பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

576 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கள் வதூஉ மின்றிப் பிறர்மனையிற், செல்வதூஉஞ் செய்வனகாலல்ல - தொல்லைப், பிறவிதணிக்கும் பெருந்தவர்பாற் சென், றறவுரை கேட்பிப்பகால்" என்றும், வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் “புண்டரிகபாத நமசரணமாகுமென முநிவர் தீமெய் புணர்பிறவு காணார்” என்றும் திரிமந்திரம் ஆக்கியோன் திருமூலர் “அருமெவல்லான் கலைஞாலத்துட்டொன்றும், பெருமெவல்லான் பிறவிக்கடல் நீந்தும், உரிமெவல்லா னடியூடுரவாகி, திருமெவல்லாரொடுஞ் சேர்ந்தன்னியானே” என்றுங் கூறிய ஆதாரங்கொண்டு அறவாழி அந்தணன் புத்தரேயென வற்புறுத்திக் கூறிய விரிவாம்.

9.கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.

(ப.) பொறியிற் - பஞ்சபொறிகளினிடத்தே, கோள் - குற்றங்கள், இல் - இல்லாதவனாயினும், குணமிலவே - பயனில்லை, எண்குணத்தான் - எட்டுவகைகுணங்களை யமைந்தவனது; தாளை - சீர்பாதங்களை, வணங்கா - தொழுகா, தலை - சிரமென்பது பதம்.

(பொ.) குற்றமற்ற பஞ்சபொறிகளையுடையத் தலையைப்பெற்ற வனாயினும், எண்குணத்தான் தாளை வணங்காத்தலை பயனற்றதென்பது பொழிப்பு.

(க.) நாவால் வருங் குற்றம், மூக்கால் வருங்குற்றம், செவியால்வருங் குற்றம், கண்ணால்வருங் குற்றம், தேகத்தால் வருங் குற்றம், எண்ணத்தால் வருங் குற்றங்களாய வறுவகைக் கோளற்ற தலையை உடைத்தாவனாயினும் அதனுளவை போதித்தும் நடந்துங்காட்டிய ஜகத்குருவாம் எண்குணத்தானது அடிகளைச் சேராதார்க்கு யாதொரு குணமும் விளங்காதென்பது கருத்து.

(வி.) முன்பு குற்றமற்று குருவாகத் தோன்றிய எண்குணத்தான் யாவரென்னில் பொய்சொல்லாமெய், கொலைசெய்யாமெய், களவாடாமெய், கள்ளருந்தாமெய், பிறர்மனை நயவாமெய் ஆகிய சுத்ததேகியாம் தூயவுடம் பினனானவரும், தன்னைத்தானே அடக்கி ஆட்கொண்ட தன்வயத்தனானவரும், யாதொருவர் போதனையுமின்றி வாலவயதிலேயே அறிவின்விருத்திப்பெற்ற இயற்கை யுணர்வினனானவரும், சகலமும் அறிந்த முனிவனென முற்றும் உணர்ந்தவரானவரும், இராஜ போகத்தைத் துறத்தற்கு இயல்பாகவே பாசபந்தங்களினின்று நீங்கியவரும், அன்பே ஒருருவாகத் தோன்றிய பேரருளுடலையுடையவரும், கடைத்தேறி நிருவாணம் பெற்று முடிவிலா ஆற்றலடைந்தவரும், பேரின்பமாம் வரம்பில் இன்ப மமைந்தவரும் புத்தர் ஒருவரே ஆதலின் அறுவகைக்குற்றங்களை அறுத்தோனாயினும் எண் குணத்தானடிகளை வணங்கி எண்குணத்தோனாவதே குணமன்றி அறுவகை குற்றங்களற்ற சிரமாயினுங் குணமில்லையென்பது கண்டு வழி நூலார் குற்றமற்றுங் குணங்குடிக்கொள்ளும் ஏதுவை விளக்கியுள்ளார். இதனது சார்பாக வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் “எண்ணிறைந்த குணத்தோய்நீ, யாவர்க்கு மரியோய் நீ” என்றும், “அருள் வீற்றிருந்த திருநிழற்போதி, முழுதுணர் முநிவநிற் பரவுதுந் தொழுதக” வென்றும், “பொதுவன்றிநினக்குரித்தோ புண்ணியனின் றிருமேனி” என்றும், மணிமேகலை ஆக்கியோன் வணிகசாத்தனார் “முற்றுமுணர்ந்த முதல்வனையல்லது மற்றைப்பீடிகை தலைமிசைப்பெறாஅ” வென்றும், சூளாமணி ஆக்கியோன் தோலாமொழித்தேவர் "சோதியும்பே ரெண்குணனுந் துப்புரவுந்துன்னுவரே என்றும், "கடையி லெண்குணத்தது காகராகர்க” வென்றும், சீவகசிந்தாமணி யாக்கியோன் திருத்தக்கதேவர் "பூத்தொழியாப் பிண்டிக்கீழ்ப்பொங்கோத வண்ணனை நாத்தழும்ப வே ...... யீட்டுலக நண்ணாரே, வீட்டுலக... னகள் வராதுதரி, வோட்டிடுபவென்னுக் குட்பட்டயர்வாமே" என்றும், பின்கலை நிகண்டினாக்கி யோன் மண்டல புருடன் "அநக னெண்குணன் நிச்சிந்தன் அறவாழிவேந்தன் வாமன் " என்றும், கூறியுள்ள நூற்களின் ஆதாரங்கொண்டு எண்குணத்தா னென்னும் பெயர் புத்தருக்குரிய சகஸ்திரநாமங்களில் ஒன்றென்றே துணிந்து கூறிய விரிவாம்.