பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

570 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கூறியவற்றை அநுசரித்து திராவிட பாஷையில் திவாகரரென்றும் வழங்கி வந்தார்கள்.

உலகிற்கே ஆதி சீர்திருத்தக்காரரெனத் தோன்றியவரின் மலைவுபடா மொழிகளையும், அளவுபடா அன்பினையும், திகைவுபடா ஞானத்தின் சிறப்பினையும், மநுகுலத்தில் முக்காலங் கெடா புருஷோத்தமனாக விளங்கிய உருவினையும், மிருதுவாக்கினமுதினையும், களங்கமற்ற உள்ளக்காட்சியையும் ஒப்பிட்டுக்காட்டும் உபமான உபமேயம் உலகில் ஒன்றுமில்லாததால் அறிவை விளக்கி சீர்திருத்தும் அறிச்சுவடியின் முதலெழுத்தாம் அகரவெழுத்தைச் சுட்டி உவமான உபமேயங்களாக விளக்கியுள்ளார். அத்தகைய விளக்காம் அகரசிறப் போவென்னில் தமிழ் எழுத்துக்கள் யாவற்றிற்கும் முதவெழுத்தாகவும், எட்டென்னும் இலக்கண எழுத்தாகவும், குண்டலியரம் சுழிமுனை நாடியின் முன்சுழியாகவும், ஞானவேற்ற அடிபடையாகவும் “அ காரகாரணத்துளே யனேகனேகரூபமா” என்னும் ஞானோற்பவத்திற்கே ஆதாரமாகவும், “ஆதியாய் நின்ற அறிவு முதலெழுத்தோதிய நூலின் பயன்” என்னும் அறிவிருத்திக்கே பீடமாகவும், “கட்டுப்படாதந்த வச்சுமட்டம் அதன் காலேபன்னிரண்டா கையினால், எட்டுக் கயிற்றினால் கட்டிக்கொண்டாலது மட்டுப்படுமோடி ஞானப்பெண்ணே என்னும் மனோலயத்திற்கே ஆதாரமாகவும் இருக்கின்ற படியால் அவ்வகரவட்சரத்தின் மகத்துவம் அறிந்த மேலோர்கள் மக்களது வாழ்க்கையின் இல்லங்களில் அப்பா, அம்மா, அண்ணா , அக்கா, அம்மான், அத்தை என வழங்கு மொழிகளால் எக்காலும் அகராட்சரத்தை உச்சரிக்கவுஞ் செய்துள்ளது சகல மகாஞானிகளின் சம்மதச்சிறப்பாகவும் விளங்குவது கொண்டு வழி நூலாசிரியர் அறவாழியானுக்கு அகரத்தை ஒப்பிட்டு கடவுள் வாழ்த்தாம் புத்தரது சிறப்பை விரித்திருக்கின்றார்.

இதற்கு ஆதரவு பாலி புத்தாகுணோ இதிபிஸோ பகவா அறஹங் ஸம்புத்தோ விஜ்ஜாசரண ஸம்ப்பன்னோ ஸுகதோ லோகாவிது அநுத்தரோ புரிஸதம் மகாரதி ஸட்த்தா தேவம் அனுஸ்ஸானங் புத்தோபகவாதி.

பாலி நிகண்டு. ஆதி பகவா பகவாமுனி, பகவாஸம்மா ஸம்புத்தா, பகவாஜீனா பகவா புத்தர், பகவா மஹாமுனி.

2.கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்.

(ப.) கற்றதனால்-படித்ததினால், ஆய-உண்டாய, பயன்-பலன், என்கொல்- என்னென்று சொல்லுதும், வாலறிவன்-பாலதானத்தில் அறிவின் விருத்திப்பெற்று நின்றவன், நற்றாள்-சீரடிகளை, டொழாஅ-வணங்கா, ரெனின்-பயனென்னை யென்பது பதம்.

(பொ.) பல நூற்களைக் கற்றும், நூலுக்கு முதல்வனும், நுண்ணணறிவின் ஆசிரியனுமாய வாலறிஞனின் செயலையும் அவரது தன்மபாத போதத்தையும் வணங்கி விசாரியார்க்கு நூலினைக் கற்றும் பயன் விளங்காதென்பது பொழிப்பு.

(க.) பாலவயதிலேயே அறிவின் விருத்திபெற்று ஜகத்குருவாகத் தோன்றிய ஒப்பிலா அப்பன் புத்தரது திருவடிகளை வணங்கி மக்களுள் அவர்பெற்ற பேரானந்தத்தை உணர்ந்து அவரது முதநூலையும் மற்றும் வழிநூல், சார்புநூல் யாவையுங் கற்பதாயின் கற்ற சுகத்தின் பயன் நித்திய காட்சியும் அநுபவமுமாக விளங்குமென்பது கருத்து.

(வி.) கண்டுபடிப்பதே படிப்பு, மற்றபடிப்பெல்லாம் தெண்டபடிப் பென்று வழங்குதற்குப் பகரமாகக் காட்சிக்கும் அநுபவத்திற்கும் பொருந்தாக் கலைகளைக் கற்பது கல்லானென்பதற்கு ஒக்கக் களங்கம் தோய்ந்திருப் பானாயின் கற்றுங் கசடன் என்றேற்கப்படுவான். ஆதலின் கற்குமுன்னும் கற்றப்பின்னும் நூல்தோன்றியகாரணம் யாதென்றும், நூலினது ஆக்கியோன் செயல் ஏதென்றும் அவரடைந்த பயனென்னையென்றும் உணர்ந்து கற்றும் கடைத்தோற்கே வாலறிவன் தாளினை வணங்கிக் கற்றலே பயனுடைத்தென்றும் வணங்காது கற்றல் பயனற்றதென்றும் விளக்குவான்வேண்டி களங்கமற்ற வாலறிஞன் தாளினை வணங்கி களங்கமறுக்கும் நூற்களைக் கற்பது