பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 547

இருவருங் கருணைகூர்ந்து தென்னிந்தியாவில் சாதுசங்கங்களை நாட்டி சமண முநிவர்களைக் கூட்டிப் பூர்வ பள்ளிகளைப் புதுப்பிப்பரேல் அருங்கலை நீதியும், பெருங்கலை ஞானமும் தமிழ் பாஷையிற் பரவி உலகெங்கும் அதின்மணம் வீசவும், அழிந்த சங்கங்களுக்கு உயிர்பிச்சை அளித்து ஆதரித்தவர்கள் இருமன்னர்களே எனப் பேசவும் ஏதுவுண்டாம். அத்தகைய ஏதுவைக்கொண்டே சாதுசங்க ஞானதந்தைகளும் இவ்விருவர்களேயாவர். இவ்விரு ஞானதந்தையர்களும் இத்தென்னிந்தியாவில் சாதுசங்கங்களை நாட்டி சமணமுநிவர்களைக் கூட்டிவிடுவரேல் மெய்யறம் ஓங்கி, கலைவல்ல கவிராயர்களுந் தோன்றுவார்கள்.

அத்தகையக் கவிவல்லோர் வெளிவருவரேல் மங்கலமொழி அறியாது மங்களம் பாடும் கவிராயர்களும் கருமாதிகளுக்குக் கவிபாடிக் கட்டியழுங் கவிராயர்களும் சற்று நிதானித்துப்பாடும் நிலைநிற்பார்கள். தாங்கள் கற்றதினளவேனின்று சங்கபோதனைகளில் அணுகுவரேல் தம்குல வித்துவர்களைத் தாங்களே தூஷித்து அன்னோர் சிறப்பைக் கெடுப்பதன்றி தங்கள் சிறப்பையுங் கெடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஒருவருக்கொருவர் தூஷித்தலால் உண்டாகும் விரோத பலன்களையும், பூஷித்தலா லுண்டாகும் அவிரோத பலன்களையும் அவரவர்களே ஆராய்ந்தறிந்து கொள்ளுவார்கள்.

சாது சங்கத்தோரை அணுகி சகல கலைகளும் கற்றடங்காது வித்துவகலை ஒன்றை மட்டும் கற்று வித்துவான்களுக்கு வித்துவான்கள் கல்லாதவர்களைப் போல் கலகத்தைப் பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.

கற்றவர்களே கல்லாதவர்களைப்போல் கலகஞ்செய்துக்கொள்ளுவர்களாயின் இவர்களது கலகத்தை நீக்கி அன்பு பெருகச்செய்வோர்கள் யார்? பொற்பிளவோடு ஒப்பார் பெரியோரென்றும், கற்பிளவோடு ஒப்பார் கயவரென்றும் மேலோர்கள் வகுத்திருக்க வித்துவகலை கற்றும் கயவரென்னும் பேர் பெறலாமோ. புவிராயரென்பதிலும் கவிராயனெனும் பெயரழியாப் பெயராதலின் அவற்றை விரோதச்சிந்தையால் அழித்து வீணே கெடுக்கா திருத்தலே அழகாகும்.

பூர்வக் கவிராயர்களைக் கண்டவுடன் வணங்கி அவர்களுக்கு வேணப் பொருளளித்து வந்தது வழக்கமாகும். காரணமோவென்னில், நீதி கலையுணர்ந்து நான்கு கவிபாடுந் திறமும், மங்கலமொழி கண்டு நஞ்செழுத்தகற்றி அமுதவெழுத்தூன்றி பாடும் உரமும் உணர்ந்துவந்தவர்களாதலின் அமுதவெழுத்தின் ஆனந்தங் கண்டளித்து வந்தார்கள்.

நஞ்செழுத்துளதால் திராவிடமென்றும், அமுதெழுத்துளதால் தமிழென்றும் பெயர் பெற்ற பாஷையின் வித்துவான்களென வெளிவந்தும் அவ்வட்சர பலன்களை உணராது பாடி பாடற்குரியோனையுங் கெடுத்து பாடிய தானுங்கெட்டு பயனற்று திரிகின்றார்கள். அவ்வகைத் திரிந்துள்ள வித்துவான்களில் ஒருவர் பாடியுள்ளப் பாடலைப் பாருங்கள்.

கல்லைத்தான் மண்ணைத்தான் காச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா
அல்லத்தான் பின்னைத்தான் யாரைத்தான் னோவத்தான் ஐயோ விங்கு
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றான் பண்ணினானே.

என்று பாடியிருக்குங் காரணம் தான் படித்துந் தன்னைப் போஷித்துக்கொள்ளப்படியாததாலும், தெய்வத்தாலாகாது முயற்சி மெய் வருந்த கூலிதருமென முயலாததாலும் இத்தகையப் பாட்டைப்பாட நேர்ந்தது.

மநுக்கள் எவ்வித்தையில் முயலினும் அவ்வித்தையைச் செவ்வைப்பெற கற்றலே பயன் தரும். அங்ஙனஞ் செவ்விதிற் கல்லாததால் சீரழிக்குமென்பதே திண்ணம். ஆதலின் தற்காலந் தமிழினை வளர்க்கும் தாதாக்கள் இருவருங் கருணைபாலித்து சாதுசங்கத்தை நாட்டிசமணமுநிவர்களைக்கூட்டிவிடுவரேல் கவிராயர்கட் சிறப்பு அவியாது பிரகாசிக்குமென்பதாம்.

4:21, நவம்ப ர் 2, 1910