பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

566 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மதஸ்த்தர்கள் தங்கடங்கள் மனம் போனவாறு பொய்யைச்சொல்லி மதங்களைத் தோற்றுவித்துக்கொண்டது போல மொழிகளினது பொருளறியாது ஒன்றை கூறவும் அதுவும் அறியாதோரதை நம்பவும் வழங்கவுமாகி வருகின்றது. அம்மொழிகள் யாவும் தென்னாட்டை ஒட்டியதன்றி வடநாட்டைப்பற்றிய தன்றாம். வழங்குந் தமிழை முத்தமிழென்பது மூவகையாகப் பேசுந் தமிழென்று கூறப்படும். அவைகள் யாதென்னிலோ மலையாள வாசிகள் வழங்குந் தமிழை கொடுந்தமிழென்றும், திருநெல்வேலி புரவாசிகள் வழங்குந் தமிழை கருந்தமிழென்றும், சென்னை முதலிய புரவாசிகள் வழங்குந் தமிழை செந்தமிழ் என்றும் கூறப்படும். அவைகள் வழங்கும் வகைகளோ, நாயிண்ட மகனே யென்பது கொடுந்தமிழ், நாய் ஈன்ற மகனே வென்பது கருந்தமிழ், நாய் பெற்ற பிள்ளையேயென்பது செந்தமிழ். கருந்தமிழில் வரைந்துள்ள புகார் காண்ட முதலிய நூற்களில் வரைந்துள்ளவற்றை செந்தமிழ் வாணர் வாசிப்பதற்கே இயலாது இன்னுந்திகைக்கின்றார்கள்.

இக்கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழினையே நமது முன்னோர்கள் நன்கு வரைந்திருக்கின்றார்கள். இப்பாஷையினது வரிவடிவாம் அட்சரங்களில் நஞ்செழுத்தென்றும் அமுத வெழுத்தென்றும் இருவகை உண்டு. அவற்றுள் அமுதெழுத்தைக்கொண்டு தமிழென்றும் நஞ்செழுத்தைக்கொண்டு தீராவிடம் என்றும் வழங்கி வந்தார்கள். தீராவிடமென்னு மொழியே குறுக்கல் விகாரப்பட்டு திராவிடமென வழங்கலாயிற்று. கொடுந்தமிழ் கருந்தமிழ் செந்தமிழ் இம்மூன்றினுள்ளும் நஞ்செழுத்துள்ளதால் முத்தமிழுக்குந் திராவிடமென்னும் பொதுப்பெயர் வழங்கலாயிற்றேயன்றி வேறன்றாம். இவற்றை நூதனமத வித்வான்களெவரேனும் மறுப்பரேல் பூர்வ நூலாதாரத்துடன் விளக்கக் கார்த்துள்ளோமாக.

7:39, மார்ச் 4, 1914

29. பௌத்தர்களது இலக்கணோற்பவம் போப்பையருக்கு
தெரியாதென்பது பௌத்தர்களது இலட்சணோற்பவம்
போப்பையருக்கு தெரியாதென்பதேயாம்

பௌத்தர்களது இலட்சணோற்பவம் யாதென்னிலோ பஞ்சசீல சாதனங்களேயாம். அச்சாதனத்தில் உற்பவிப்போரே பௌத்தர்களென் றழைக்கப்படுவார்கள். நமது போப்பையரோ வேறு மதசாதனராதலின் பௌத்தர்களது இலட்சணோற்பவந் தெரியாதென்று வரைந்துள்ளோம்.

மற்றும் பௌத்தர்களின் எழுத்திலட்சணம், சொல்லட்சணம், பொருள் லட்சணம், யாப்புலட்சணம், அணியிலட்சணமாய பஞ்ச லட்சணங்களில், உடல் ஒன்றை காணும் ஒற்றுமெ தோற்றத்தாலும், செயலால் உடலும் உயிருமென்னும் வேற்றுமெ தோற்றத்தாலும் புருடனென்றும் ஆன்மனென்றும், மனிதனென்றும் பெயர் பெற்றோன் தானே தன் செயலால் சீர்கெடுவதும் தானே தன் செயலால் சீர் பெறுவதும் தானே தன் செயலால் துக்கமடைவதும் தானே தன் செயலால் நிரயமென்னும் மீளாபிறவியில் அல்லல்பட்டு உழல்வதும், தானே தன் செயலால் மோட்ச மென்னும் பிறவியற்று நித்தியானந்தத் திலிருப்பதுமாதலின்,

திரிக்குறள்

பெருமெக்கு மேனைச் சிறுமெக்குந் தத்தங் / கருமமே கட்டளைக்கல்.

நாலடி நானூறு

நன்னிலைக் கட்டன்னை நிறுப்பானுந்தன்னை / நிலைகலக்கிக் கீழிடுவானும் நிலையினு
மேன்மேலுயர்த்து நிறுப்பானுந்தன்னை / தலையாகச் செய்வானுந்தான்.

அறநெறிச்சாரம்

தானே தனக்குப் பகைவனு நட்டானும் / தானே தனக்கு மறுமெயு மிம்மெயும்
தானே தான் செய்தவினைப்பயன் துய்த்தலால் / தானே தனக்குக்கரி.