பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 47

வைத்தல் இவற்றையே திரி நோன்புகள் என்றும் கூறப்படும். அம்பிகாதன்மத்தின் நோன்புநிலைகளையும், விரதநிலைகளையுங் காண்க. - 1:22; நவம்பர் 13, 1907 –

8. கார்த்திகை தீபமென வழங்கும் கார்த்துல தீப விவரம்

நெடுங்காலங்களுக்குமுன் மலாடபுரம் என்னும் ஊரில் புத்ததன்மத்தை தழுவினின்ற சங்கத்தார் பேராமணக்கு சித்தாமணக்கென்னும் வித்துக்களிலிருந்து நெய்யெடுத்து மருந்துகளுடன் உபயோகித்து அதன் நற்பலன்களை அறிந்ததுமன்றி தீபம் ஏற்றி குளிர்ந்த பிரகாசத்தையுங் கண்டு ஆனந்தித்து அத்தேசத்தை ஆண்டுவந்த அரசனிடம் கொண்டுபோய்க் காண்பித்தார்கள். (அரசன் பெயர் விளங்கவில்லை .)

பதார்த்தசிந்தாமணி

உண்டாலுதிரப்பலநோயும் ஒடுங்கிருமிகுடல்வாதம்
கண்டே சுவைக்கில் விளக்கெண்ணெய் கண்ணேகுளிருங் குணந்தேறுங்
கொண்டால் கிரந்தி சூலையுடன் கொடிய கரப்பான் பலமேகம்
விண்டார்தோஷ கணமாந்த மகலுஞ் சித்தா மணக்கெண்ணெய்.

அவ்வரசன் பேராமணக்கையும் சித்தாமணக்கையும் அதிகமாக விளைவிக்கச்செய்து அவன் தேசத்துள் இருந்த அண்ணாந்து மலையினுச்சியில் வெட்டிப் பள்ளமிட்டு பருத்தி நூல் திரிசெய்து ஆமணக்கு நெய்யை வார்த்து பெருந்தீபம் ஏற்றி விடியும் அளவு எறியவிட்டு உதயத்திற் சென்று அவ்விடமுள்ள பட்சிகளுக்கும் ஆடு மாடுகளுக்கும் அத்தீபப் புகையால் ஏதேனும் தீங்கு நேரிட்டுள்ளதோ என்று ஆராயுங்கால் அவ்விடம் உலாவும் பட்சிகளுக்கும் மிருகங்களுக்கும் யாதோர் தீங்கில்லாததைக் கண்டதுமன்றி அத்தீபக்காவலிலிருந்த மக்களுக்கும் ஓர் கெடுதி வராதிருந்ததினால் அரசன் குடிகள் யாவரையுந் தருவித்து ஆமணக்கு நெய்யைக் கொடுத்து தீபம் ஏற்றிக் கொள்ளும்படி ஆக்கியாபித்தான்.

இத்தீபச் சுடரை எக்காலும் காணாதக் குடிகளாதலின் தீபத்தை ஏற்றி வீட்டில் வைக்க பயந்து மூன்று நாள் வரையில் திண்ணைகளின் மீதும், தெரு மாடங்களிலும் வைத்து ஒரு தீங்குங் காணாததினால் வீட்டுக்குள் வைத்து அத்தீபம் இருளை விலக்கும் ஒளியாக விளங்கினபடியால் (கார்த்துலதீப) என்னும் பெயரை அளித்து புத்தசங்கத்தோர் கண்டுபிடித்த கார்த்திகைமாத பௌர்ணமியில் தேசம் எங்கும் தீபம் வெளியிட்டு பண்டை யீகை அளித்து பகவ தியானஞ் செய்துவந்தார்கள்.

இவ்வகை நெடுங்காலம் வருடத்திற்கு ஒரு முறை நிறைவேறிவரும் கார்த்துல தீபவெளி பண்டகையும் புத்தத் தியானத்தையுங் கண்ட சையோயாங்கென்னும் சீனதேச யாத்திரைக்காரன் ஆனந்தமுற்று தன் தேசஞ் சென்று வருடந்தோருங் கார்த்திகைமாதப் பௌர்ணமிக்குள் அவர்கள் தேசக் கொடிகளும் டப்பாசுகளும் பாணங்களும் அனுப்பி கார்த்துல தீப நாளைக் குதூகலிக்கச் செய்ததாக சை யோயாயாங் யாத்திரை சரித்திரமும் விளக்குகின்றது.

பெருந்திரட்டு - பாசமாட்சி

காராமணக்கைக் கருதிக் கரைந்தங்கு / பேராமணக்கைப் பெற்றார்கள் - ஊரா
ருளப்பருத்தி நெய்யூ மீர்ந்தார் பெருவங் / களம்பார்த்த தீபக்கழல்.

புரிமலாடதுபதிந்த பொற்றவசங்கத்தோர்கள்
கரதவாமணக்கு நெய்யை தூய மன்னவன்பாற் கொண்டு
பரத வெல்லை அண்ணாந்து பதிசிரம்பதித்து தீப
மொருதீங்கு மேறாதலே யூரவரகத்தி லேற்றார்.

- 1:22; நவம்ப ர் 13, 1907 –

எள்ளிநெய் கண்டுபிடித்த விஷயத்திற்கும் ஆமணக்கு நெய் கண்டுபிடித்த விஷயத்திற்கும் இவ்வகை ஆடம்பரங்கள் செய்யவேண்டியக் காரணங்கள் யாதென்பீரேல், உலோகோபகாரமாக கண்டுபிடித்த வஸ்துக்கள் எவையோ அவைகளைக் கொண்டாடி வருவதினால் மற்றவர்களுந் தங்களறிவை விருத்திச் செய்து உலோகோபகார வஸ்துக்களைக் கண்டுபிடித்து தேசத்தையுங் குடிகளையுஞ் சீர் பெறச் செய்வார்கள் என்பதேயாம்.