பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 561

அத்தகைய வித்துவான்களையுங் கருணைதங்கிய கவர்ன்மென்றார் தெரிந்தெடுத்து பல்பெயர் பொருட்களின் உதவி கொண்டு அந்நிகண்டினை அச்சிடுவதும் அழகாம்.

ஏனென்பரேல் தற்காலந் தமிழில் வழங்கும் பல்பொருள் விளக்கும் நூலுக்கு 'அகராதி' எனும் பெயரையளித்துள்ளார்கள். அம்முகப்பெயர் பிழையேயாம். எங்ஙனமெனில், அகரவட்சரத்தை ஆதியாக்கொண்டுள்ள நூற்களுக்கே அகராதியென்னும் பெயர்பொருந்துமேயன்றி பல்பெயர் பொருளை விளைக்கும் நூலுக்கு அப்பெயர் பொருந்தாவாம். இந்நூல் அகரவட்சரத்தை ஆதியாகக்கொண்டுள்ள நூலாதலின் அகராதியென்றோம் என்பாராயின் அறிச்சுவடியும் அகரத்தை ஆதியாகக் கொண்டுளது. ஆத்திச்சுவடி என்னும் முதல்வாசகமும் அகரத்தை ஆதியாகக்கொண்டுளது. குன்றை வேந்தனென்னும் இரண்டாம் வாசகமும் அகரத்தை ஆதியாகக்கொண்டுளது. திருவள்ளுவநாயனார் இயற்றியுள்ளத் திரிக்குறளும் அகரத்தையாதியாக் கொண்டுள்ளது. தாயுமானவர் பாடலும் அகரத்தை ஆதியாகக்கொண்டுளது. ஆதலின் இவைகள் யாவையும் அகராதியென்னலாமோ ஆகாவாம். பாலி பாஷையில் பல்பெயர் பொருளை விளங்கக்கூறும் நூலுக்கு பாலி நிகண்டென்றும், வடமொழியில் பல்பெயர் பொருளை விளங்கக்கூறும் நூலுக்கு வடமொழி நிகண்டென்றும் தென்மொழியில் பல்பெயர் பொருளை விளங்கக் கூறும் நூலுக்கு தென்மொழி நிகண்டென்றே கூறல்வேண்டும். இதற்குப் பகரமாக ஆதியில் சமணமுநிவர்களில் ஒருவர் தமிழ்மொழியின் பல்பெயர் பொருளை விளங்கக்கூறி அந்நூலுக்கு சேந்தன் திவாகாரமெனத் தன்பெயரையே கொடுத்துவிட்டார். அதன்பின் தோன்றிய சமணமுநி மண்டலபுருடன் என்பவர் திவாகரரால் வாசக சூத்திரமாக வரைந்திருந்த தெய்வப் பெயர் தொகுதி, மக்கட் பெயர் தொதி, விலங்கின்பெயர் தொகுதி, மரப்பெயர் தொகுதி, இடப் பெயர் தொகுதி, பல்பொருட்பெயர் தொகுதி, செயற்கை வடிவப்பெயர் தொகுதி, பண்புப்பெயர் தொகுதி, செயல்பற்றியபெயர் தொகுதி, ஒலிபற்றிய பெயர் தொகுதி, ஒருசொற்பலபெயர் தொகுதி, பல்பெயர் தொகுதிகள் யாவும் மக்கள் மனதில் சரிவரப் பதியாமல் மயங்கிநின்றதுகண்டு பன்னிரண்டையுந் தொகுப்புத்தொகுப்பாக செய்யுளால்பாடி அந்நூலுக்கு நிகண்டென்னும் பெயரையளித்துள்ளார். பாலி பாஷையில் 'நிகண்டு' எனு மொழிக்கு திராவிட பாஷையில் 'பன்மொழி பொருள்விளக்க' மென்னப்படும். இத்தகைய முகப்புப் பெயரைவிடுத்து யாதொரு பொருளும்விளங்கா அகராதியென்னும் பெயரை முகப்பில் அளிப்பது பிசகேயாம்.

மற்றும் இத்தேசமெங்கும் பௌத்ததன்மங்களே பரவி பௌத்தர்களே நிறைந்து பௌத்த நூற்களையே சகலருங்கையாடிவந்தகாலத்தில் தமிழ்பாஷையானது சிறப்பும் அதன் தொகுப்புகளும் பிழையற வழங்கிவந்ததன்றி பின்னடி மக்கள் வழுவாவொழுக்கத்தினின்று சீர்பெற்று சுகிக்கவேண்டி இலக்கிய நூற் களையும் இலக்கண நூற்களையும் நீதி நூற்களையும் ஞான நூற்களையும் வரைந்து தமிழ்பாஷையை மயக்குறாது சொற்சுவை பொருட்சுவை விளங்க போதித்துவந்தார்கள்.

வேஷப்பிராமணர்கள் தோன்றி சத்தியதன்ம நீதிநெறி ஒழுக்கங்களும் மாறுபட்டு பௌத்தர்களுங் கலைந்து பௌத்த நூற்களுஞ் சிதலுண்டு நிலைகுலைந்துவிட்டபடியால் தங்கள் தங்கள் சீவனத்திற்குத் தக்கவாறு பொய்வேதங்களையும், பொய்ப்புராணங்களையும், பொய்மதங்களையும், பொய்ச்சாதிகளையும் ஏற்படுத்தி பூர்வ தன்மமொழிகள் யாவற்றையும் தாங்களேற்படுத்திக்கொண்ட சாதிகளுக்குஞ் சமயங்களுக்குத் தக்கவாறு மாறுபடுத்தி பூர்வத்தமிழ்மொழிகளையுங் கெடுத்தும் அம்மொழிகளின் மூலப்பொருட்கள் தங்களுக்குத் தெரியாமலே விடுத்தும் வழங்கிவருகின்ற படியால் பூர்வத்தமிழ்மொழிகளுக்குத் தக்கப் பொருட்கள் தற்கால தமிழில் அனந்தபேதப்பட்டிருக்கின்றது. அவைகளின் சுருக்கங்கள் யாதெனில் பல் பொருள் விளக்க மக்களது கூட்டத்தொருபெயர் தொகுதியில் இல்லந் துறந்து சருவ உயிர்களையுந் தன்னுயிர் போல் காக்கும் சாந்தரூபிக்கு "அந்தணன்"