பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

580 / அயோத்திதாசர் சிந்தனைகள்


காவேரி என்பது குடிகளைக் காக்கும் ஏரியென்றும், புயலேரியென்பது பெருநீர்வளம் ததும்பிய ஏரியென்றும் வழங்கப்படும்.

5.கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை.

(ப.) கெடுப்பதூஉங் - சீர்கெடுப்பதும், கெட்டார்க்கு - அவ்வகை சீர்கெட்டோர்க்கு, சார்வாய் - உதவியாய், மற்றாங்கே - மற்றும் அக்காலத்து, யெடுப்பதூஉம் - சீர் தூக்குவதற்கும், எல்லாமழை - காரணமாயுள்ளது மழையே என்பது பதம்.

(பொ.) சீவராசிகளது சீரைக்கெடுப்பதற்கும், மற்றுமவர்களுக்கு சீரளித்துக் கார்ப்பதற்கும் எல்லாமாயுள்ளது மழையே என்பது பொழிப்பு.

(க.) வேளாளர்கள் விளைவித்துள்ள தானியங்கள் மடியவும் அதனால் சீவராசிகள் கெடவும், மற்றும் அவ்வகை மடிந்த பயிர்கள் தலை நிமிரவும், பயிர்களோங்கவும் சீவராசிகள் சிறக்கவுமாயுள்ளது மழையே என்பது கருத்து.

(வி.) காலமழைப் பெய்யாவிடின் விளைவித்த விளைவும், நட்ட நடவும் மடிந்து சீவராசிகள் புசிப்பும் அருந்துதலுங்கெட்டு சீரழிவதற்குங் காரணம் மழையேயாம்.

நட்ட நடவும் விளைத்த விளைவும் முடிதிருந்தி ஓங்கவும், தானிய சம்பத்துப் பெருகவும், சீவராசிகள் யாவற்றும் சுகச்சீரடையவுமாயுள்ளதூஉம் மழையேயாம்.

ஆதலின் உலகத்தோற்றத்திற்குக் காரணம் மழையும், அதன்கேட்டிற்குங் காரணம் மழையுமே என்பது அநுபவக் காட்சியால் உணர்ந்தநாயன் கெடுப்பதுவுங் கெட்டவற்றை எடுப்பதுவும் மழையே என்று கூறிய விரிவாம்.

6.விசும்பிற்றுளிவீழி னல்லான்மற்றாங்கே
பசும்புற்ற லைக்காண் பரிது.

(ப.) விசும்பில் - ஆகாயத்தினின்று, துளி - மழைத் திவலையானது, வீழினல்லான் - பெய்யாமற்போமாயின், மற்றாங்கே - பூமியின்கண், பசும்புல் - பசியநிறமமைந்த முதற்றாபரந், தலைக்காண்பரிது - தோற்றுவதரிதென்பது பதம்.

(க.) மழையினது திவலையானது பூமியின்கண் விழாதுபோமாயின் உலகத்தில் ஓரறிவுயிராய் முதற்றோன்றும் பசும்புல்லுங் கண்களில் காண்பது அரிது என்பது கருத்து.

(வி.) ஓரறிவுயிரென்றும், ஈரறிவுயிரென்றும், மூவறி உயிரென்றும், நாலறி உயிரென்றும், ஐயறி உயிரென்றும் தோற்றும் எழுவகைத் தோற்றத்துள் முதல் தோற்றமாம் புல்முதற்றாபரமே ஓரறிவுடைய வாதியாதலின் அத்தகையப் பசும்புல் தோற்றத்திற்கே ஆதாரம் மழை என்னப்படும். அம்மழைத்துளி பூமியின்கண் வீழாமற்போமாயின் முதல் தோற்றமாம் பசும்புல்லுந் தோற்றாதென்பது விரிவு.

7.நெடுங்கடலுந்தன்னீர்மெ குன்றுந்தடிந்தெழுலி
தானல்கா தாகிவிடின்.

(ப.) தடிந்தெழுலி - தடித்தெழும்புமேகமானது, தானல்காதாகிவிடின் - தன்காலத்திற்றான் பெய்யாவிடின், நெடுங்கடலும் - நெடிய கடலுக்கும், தன்னீர்மெ குன்றும் - தனது செயலுங் குன்றுமென்பது பதம்.

(பொ.) இருண்டெழும்பும் மேகமானது தன்காலத்தில் பெய்யாவிடின் கடலினது நீர்மெயாம் பலன்கெட்டு மணிகளுங் கொழிக்காதென்பது பொழிப்பு.

(க.) நெடுங்கடலில் தோன்றும் பாசிமணி, பவழமணி, சிப்பிமணி முதலிய தோற்றங்களுக்கு ஆதாரம் மழையேயாதலின் காலத்திற்குக்காலம் அம்மழை பெய்யாவிடின் கடலினது நீர்மெயாம் பலனுங் குன்றுமென்பது கருத்து.

(வி.) கடல்நீரை மொண்டுசென்ற கருமுகிலானது தனக்குள்ள உப்பை ஆகாய உப்புடன் சேர்த்துவிட்டு சூடுண்டாகி மின்னல்மீறி மோதியக்கினிக் கடாவு மிடிச்சுடருடன் தூவும் சுத்தநீரினது செயலால் கடலினது நீர்மெய்