பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

574 / அயோத்திதாசர் சிந்தனைகள்

யாசித்தலைவதுமாகிய பொய்தோற்றங்களையும் அதனால் உண்டாந் துக்கங் களையும் ஒழித்து மகராஜனே துறவடைந்தாரென்னும் ஒழுக்கநெறிநின்று, பொறிவாயல் ஐந்தினையும் அவித்து புத்தராகிய மெய்கண்டதேவனை பின்பற்றி அவரது நல்லொழுக்க போதனாநெறியில் நிலைப்பவர்கள் பொய்ப்பொருட் தோற்ற அவாக்கள் ஐந்தினையும் அவித்து தன்னில் தானே தத்துவமாகும் மெய்ப்பொருள்கண்டு என்றும் அழியா நித்திய நிலையில் நீடுவாழ்வார் களென்று வழி நூலார் கூறியவற்றிற்குப் பகரமாய் வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் "வீடுகொண்டநல்லறம் பகர்ந்தமன்பதைக்கெலாம், விளங்குதிங்கள் நேர்மெயால் விரிந்திலங்கு வன்பினோன் மோடுகொண்ட வெண்ணுரைக் கருங்கடற் செழுஞ்சுடர், முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியி, நாடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமா, மைந்தவித்து மூன்றறுத்த நாதனாண்மலத்துணர்ப் பீடுகொண்ட வார்தளிர்ப் பிரங்குபோதி யானையெம், பிரானைநாளு மேத்துவார் பிறப்பிறப்பிலார்களே” என்றும் அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார், “உள்ளப்பெருங்குதிரை, யூர்ந்து வயப்படுத்திக் கள்ளப் புலனைந்துங் காப்பமைத்து, வெள்ளப் பிறவிக் கணீத்தார் பெருங்குணத்தாரைத், துறவித் துணைப்பெற்றக்கால்” என்றும், சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர் “ஐவகைப் பொறியும்வாட்டி யாமையினடங்கி யைந்தின், மெய்வகை தெரியுஞ்சிந்தை விளக்குநின் றெரியவிட்டுப், பொய், கொலை, களவு, காம, மவாவிருள் புகாதுபோற்றிச், செய்தவனுனித்தசீலக் கனைகதிர்த் திங்களொப்பார்” என்றும் மணிமேகலை ஆக்கியோன் வணிகசாத்தனார் “பொருளினுண்மெய் புலங்கொளல்வேண்டும். மருளில்காட்சி யைவகையாகுங் கண்ணால் வண்ணமுஞ் செவியாலோசையு, மூக்கானாற்றமு நாக்காற் சுவையு, மெய்யாலூறு மென்றுஞ் சொன்ன இவ், ஐவகைகண்டு கேட்டுண்டுயிர்த்து” என்றும் இடைக்காட்டுச்சித்தர் "மெய்வாய்கண் மூக்குச் செவி எனுமைந்தாட்டை, வீறுஞ்சுவையொளி யூரோசையாங்காட்டை, யெய்யாம லோட்டினேன்வாட்டி னேனாட்டினேன் ஏகவெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே” என்றும், பொறிவாயல் ஐந்தவித்த புத்தரின் பொய்தீர் ஒழுக்க நெறினின்று புலன்தென்பட்டோர் நீடிய சுகவாழ்க்கைப் பெறுவார்களென்பது விரிவு.

7.தனக்குவமெயில்லா தான்றாள் சேர்ந்தார்க் கல்லான்
மனக்கவலை மாற்ற லரிது.

(ப.) தனக்கு - தனக்கு, உவமெயில்லாதான் - நிகரற்றவராகுந் ததாகதரின், றாள் சேர்ந்தார்க்கு - சீர்பாதத்தை யடைந்தவர்க்கு, அல்லான் - அல்லது, மனக்கவலை - துக்கவிருத்தியை, மாற்றல் - அகற்றல், அரிது - கடினமென்பது பதம்.

(பொ.) தனக்கு நிகரில்லாதவன் தாளைச் சார்தலே துக்கநிவர்த்திக்கு வழியென்பது பொழிப்பு.

(க.) உலகத்தில் தோன்றிய மக்களுள் புத்தருக்கு நிகராய புருஷவுத்தமன் ஒருவரும் இல்லையாதலால் அவரது கமலபாதத்தைச் சார்தலே மனக் கவலையாம் துக்க நிவர்த்திக்கு வழியல்லது வேறுவழி இல்லையென்பது கருத்து.

(வி.) உலகத்தில் தோன்றியுள்ள மக்களுள் மனக்கவலையாம் பிறவியின் துக்கம், பிணியின் துக்கம், மூப்பின் துக்கம், மரணதுக்கம் ஆகிய நான்கையுங் கண்டுபிடித்து அந்த துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவ காரணம், துக்க நிவாரணமாகிய நான்கையும் உணர்ந்து பிறப்பினால் உண்டாம் மனக்கவலை, மூப்பினாலுண்டாம் மனக்கவலை, மரணத்தினாலுண்டாம் மனக்கவலையாய நான்கினையும் மாற்றி துக்கநிவர்த்தியாம் என்றும் அழியா நித்தியநிலைப் பெற்று மக்களென்னும் ஆறாவது தோற்றத்தினின்று ஏழாவது தோற்றமாம் தேவகதியில் ஆதிதேவனென்றும், ஆதிமுநிவனென்றும் ஆதிபகவனென்றும், ஆதிநாதனென்றும், ஆதிகடவுளென்றும் விவேகமிகுத்த மேன்மக்களால்