பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 567

மனிதன் தனக்கப்புறப்பட்ட வேறொரு பொருள் உண்டென்று மலைவுறாது தன்னிற்றானே அறிவுபெருகி வீடுபேற்றை அடைவான் வேண்டி உயிரு மெய்யுமாய மனிதனுக்கு உயிரு மெய்யுமாய அட்சரங்களை புத்தபிரான் வகுத்து வரிவடிவில் அமைத்து அகஸ்தியர் பால் ஈய்ந்து பரவச்செய்தவற்றுள்,

நன்னூல்

உயிரு முடம்பு முப்பது முதலே.

உயிராயது பனிரண்டெழுத்தும், உடலாயது பதினெட்டெழுத்துமாய வைகள் மனிதனது உந்தியில் தோன்றி உதான வாயுவால் நெஞ்சிற் பிறந்து கண்டத்துள் நுழைந்து நாசியையும் நாவையுந் தழுவி ஒலிப்பதை விளக்கி,

நேமிநாதம்

உந்தியிறோன்று முதானவளிப்பிறந்து / கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து வந்தபின்
னாசினாவண்ண மிதழெயிறு மூக்கென் / பேசு மெழுத்தின் பிறப்பு.

மனிதன் தன்மெய்யைத் தானே உணரும் வழியில் விடுத்து உண்மெய்யாம் அந்தர் அங்கத்தையும் புறமெய்யாம் பகிர் அங்கத்தையும் அறிந்து தெளிதற்கு மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பத்தை வகுத்து உபமான உபமேய உதாரணங்கள் யாவற்றிலும் புறமெய்யாய உடலையே சுட்டி வரைந்திருக் கின்றார்கள்.

அச்சுட்டுப்பொருட்களை உணர்த்துவதினும், அவன் இவன் உவனென்றும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றனென்றும் மனிதனையே உதாரணமிட்டு வரைந்தது கொண்டே ஒருமெய், பன்மெய் யென்னும் விளக்கங்களையும், தன்மெய், முன்னிலை, படற்கை என்னுஞ் சுட்டுக்களையும் மனிதனென்னுந் தேகத்தையே சுட்டி அவன் விளங்குமாறு உயிர் மெய்யமைந்த மனிதனுக்கு உயிர்மெய்யாம் எழுத்துலட்சணம், சொல்லட்சணம், பொருள் லட்சணம், யாப்புலட்சணம், அணியிலட்சணமென்னும் பஞ்சலட்சணங்களால் பஞ்சபுலனுணர்ந்து தென்புலத்தானாம் வரையில் வரைந்துள்ளார்கள்.

எழுத்துக்களே இரண்டாவது லட்சணசொற்களாய் திரண்டு இலக்கிய லட்சணம் அமைந்தபோது ஒருசொல் வாக்கியம் இருச்சொல் வாக்கியம் மூச்சொல் வாக்கியங்களாகி மூன்றாம் பொருள் லட்சணம் விளங்க விளக்கி பகுபதம் பகா பதங்களென வகுத்து குறித்த சொல்லுக்கு உரித்த பொருள் கூறுமிடத்து துலங்கவரைந்து விளங்கக்கூறும் விதிகண்டு இருச்சொல் வாக்கிய பகுபத ஒருமெய், பன்மெய், என வரையின் அதன் உரிய பொருளாய ஒருதேகம், பலதேகங்கள், என்றும், தன்மெய், முன்னிலை, படற்கையென வரைவதில் தன் தேகம் முன்னிலுள்ள தேகம், பக்கலுள்ள தேகமென உரிய பொருளை விளங்க விளக்குவதாகும்.

அங்ஙனமின்றி இருச்சொல் வாக்கியத்தை ஒரு சொல்லே என்றும், பகுபதத்தை பகாபதமேயென்றும் பண்பு பிரழ்ந்து ஒருமை, பன்மை, தன்மை, என்று வரைவதாயின் பஞ்சலட்சண வாக்கியோன் கருத்துங் கெட்டு அதனுரிய பொருளுங் கெட்டு மலைவுற்றுப்போம்.

ஆகலின் பஞ்ச லட்சணமாம் எழுத்துக்கு லட்சணங் கூறுவதினும், சொல்லுக்கு லட்சணங் கூறுவதினும், பொருளுக்கு லட்சணங் கூறுவதினும், யாப்புக்கு லட்சணங் கூறுவதினும், அணிக்கு லட்சணங் கூறுவதினும், வரைவதினும் ஆக்கியோன கருத்து கெடாதும் பொருள் கெடாதும் வரைவதுங் கூறுவது அழகாம். இத்தகைய வாக்கியோன் கருத்து கெடாதும் பொருள் கெடாதும் வரைந்துள்ளவற்றை பௌத்தர்களால் இருநூறு வருடங்களுக்குமுன் வரைந்து வைத்துள்ள வோலை புத்தகங்களிலும் சிலாசாசனங்களிலுங் காணில் பரக்க விளங்கும். பண்டை காலத்தார் கருத்தையும், பண்டை நூற்களையும், பண்டை சிலாசானங்களையும் ஆய்ந்துணராதோர்க்குப் பஞ்ச லட்சணம் விளங்காவாம்.

பஞ்சலட்சணமே விளங்காதோர்க்கு தருக்க லட்சண பாகுபாடுகளே விளங்காவாம் விளங்குவோர்பால் வாதிடுவதே விவேகவிருத்தி, விளங்கார்பால் வாதிடுவதால் விவேகங்குறைவாம்.

7:46, ஏப்ரல் 22, 1914