பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 49

யீகை - விரதம் - தருமம் பேணுதல் - அறிவின் விருத்தியை நாடல் - கேள்வி முயலல் - நன்று தீதென்று உணரலுமாம்.

பின்கலை நிகண்டு

தானமே தவமே மற்ற தருமம் பேணுதலினோடு
ஞானமே கல்விகேள்வி நலனிவை தெரிதரானே
யீனமொன் றில்லார்வைத்த விராசத குணங்களென்ப
ஊன்மின் முநிவன் முன்னாளுரைத்திடு முண்மெய்தானே.

காக்கைபாடினியம்

சுரருண் ஊனுங் கள்ளுமகற்றி / தூயவசுர ராவாதென்னே.

இவ்வகை சுரரென்றும், இராட்சதரென்றும், இராசதரென்றும் வழங்கிவந்த செயல்பற்றியப் பெயர்களின் பொருளறியா பொய்க்குருக்கள் அசுரர் இராசதர் என்போருக்கு மலைபோல மூக்குகளும் அலைபோல் நாக்குகளும் இருக்கும் என்றும் பத்துவண்டி சோறு எட்டு வண்டி சோறு உண்பார்கள் என்றும் கட்டுக்கதைகளை ஏற்படுத்தி மக்களை மயங்கச்செய்து அவர்கள் அறிவின் விருத்தியையும் கெடுத்து தங்கள் சுயப்பிரயோசனத்தையே பெருக்கிக் கொண்டார்கள்.

இப்பொய் குருக்களையும், பொய் மதங்களையும், பொய்சாதிகளையும் கண்டித்தெழுதிய நூற்கள் நாளுக்குநாள் பரவிவருவதைக் கண்ட வேஷதாரிகள் சரியைக் - கிரியை - யோகம் - ஞானமென்னும் நான்கு படிகள் இருக்கின்றது என்றும், அதில் மேலாம்படி ஞானத்திலிருந்து சாதிகளையுஞ் சமையங்களையும் கண்டிக்கின்றார்கள் என்றும் தங்களை அஞ்ஞானிகள் என்றே ஒப்புக்கொண்டு சீவனவுபாயக் கதைகளைப் பெருக்கிவிட்டார்கள். - 1:23; நவம்பர் 20, 1907 – இத்தேசத்தில் நூதனமாக ஏற்படுத்தியுள்ள சமயங்களையும் சமய சீவனத்திற்கு ஆதாயமாக ஏற்படுத்திக்கொண்ட சாதிகளையுங் கண்டித்து எழுதிவருங்கால் சரியைக், கிரியை, யோகம், ஞானமென்னும் பொருளில்லா வார்த்தைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதாவது, சரியை அல்லது சரிதை ஓரரைக் கட்டி விக்கிரகங்களை உண்டு செய்து வைத்து அச்சிலைகளின் மீது காலையும் மாலையும் புட்டமிடுதலும் மெழுகுதலும் வலம்வருதலுமாம். இத்தகையச் செயல்களுக்குச் சரியையென்னும் மொழி பொருந்துமா, சரியை யென்னுமொழிக்குப் பொருள் மேற்செயல்களாகும் என்றால் அதைத் தெரிந்துச் சொல்லுவாரில்லை.

இரண்டாவது கிரியை அல்லது கிரிகை அத்தேவதைக்கு ஏற்ற மந்திரந் செபித்தல் உருவேற்றலுமாம். இத்தகைய மந்திரச் செயலுக்கு கிரியை என்னும் மொழி பொருந்துமா. அன்றேல் கிரியை என்னும் மொழி மந்திரத்தை உருவேற்றல் என்னும் பொருளைத்தருமா என்றால் அதை உணர்ந்து ஓதுவாரில்லை.

மூன்றாவது, யோகம் - மூச்சையடக்குதல் - கைகால்களை முடக்குதலுமாம். இத்தகைய யோகமென்னும் மொழிக்கு மூச்சை அடக்குதல், கைகால்களை முடக்குத்லென்னுஞ் செயல்கள் பொருந்துமா, அன்றேல் யோகமென்னும் மொழி மூச்சையடக்குதல் கைகால்களை முடக்குதலென்னும் பொருளைத் தருமா என்றாலதை விவரித்தோதுவாரில்லை.

நான்காவது ஞானம் மனமடங்குதல் என்பார்கள். ஞானமென்னும் மொழிக்கு மனமடங்குதலென்னுஞ் செயல் பொருந்துமா அன்றேல் ஞானமென்னும் மொழி மடங்குதலென்னும் பொருளைத் தருமா என்றாலதன் பொருத்தங் கூறுவாருமில்லை .

மொழிக்கு மொழி பொருளற்ற நான்குவகைச் செயல்களில் கிரியை, யோகம், ஞானமென்னு மூன்றையும் விட்டு தங்கள் சீவனாதார விக்கிரகத்தை விளக்கல், விக்கிரத்தை வலம்வரல், விக்கிரகத்தைப் பூசித்துத் தங்களுக்கு வேண்டிய வரங்களை கேட்டல், விக்கிரகவூர்வலஞ் செய்தலாகிய ஆடம்பரங்களினால்