பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

560 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இத்தகைய அரிய நூற்களெல்லாம் சத்துருக்களால் அழிந்து சிதலுண்டும் புத்த வியாரங்களிற் புதைவுண்டுந் துஞ்சியதுபோக எஞ்சியுள்ள ஒவ்வோர் நூற்கள் சிலரிடங்கிடைத்து சொற்பசித்துக்களை விளையாடிவருகின்றார்கள். மற்றும் ஆரியரென்னும் மிலேச்சர்களுக்கும் இன்னூற்களுக்கும் யாதொரு சம்மந்தமுங்கிடையாது.

மந்திரசாஸ்திரமென்பது முன்பின் ஆலோசித்துச் செய்யும் விதிகளை விளக்கும் நூலினது பெயர். அம்மந்திர நூலைக் கற்று விதிவிலக்குகளை காலமறிந்து கூறும் சமணமுநிவர்கள் கூட்டத்திற்கு சமயகணக்கரென்றும் மந்திரவாதிகளென்றுங் கூறப்படும். மற்றும் அரசர்களினருகிலிருந்து அவ்வாலோசினையாம் மந்திரத்தைப் போதிப்போருக்கு மந்திரிகள் என்று பெயர்.

மற்றப்படியோர் வார்த்தையை மடக்கி மடக்கிக் கிளிப்பிள்ளையைப் போல் சொல்லித்திரிவதற்கு மந்திரமென்னுமொழி பொருந்தாவாம்.

நமசிவய வென்னு மொழி தோன்றியகாரணம் யாதென்பீரேல், ஓர் ஞானாசிரியரை அடுத்திருந்த ஓர் மாணாக்கன் குரு பரிநிருவாணம் அடையுங்கால் சென்று வணங்கி சுருக்கத்தில் ஞானநிலை அடையும் வழியை அருளவேண்டுமென்றடி பணிந்தான். குரு பெரு மௌனமுற்றிருந்தபடியால் ஓலை எழுத்தாணியெடுத்து “மனசிவய” வென்றெழுதிக்கொடுத்து அடங்கி விட்டார். அதன்கருத்தோ மனதைவயப்படுத்திக் கொள்ளென்பதேயாம். அதன் கருத்தறியாது அண்டைவீட்டுப் பெரியோனை அடுத்து என் குரு சமாதியடையுங்கால் இதை எழுதிக்கொடுத்தாரென்று கூறியபோது அவரும் அதனுட்கருத்தறியாது “மநசிவய” வென்பதை மாறிமாறி மநசிவய சிவயநம, யநமசிவ, மசிவயன, வயநமசி என நடுவெழுத்தை மாறி ஜெபிப்பதாயின் சகலசித்தியுமுண்டாமென்றுகூற அதற்கே மந்திரமென்னும் பெயரையளித்து அதனை மனவுறுதியுடன் உருப்போடுவதில் சிலது சித்தியாக அதையே பெருமந்திரமென்றெண்ணி ஜெபிக்க ஆரம்பித்துக்கொண்டதுமன்றி வைத்திய நூற்களிலும் நுழைத்துவிட்டு பஞ்சாட்சரமந்திரம், அகஸ்தியர் சொன்னார், போகர் சொன்னார், புலிபாணி சொன்னார், கருவூரார் சொன்னாரென சிறப்பித்துவிட்டார்கள். மநசிவயமென்னு மொழிக்கும் நமசிவயவென்னும் மொழிக்கும் பொருள் பொருந்தவே பொருந்தாவாம்.

சரவணபவ என்பது கூட்டுமொழியேயாம் அதாவது சரவணப்பள்ளி யென்பதும், சரவணப்பொய்கை யென்பதும் பௌத்தர்கள் வியாரத்தைச் சார்ந்த ஓர் பெயராம். அவ்வியாரத்திலேயே முருகனென்றும் கந்தனென்றும் பெயர்பெற்ற குறிஞ்சிநாட்டரசன் சமணநிலை சார்ந்தயிடம், இச்சரித்திரத்தை சிறு குறவஞ்சியிலும் சிலப்பதிகாரத்திலுங் காணலாம். அச்சரவணவென்னு மொழியுடன் “பவ" வென்னுந் தொடர் மொழியை சேர்த்துக்கொண்டு சரவணபவவென்னும் பொருளற்றதும் பயனற்றதுமாய மொழியை வழங்கி அதற்கும் சடாட்சரமந்திரமென்று வழங்கிவருகின்றார்கள். இம்மந்திரங்களால் மாங்காய் விழாது, தன் திறங்களால் மாங்காய் விழுமென்பது திண்ணமாதலின் சோம்பேறிச்சங்கதிகளை ஏற்றுக்கொண்டு தாமும் சோம்பேறியாகாது வித்தையில் முயலுவீரென்று நம்புகிறேன்.

6:33, ஜனவரி 22, 1913

25. நமது கருணைதங்கிய கவர்ன்மென்றார் தமிழ் பாஷையை
விருத்தி செய்யவேண்டுமென்னும் நன்னோக்கத்தால்
இலட்சரூபாய் செலவிட்டு பலப்பெயர் விளங்கத்தக்க ஓர்
நிகண்டு வெளியிடுவதாகக் கேள்வியுற்று ஆனந்தமடைந்தோம்

அதாவது தமிழ்பாஷையில் வழங்கிவரும் பலப் பொருட்களின் பெயர்களையும் விளங்கவைக்கவேண்டுமென்பதே அவர்களது கருத்தாகும். அத்தகையக் கருத்தை இந்தியதேசத் தமிழ் வித்துவான்கள் ஒவ்வொருவரும் சிரமேற்றுக் கருதலானப் பெயர்களின் பொருட்களை விதிப்படி விளக்கி செவ்வனே உதவுதல் உசிதமாம்.