பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 559

வீரசோழியம்

எண்பத்திநான்குசித்தும் இயல்பினாலுளவென்று
பண்பொத்த நுண்பொருளை பாரறிய பகர்ந்தனையே.

காலம்நேர்ந்தபோது உடனுக்குடன் அச்செயலையொட்டி இயற்கையில் நடவாததை இயல்பில் நடாத்துவதே கியானசித்துக்களென்னப்படும் இவைகள் பௌத்தர்கள் காலத்தில் நிறைவேறிவந்ததேயன்றி வேறில்லை. இத்தகைய கியானசித்திப்பெறாது வைத்திய சாதனமாம், ஓடதி விசாரணையிலிருந்தவர்கள். மூலிகைகளைக் கொண்டும், உபாசங்களைக்கொண்டும், இரச பாஷாணங்களை கொண்டும், கருவிசித்துக்களும் விளையாடிக்கொண்டுவந்தவர்களும், பௌத்த சங்கத்தோர்களேயாம். கருவிசித்துக்களாவது நரியை பரியாக்குவதும், பரியை நரியாக்குவதும், சிறுகல்லை மலையாக்குவதும், மலையை சிறுகல்லாக்குவதும், ஆணை பெண்ணாக்குவதும், பெண்ணை ஆணாக்குவதும், இரும்பை பொன்னாக்குவதும் பொன்னை இரும்பாக்குவதும் கூடுவிட்டுக் கூடு பாய்வதும், மநுக்களுக்குத் தெரியாது மறைவதும் ,வீட்டிலிட்டு பூட்டினால் வெளிவந்துலாவுவதுமாகச் செய்துகாட்டுவதேயாம் இவைகள் யாவையும் சமணமுனிவர்காள் இயற்றியுள்ள அறுபத்துநாலு கலைக்கியானங்களால் தெரிந்துக்கொள்ளலாம்.

6:32, ஜனவரி 15, 1913

24. அறுபத்திநாலு கலைகள்

வினா: அண்ணலே, அறுபத்துநாலு கலைக்கியானங்கள் ஆரியரா லியற்றாததுமாய் சமணமுநிவர்களால் எழுதியதாயுமிருக்கும் புத்தக நாமதேயங்களைக் கேழ்க்க மிக்க பிரியரில் ஒருவன்.

முருகன், மழலை

விடை: அறுபத்தினாலு கலைக்கியானங்களாவது. 1. அட்சரலட்சணம், 2. இலிகிதம், 3. கணிதம், 4. பராணம், 5. வியாகரணம், 6. நீதிசாஸ்திரம், 7. சோதிடம், 8. தன்மசாஸ்திரம், 9. யோகசாஸ்திரம், 10. மந்திரசாஸ்திரம், 11. சகுனசாஸ்திரம், 12. சிற்ப சாஸ்திரம், 13. வைத்திய சாஸ்திரம், 14. சாமுத்திரிகா சாஸ்திரம், 15. ரூபசாஸ்திரம், 16. இதிகாசம், 17. காவியம், 18. அலங்காரம், 19. மதுப டணம், 20. நாடகம், 21. நிருத்தம், 22. சப்தப்பிரமம், 23. சிலம்ப சாஸ்திரம், 24. வேணுவாத்தியம், 25. மிருதங்க வாத்தியம், 26. தாளவாத்தியம், 27. தனுர் வித்தை , 28. சுவர்ணபரிட்சை , 29. ரதபரிட்சை , 30. கஜபரிட்சை , 31. அசுவ பரிட்சை , 32. இரத்தினபரிட்சை , 33. பூபரிட்சை , 34. யுத்தலட்சணம், 35. மல்லயுத்தம், 36. ஆக்ரூஷ்ணம், 37. உச்சாடனம், 38. வித்துவேஷணம், 39. மதனசாஸ்திரம், 40. மோகனம், 41. வசீகரணம், 42. ரசவாதம், 43. காந்தர்வவாதம், 44. பிபீலிவாதம், 45. கௌத்துவவாதம், 46. தாதுவாதம், 47. காரூடம், 48. நஷ்டப்பிரசனம், 49. முட்டிப்பிரசனம், 50. ஆகாசப் பிரவேசம், 51. ஆகாசகமனம், 52. பரகாயப்பிரவேசம், 53. அதுர்ஷியம், 54. இந்திரஜாலம், 55. மகேந்திரஜாலம், 56. அக்கினிஸ்தம்பம், 57. ஜலஸ்தம்பம், 58. வாயு ஸ்தம்பம், 59. திருஷ்டிஸ்தம்பம், 60. வாக்குஸ்தம்பம், 61. சுக்கிலஸ்தம்பம், 62. ஜனஸ்தம்பம், 63. கடகஸ்தம்பம், 64. அவஸ்தைப் பிரயோகம்.

என்னும் இன்னூற்கள் யாவும் மக்கள் அறிவு பிறைபோல் வளர்ந்து பூரணமடைவதற்கே வரைந்திருந்ததால் இவற்றிற்கு கலை நூற்கள் என்றும், கலைக்கியானங்கள் என்றும் பெயர்கள் அளித்திருந்தார்கள். கலையென்பது சந்திரனுக்கோர்பெயர், அச்சந்திரகலை நாளுக்குநாள் வளர்ந்து பௌர்ணமி யென்னும் பூரணப்பிரகாசமுற்று உலக ஒளியாவதுபோல மக்களும் இன்னூற்களில் கியானத்தை செலுத்தி தேக தத்துவங்களையும் மனோதத்துவங்களையும் உலகப் பொருட்களாம் ஓடதிகளின் தத்துவங்களையும் நன்காராய்ந்து சில சித்துக்களையாடி தாங்கள் கற்றவித்தைகளின் சிறப்பை உலகமக்களுக்கும் விளக்கி உள்ளக்களங்கமகற்றி உண்மெய்யுணர்ந்து நிருவாணமாம் பூரண சுகமடைவார்கள்.