பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 571

பயனுடைத்து என்பதாம். புத்தரையே வாலறிஞனென வழிநூலார் சிந்தித்தற்குச் சார்பாய் யாப்பருங்கலை ஆக்கியோன் அமுதசாகரர், "அறிவனைவணங்கி யரைகுவன்யாப்பே, என்றும் அதனுரையாசிரியர் குணசாகரனார், “ஆசனத்திருந்த திருந்தொளியறிவன், ஆசனத்திருந்த திருந்தொளியறிவனை” என்றும், சிலப்பதிகார ஆக்கியோன் இளங்கோவடிகள், “ஆதியிற்றோற்றவறிவனை வணங்கி,” என்றும், அறநெறிச்சார ஆக்கியோன், முனைப்பாடியார், “அறிவனை வாழ்த்தி அடவித்துணையா” என்றும் தோன்றியுள்ள சார்பு நூற்களே போன்ற விரிவாம்.

3.மலர்மீசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.

(ப.) மலர்-தாமரைப் புட்பத்தின், மிசை-மீதே, யேகினான்- சென்றவனது, மாணடி-சிறந்த பாதத்தை, சேர்ந்தார்-சார்ந்தவர்கள், நிலமிசை-பூமியின்கண், நீடுவாழ்வார்- எக்காலும் சுகசீவிகளாக வாழ்வார்களென்பது பதம்.

(பொ.) பதுமாதனமென்னும் தாமரை புட்பத்தில் வீற்று பதுமநிதி என்னும் பெயர்பெற்று, ததாகதமுற்றுக் காமனையுங் காலனையும் வென்று நித்தியானந்தம் பெற்றோன் சீர்பாதங்களைச்சார்ந்தோர் நீடிய வாழ்க்கை சுகம் பெறுவார்களென்பது பொழிப்பு.

(க.) கல்லாலடிக்குள் செங்கமலப்பீடத்தின்மேல் வீற்று செவ்விய ஞானத்தை உணர்ந்து ஜகத்குருவாக விளங்கிய உலகநாதனின் மாணடியைச் சேர்ந்தோர் அவரது மாபோதத்தை உணர்ந்து தீவினையை வென்று என்றுமழியா நிப்பானமாம் நித்தியவாழ்க்கைப் பொறுவார்கள் என்பது கருத்து.

(வி.) கல்லால விருட்சத்தின் கீழ் கமலாசனத்தில் வீற்று கமலநாத னென்னும் பெயரும் பெற்ற "புத்தபிரானை” மலருற்று நடந்தவாமனென்றும், தாமரையாசனனென்றும், கமலபாதனென்றுங் கொண்டாடுமாதாரத்தைக் கொண்டே வழி நூலார் மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்த போதே அவரது சீலத்தையும், ஒழுக்கத்தையும், மெஞ்ஞானத்தையும் பெற்று நிப்பானமென்னும் நித்தியசுகம் பெறுவார்களென்னுந் துணிபால் நிலமிசை நீடுவாழ்வாரென வைப்புறுத்திக் கூறியுள்ளார். மலர்மிசை யேகினா னென்பதற்குச் சார்பாய் பின்கலைநிகண்டி னாக்கியோன் மண்டல புருடன் “மூலருற்றுநடந்த வாமனென்றும், திரிமந்திர வாக்கியோன் திருமூலனார் “கடந்துநின்றான் கமலாமலர் மீதே” என்றும், சீவகசிந்தாமணி வாக்கியோன் திருத்தக்கதேவர் விண்டலர் பூந்தாமரையின் விரைததும்ப மேனடந்தா” னென்றும், சூளாமணியாக்கியோன் தோலா மொழித்தேவர் விரைமணங்கு தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்” என்றும், அறநெறிச்சார வாக்கியோன் முனைப்பாடியார் “தாமரைப்பூவின்மேற் சென்றான் புகழடியை” என்றும், சிலப்பதிகார வாக்கியோன் இளங்கோவடிகள் “மலர் மிசைச்சென்ற மலரடிக் கல்லதென், றலைமிசையுச்சி தானணிபொறஅ” என்றும் வாசிட்ட வாக்கியோன் “புண்டரீகவாதனத்தில் புத்தன்போலுத்தரமுகனா” என்றும், வீரசோழிய உதாரணச்செய்யுள் “உறுதாமரைமேலுரைவார்தன்” என்றுங் கூறியுள்ள சமணமுனிவர்களின் சார்பு நூற்களின் ஆதாரங்கொண்டே வழி நூலார் கூறியுள்ள மலர்மிசையேகினானென்னு மொழி புத்தபிரானை குறித்தவையெனத் துணிந்தோதிய விரிவு.

4.வேண்டுதல் வேண்டாமெயிலானடி சேர்ந்தார்க்
கீயாண்டு மிடும்பை யில்.

(ப.) வேண்டுதல் -விரும்புதல், வேண்டாதல் - விரும்பாதல், இலானடி அற்றவனது சீர்பாதத்தை, சேர்ந்தார் - அடைந்தவர்களுக்கு, கியாண்டு - எக்காலமும், யிடும்பை- பிறவியின் துன்பம், யில் - இல்லையென்பது பதம்.

(பொ.) விருப்பும் வெறுப்புமற்ற புத்தரது கமல பாதத்தைச் சார்ந்தவர்கள் எக்காலுந் துக்கமென்பதற்று சுகநிலை பெறுவார்களென்பது பொழிப்பு.