றுங் கூறுவரோ.

வள்ளுவர்களென்று கூறப்படுவோர் அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்மகுருக்களென்று முன்கலை திவாகரத்திலும், பின்கலை நிகண்டிலும் தெளிவாகக் கூறியிருக்க வள்ளுவ வம்மிஷ வரிசையோர் செத்தமாடெடுப்போமென்று கூறியுள்ளது அபுத்தர்களின் புரட்டுச் செய்யுளேயாம்.