பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

558 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஆக்றாணம், வித்துவேஷம், பேதனம், மாரணம் என்னும் சித்துக்களை (ந-ம-சி-வ-ய) (ச-ற-ஹ-ண-ப-வ) என்னு மட்சரத்தை மாறுதல் செய்து அனேக சித்துக்கள் செய்ததாகவும் அதையே தற்போது சிலர் கையாண்டு வருவதாகவும் காண்கிறோம். இதன் இரகசியம் எனக்கு விளங்கவில்லை .

வி. எல்லையா சுபேதார், பெங்களூர்

விடை : யாதார்த்த பிராமணர்களாம் தென்புலத்தோர்களும் சத்தியசங்கங்களும் இத்தேசத்தில் பரவியிருக்குமளவும் சித்தின் ரகசியங்களும் ஞானரகசியங்களும் சுயம்பாகவே விளங்கி வந்தன. சத்திய சங்கங்கள் மாறுதலுற்று அசத்திய சங்கங்கள் பெருகியும், யதார்த்த பிராமணர் மறைந்து வேஷபிராமணர்கள் பெருகியும் விட்டபடியால் அவர்களுக்கு வேதம் இன்னதென்றும், வேத அந்தம் இன்னதென்றும், சித்து இன்னதென்றும், சித்தின் அந்தம் இன்னதென்றும், பிராம்மணம் இன்னதென்றும், பிராமணாள் இன்னாரென்றும், புலன் தென்பட்டோர் இன்னாரென்றும், தென்புலத்தோர் இன்னாரென்றும், ஞானமின்னதென்றும், ஞானிகளின்னாரென்றும், இருடி நிலையின்னதென்றும், இருடிகளின்னாரென்றும், பார்ப்பது இன்னதென்றும், பார்ப்போரின்னார் என்றும், திரிகாயமந்திர மீதென்றும், காயத்திரிமந்திர மின்னதென்றும், நயன மீதென்றும், உபநயனமின்னதென்றும், கிரமம் சாலதின்னதென்றும், சாலக் கிரமமீதென்றும், மந்திரமீதென்றும் மந்திரவாதிகளிவரென்றும், மந்திரீகளின்னா ரென்றும், அதனதனந்தரார்த்த மறியாது பிராமணவேடமிட்டு பொய்யாலும் மித்திரபேதத்தாலும் வயிறு வளர்க்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அதன் பெயர்களைமட்டிலும் நாவில் வழங்கி அதனுட்பொருளறியாப் பெருங்கூட்டத்தோர் அவர்கட் பொய்ப்போதங்கள் யாவையும் மெய்ப் போதங்களென் றெண்ணிவந்தகாலத்தில் இருடிகளுக்கு மனைவிகள் அருகிலேயே யிருந்தார்களென்றும் அவர்களைப்போலவே பிராமணர்களாகிய யாங்களும் பெண்டுபிள்ளைகளுடன் இருக்கின்றோமென்றும் பகட்டிக்கொண்டு வேதமுநி சூதமுனி யூகமுநி என்னும் பொய்ப் பெயர்களைக் கொண்டு மனம்போனக் கட்டுக்கதைகளை எழுதியும் கூறியும் வந்ததன்றி பௌத்தன்மதத்தைச் சார்ந்த அகஸ்தியர் வஸிஷ்டர் முதலானவர்கள் வெவ்வேறு தங்களுக்கொத்த நூற்களைச் சொன்னதாகவும் வரைந்து பேதை மக்களை வஞ்சித்துவந்த பொய் நூற்கள் மிகப்படப் பெருகிவிட்டபடியால் கியானசித்துக்க ளீதீதென்றும் கருவிசித்துக்க ளீதீதென்றும் விளங்காது திகைத்திருக்கின்றார்கள்.

கியானசித்துக்களானது பௌத்த வியாரங்களில் தங்கியிருந்த சமண முனிவர்களில் சித்திப் பெற்றோர் நீருள் நீராகவும், மன்ணுள் மண்ணாகவும், நெருப்புள் நெருப்பாகவுங் கலக்கக்கூடிய கியான சித்துக்கள் எண்பத்தினாலும் செய்துவந்தார்கள். அவர்களை சாரணர்களென்றுங் கூறப்படும். அவர்களடைந்துள்ள நற்கதியைத் தாங்களும் அடையவேண்டியே சாரணர்கதியை விரும்பி இருகைகூப்பி சரணாகதி வேண்டுவதையே தற்காலம் அதன் அந்தரார்த்தம் அறியாது சரணம் சரணமெனக் கை கூப்புவதை தாசனமென்றும், நமஸ்காரமென்றும் பொருளற்ற மொழிகளை வழங்கி வருகின்றார்கள்.

பின்கலை நிகண்டு

நீரினிற் பூவில் வானில் நினைந்துழி யொதுங்குகின்ற
சாரண ரெண்மராவர் சமணரிற் சித்திபெற்றோர்.

மணிமேகலை

நிலத்திற் குழித்து நெடும்விசும்பேறி
சலத்திற்றிரியுமோர் சாரணன்றோன்ற.

புத்தபிரான் ஓதிய நுண்ணிய ஞானசாதனத்தின் உறுதியால் இயல்பாகவே சித்துக்கள் தோன்றிய விவரத்தை புத்தசங்க வடியார்கள் பாடிய பாடலாலுங் காணலாம்.