பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

568 / அயோத்திதாசர் சிந்தனைகள்

30. திருவள்ளுவ நாயனார் இயற்றிய திரிக்குறள்

சற்குருவே நம
சிறப்புப்பாயிரம்

உலகுபுகழ் அரிய திரிபேதவாக்கியங்களென்றும், திரிபீட வாக்கியங்களென்றும் வழங்கிய மூவருமொழியாம் முதனூலுக்கு வழி நூலாகத் தோன்றியவை திரிக்குறளும், சார்பு நூலாகத்தோன்றியவைகள் திரிமந்திரம், திரிவாசகம், திரிவெண்பா , திரிமாலை, திரிகடுகம், சித்தர்கள் நூல் முதலியவை களேயாம். இத்திரிக்குறளுக்கு திருவென்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறளென சிறப்ப வழங்கினும் தன்மபிடக, சூத்ர பிடக, வினயபிடக மென்னும் மகட்பாஷா முந்நூலுக்கு திராவிட பாஷா வழி நூலாம் அறத்துப்பால், பொருட்பால், காமப்பாலென்னுந் திரிக்குறளே உடன் பாடாதலின் திருவென்னும் அடைமொழி சிறப்பென்றெண்ணி திருக்குறளென ஏற்பது மும்மணிகளென்பதை அழகுமணிகள் என்பதற்கு ஒக்கும். ஆதலின் திரிபேதங் களாம், முதநூலுக்குத் திரிக்குறளே வழி நூலாதலின் திருவென்னும் அடை மொழி நீக்கி திரியென்னும் மூவருமொழிகளை விளக்கியுள்ளதே முதற் சிறப்பாகும்.

அங்ஙனம் விளக்குவதில் சுருங்கச்சொல்லி விளங்கவைத்தலே சுகமென்றெண்ணி குறள் வெண்பாவாற் குறுகக்கூறியவை இரண்டாம் சிறப்பாகும். திரிபீடவாக்கிய மறைபொருள் பாலிபாஷையினின்று சகல மக்களுக்கும் விளங்காததுகண்டு அவற்றை திராவிட பாஷையில் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தது மூன்றாம் சிறப்பாகும். புத்தபிரான் சக்கரவாளம் எங்கணுஞ் சுற்றி திரிபேதவாக்கியங்களாம் தன்மபாதத்தை விளக்கியிருக்க இத்திரிக்குறளாக்கியோன் இருந்தவிடத்திருந்து ஈரடிவெண்பாவால் திரிபாலாற்றவும் சகலதேச பாஷையோரும் அவற்றை அவரவர்கள் பாஷையில் மொழி பெயர்த்து ஏற்கவுமாயது நான்காவது சிறப்பாகும். வட இந்தியாவில் சாக்கையர் வம்மிஷ வரிசையில் மண்முகவாகென்னும் சக்கிரவர்த்திக்கும், மாயாதேவி யென்னும் சக்கிரவர்த்தினியாருக்கும் மகவாகப்பிறந்து முதநூலியற்றியருளியது போல் தென்னிந்திய வள்ளுவ வம்மிஷவரிசையில் மாமதுரைக்கச்சனென்னும் அரயனுக்கும், உபகேசியென்னும் ராக்கினிக்கும் மகவாகத் தோன்றி நாயனாரென்னும் பெயர்பெற்று சங்கஞ்சார்ந்த தபோபலத்தாலும் தாய் தந்தையர் செய்த புண்ணியபலத்தாலும் சிறந்த நாவமைந்து செந்நாப்புலவரெனத் தோன்றியது ஐந்தாம் சிறப்பாகும். அரசருக்குப் பிறந்து அரசியல் இருபத் தைந்தினையும் அமைச்சியல் பத்தையும் அரணியல் இரண்டையும் கூழ்பகுதி ஒன்றையும், படைபகுதி இரண்டையும் நட்பாளர்பகுதி பதினேழையும் பதின் மூன்றுவகைக் குடிகளியல்பையும் நன்கு விளக்கியது மன்றி, தான் சார்ந்த சங்கத்தின் ஞானவியல்பையும் தென்புலத்தோராம் சமணமுநிவர்களாற்றலையும், சிற்றின்பம் அறுக்கு நிலையே பேரின்பமாதலையும் முதற்பா என்னுங் குறள் வெண்பாவால் எழுதி மதுரைக்கச்செனென்னுங் கூர்வேல்வழுதி மனமகிழச் செய்தது ஆறாஞ் சிறப்பாகும். திரிக்குறளில் கடவுள் வாழ்த்தென்னும் புத்தரது சிறப்பு முதல் ஆயிரத்தி முன்னூற்றி முப்ப தருங் குறட்பாக்களைத் திரிபற வாசித்துணர்ந்தோனுக்கு வேறென்னூற்களும் வேண்டாவாகலின் ஏழாம் சிறப்பாகும். இத்தகைய சப்த சிறப்பமைந்த திரிக்குறளாக்கியோன் திருவள்ளுவநாயனார் திருவடி வணங்கி அவரது வழி நூலுக்கு பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விரித்துரை நான்கையு மெழுதத் துணிந்தது கருடன் பறக்குமிடத்து ஈயும் பறப்பது போலாயினும் ஆதிபகவனது சரித்திரத்தையும் திரிபிடகமாம் திரிபேத மொழிகளின் அந்தரார்த்தங்களையும் உணர்ந்தவுறமே உள்ளதைவிளக்குவான் வேண்டி வழி நூலுக்கு உரை ஆரம்பித்துள்ளோம். இவற்றுள் வரிவழுகுறிவழு ஏதொன்று வழுவினும் பௌத்ததன்ம ஆன்றோர்கள் பொறுத்து நீதிவழு நெறிவழூவுக்களை நியதிகளைந்து விளக்குக வேண்டுவாம். இவ்வேண்டுகோள் மகடபாஷையிலும், திராவிட பாஷையிலும் சத்தியதன்ம