பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 569

ஆராய்ச்சியில் மிகுத்த புத்தன்மத்தைச் சார்ந்தோரையன்றி ஏனைய மதத்தோரைச் சாராவென்பதாம்.

1. கடவுள் வாழ்த்து என்னும் புத்தரது சிறப்புப்பாயிரம்

அஃதாவது காப்புக்கு முன்னெடுக்குங் கடவுளே மாலென்னும் புத்தராதலானும், மாதா, பிதா, குரு என்னும் மூவரையுமே தெய்வமாகக் கொண்டவிடத்து புத்தரே ஜகத்குருவும் ஆதியங் கடவுளாயதினாலும் நூலாசிரியரது மரபில் தொன்றுதொட்டு வணங்கிவரும் திரிரத்தின முதலாம் பதுமநிதியாகிய ஆதிபகவனாம் புத்தபிரானைத் தனது வழிநூலுக்குக் காப்பாகப் பத்து பாடலால் வாழ்த்தி சிறப்பித்திருக்கின்றார்.

1.அகரமுதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

(பதவுரை) அகரம் - அகரமென்னு மெழுத்து, எழுத்தெல்லாம் - மற்றுள்ள வெழுத்துகளுக்கெல்லாம், முதல் - ஆதியாயிருப்பதுபோல், பகவன் - புத்தபிரான், உலகு - உயர்வோருக்கு, முதற்று - முதலாயிருக்கின்றாரென்பது பதம்.

(பொழிப்புரை) சகல எழுத்துக்களுக்கும் அகரமாகிய எழுத்து முதலாயிருந்து அறிவை விளக்குவதுபோல் பகவனாகிய புத்தர் சருவ மக்களுக்கும் அறிவை விருத்தி செய்யும்முத நூலீய்ந்த முதல்வனாக இருக்கின்றாரென்பது பொழிப்பு.

(கருத்துரை) அகரமாகிய எழுத்தாயது மற்றுமுள்ள எழுத்துக்கள் யாவற்றிற்கு மாதியாயிருந்து கற்போருக்குக் கசடற அறிவின் விருத்தி செய்வது போல் உலகசீர்திருத்தக்காரருள் ஆதியாகத் தோன்றி மக்களுக்கு மூவருமொழி களை ஊட்டி உயர்ந்தோர்மாட்டே உலகென விளக்கியவர் ஆதிபகவனாகிய புத்தரேயாதலின் அவரை முதற்பாடலில் சிறக்க வாழ்த்தியிருக்கின்றாரென்பது கருத்து.

(விரித்துரை) புத்தபிரான் ஜகத்திற்கே குருவாகத்தோன்றி அவன் தன்னவன் இவன் அன்னியனென்றும், இவன் தாழ்ந்தவன் இவன் உயர்ந்தவனென்றும், இவன் கற்றவன் அவன் கல்லாதவனென்றும், இவன் கனவான் அவன் ஏழையென்றும், இவன் சிறியவன் அவன் பெரியவனென்றும் பாரபட்சம் பாராதும், எறும்பு முதல் யானை வரையிலுள்ள சருவசீவர்களின் மீதும் அன்புபாராட்டியும், சக்கரவாளம் எங்கணுஞ் சுற்றி அங்கங்குள்ள சருவ மக்களுக்கும் சத்தியதன்மத்தை ஊட்டியும், மக்கள் கதியினின்று தேவகதி பெறும் நித்தியானந்தத்தில் விடுத்து பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் துக்கங்களைப் போக்குதற்காய தன்மசங்கங்களை நாட்டியும், அஞ்ஞான இருளை அகற்றி மெஞ்ஞானோதயஞ் செய்தபடியால் பகவனென்னுங் காரணப் பெயரைப் பெற்றார்.

அதாவது இருளை விலக்கிய சூரியனுக்குப் பகலவனென்னுங் காரணப் பெயருண்டாயது போல் மக்களுக்குள்ள காம வெகுளி மயக்கமென்னும் அஞ்ஞான இருளை அகற்றி சாந்தம், ஈகை, அன்பென்னும் மெஞ்ஞானோதயஞ் செய்வித்தபடியால் புத்தருக்குள்ள சகஸ்திர நாமங்களில் பகவன் பகவனென்னும் ஓர் சிறப்புப்பெயரையும் மேலோர் வகுத்திருக்கின்றார்கள், மண்டல புருடன் "பகவனே ஈசன் மாயோன், பங்கயன் சினனே புத்தன்" என்று கூறியுள்ள வற்றிற்குச் சார்பாய் திரிமந்திர வாக்கியோன் திருமூலர் “ஆதிபகவனருமறை யோதுமின்” என்றும் அதனை அநுசரித்து சமணமுனிவரினின்று தேர்ந்த இடைகாட்டு சித்தர், “ஆதிபகவனையே பசுவே அன்பாய் தொழுவாயேல், சோதிபரகதிதான் பசுவே சொந்தமதாகாதோ" வென்றற்குப் பகரமாய் மணிமேகலை ஆக்கியோன் சீத்தலை சாத்தனார் பிண்டியினது சிறப்பை ஒட்டி பகவனதாணையில் பன்மாம் பூர்க்குமென்றும் இதற்கு ஆதரவாக சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர் பாடல் வண்டாற்றும்பிண்டி பகவனதாணை போல" வென்றும் வழிநூலுக்கு ஆதரவாக சார்பு நூலோர்களும் வரைந்திருக் கின்றார்கள். புத்தபிரானை மகடபாஷையில் பகவனெனக்