பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 549


மற்றும் முன்போன்ற தமிழ்மணமும் அதன் சிறப்பும் பெருக வேண்டுமாயின் அதனை ஈன்றவர்களும் வளர்த்தவர்களுமாகிய பௌத்த சங்கசமணமுநிவர்களே பின்னும் தோற்றுவார்களாயின் அன்றே தமிழ்மணமும் வீசுவதுடன் அதன் சிறப்பும் பெருக்கமுறுமென்பதற்கு ஆட்சேபமில்லை.

4:24, நவம்பர் 23, 1910

16. திராவிடமும் தமிழும்

வினா : ஐயா தமது பத்திரிகையில் திராவிடம் என்பது தமிழுக்குரியப் பெயரென்று வரைந்து வருகின்றீர். மற்றும் சிலர் திராவிடம் என்பது திரமிடமென்றும் நான்கு பாஷைகளைச் சேர்ந்தப் பொதுப்பெயரென்றுங் கூறுகின்றார்கள்.

வீ. கோவிந்துசாமி, மயிலை

விடை : அதாவது, திராவிடமென்னும் மொழியின் பொருளென்ன. திராவிடமென்னும் மொழி திரமிடமென எவ்வாறு மறுவியது. அதற்கு விதியும் பூர்வ அநுபவச் செய்யுளும் உண்டாவென உசாவியிருப்பீரேல் அவர்கள் கூறும் மொழி தங்களுக்குத் தெள்ளறத் தெளிந்துவிடும். அங்ஙனம் அவர்களைத் தாம் வினவாது எம்மெய் வினவியுள்ளபடியால் அதனந்தரார்த்தத்தை உணர்ந்தவளவில் உணர்த்துகின்றேன்.

அதாவது, தென்மொழியிலுள்ள அமுதவெழுத்திற்கு தமிழென்றும், நஞ்செழுத்தாம் விடவெழுத்திற்குத் திராவிடமென்றும் வகுத்துள்ள அநுபவத்தைக்கொண்டும் சிங்கள நாட்டாரும், தெலுங்கு நாட்டாரும், தமிழர்களைத் திராவிடர்களென்று கூறும் வாய்மொழியாலும், அடியிற் குறித்துள்ள தாயுமானவர் பாடலின் உட்கருத்தாலும் தமிழ்பாஷைக்கே திராவிடமென்னும் மறுபெயர் உண்டென்பதை எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.

தாயுமானவர் பாடல்

கல்லாதபேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்று மறிவில்லாதவென்
கன்மத்தையென்சொல்வேன் மதியையென் சொல்லுவேன் கைவல்லிய

ஞானநீதி

நல்லோருரைக்கிலோகன்மமுக்கியமென்று நாட்டுவேன் கன்மமொருவர்
நாட்டினாலோபழய ஞானமுக்கியமென்று நவிலுவேன் வடமொழியிலே
வல்லானொருத்தன் வரவுந்திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்
வல்லதமிழறிஞர்வரி னங்கனேவடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன்

எனும் பாடலால் திராவிடத்தையே தமிழென்றும், தமிழையே திராவிடமென்றும் மடக்கிக் கூறியுள்ளதைக் காண்க.

4:26, டிசம்ப ர் 7, 1910

17. மை எனும் மகர ஐகாரமும் மெய் எனும் மகர ஏகாரமும்

யகரவொற்றுங்கூடி வரக்கூடிய மொழிபேதங்களின் அந்தரார்த்தங்கள் யாவும் புத்தன்மத்தைத் தழுவிய சமணமுநிவர்களுக்கும், பௌத்த வித்வான் களுக்கும் விளங்குமேயன்றி ஏனைய மதசார்பினர்களுக்கு விளங்கமாட்டாது.

காரணமோவென்னில், ஏனைய மதத்தோர் யாவரும் தங்களுக்கு அப்புறப்பட்ட ஓர் பொருளுண்டென்றும், அதைக்கொண்டே தாங்கள் சுகம்பெறவேண்டுமென்றுங் கூறுவார்கள்.

பௌத்தர்களோ அங்ஙனமன்று. உடலுயிர் பெற்ற தங்களுக்குள்ளாகவே சகல துக்கமும் சகல சுகமும் உண்டென்றும் தங்களைக்கொண்டே தங்களை சீர்திருத்திக்கொள்ளல் வேண்டுமென்றும் சகல துக்கத்திற்கும் ஆதாரந் தாங்களே, சகல சுகத்திற்கும் ஆதாரந்தாங்களேயன்றி தங்களுக்கு அப்புறப்பட்டப் பொருள் வேறில்லையென்று உணர்ந்து பொய்யை அகற்றி மெய்யைக் கண்டடைய வேண்டிய செயலில் விளங்குவார்கள்.

ஆதிபகவனாகிய புத்தபிரான் அத்தகைய மெய்யைக்கண்டே நித்தியானந்த பரிநிருவாணம் பெற்றார். தன்னிற்றானே தெளிந்து பூரணதிசை