பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

582 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தவமிகுதியால் தேவகதி பெறுவதும், தேவகதியால் தேவலோகம் அடைவதுமாகிய செயல்கள் யாவும் அற்று நிலைதவறிப் போமென்பது கருத்து.

(வி.) உலகத்தில் காலமழை பெய்யவும் பயிறுகள் ஓங்கவும் மக்கள் சிறப்புற்றோங்குவதுமாகிய காலத்தில் சாது சங்கங்கள் சேருவதும், தானங்கள் ஈவதும், இதயசுத்தமாம் மனமாசு கழுவுதலும் நிருவாணமாம் நித்தியசுகம் பெறுகுதலும், ஏழாவது தெய்வதோற்றமடைந்து பரிநிருவாணமுற்று தேவலோகமாம் அகண்டத் துலாவி ஆனந்த சுகவாரியில் லயிப்பதுவும் இயல்பாம். அத்தகையக் காலமழை பெய்யாது ஆற்று நீர்கள் தீய்ந்து தானியங் களுமற்றுப்போமாயின் மக்கள் யாவரும் பசிபட்டினியால் வருந்தி புசிப்பிற்கு ஆதாரந் தேடுதலும், அருந்துதலுக்கு நீர் தேடுவதுமே ஓர்பெரும் விசாரமாயிருக்கு மேயன்றி தானச்செயலும் தவவிசாரிணையுமற்று நிலைகுலைவதால் நிருவாணமென்னும் சுகநிலையும் பட்டு தேவலோகமென்னும் பெயருங்கெட்டுப் பாழடைவது நிட்சயமாதலின் வானஞ்சுருங்குமாயின் தானந் தவங்களுஞ் சுருங்கி தேவலோகமென்னும் பெயரும் நிலைகுலையும் என்பது விரிவு.

10.நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

(ப.) உலகெனின் - உலகமென்னும் பெரும்பேரானது, நீரின்றமையாது - நீரில்லாமல் அமையாதது போல், யார்யார்க்கும் - உலகிலுள்ள மக்கள் யாவருக்கும் உள்ள, ஒழுக்கு - நல்லொழுக்கச் செயல்கள் யாவும், வானின்றமையா - மழையில்லாமல் போமாயின் நிலைபெறா என்பது பதம்.

(பொ.) சருவ தோற்றங்களுக்கும் நீரே ஆதாரமாய் இருப்பதுபோல் மக்களுக்குள்ள சருவ நல்லொழுக்கங்கள் யாவற்றிற்கும் மழையே ஆதாரம் என்பது பொழிப்பு.

(க.) உலகத்தில் தோற்றும் புற்பூண்டுகள் முதல் மற்றுந் தோற்றங்கள் யாவும் அமைதற்கு நீரே ஆதாரமன்றி வேறில்லாததுபோல் மக்களது ஒழுக்கங்களாம் சீலநிலைகள் யாவும் மழையின்றி நடவாதென்பது கருத்து.

(வி.) நீரின்றி புற்பூண்டுகள் முதல் ஈறாகவுள்ள தேவர்களென்னும் எழுவகைத் தோற்றங்களும் அமைதல் அரிதாவதுபோல் சருவ மக்களுக்கும் உள்ள நற்காட்சி, நற்கடைபிடி, நல்வாய்மெய், நல்லூக்கம், நல்லமைதி, நல்லுணர்ச்சியாய ஒழுக்கங்களும், கொலை செய்யாமெய், பொய்சொல்லாமெய், களவாடாமெய், கள்ளருந்தாமெய், பிறர்மனை நயவாமெய் ஆகிய சுத்த தேகிகளாக வாழும் சீலங்களும் மழையில்லாமல் அமையாதென்பது விரிவு.

3. நீத்தார் பெருமெயென்னும் நிருவாணம் பெற்றோர் சிறப்பு

உலக பாசபந்த பற்றுக்களற்று உள் விழிபெற்று சருவமு முணர்ந்து சதாசுகத்தினிற்கு மகாஞானிகளது சிறப்பினை கூறுகின்ற படியால் இவ்வதிகாரத்தை நீத்தார் பெருமெயென வரைந்துள்ளார்.

1.ஒழுக்கத்து நீத்தார் பெருமெ விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.

(ப.) விழுப்பற்று - ஆசையற்று, ஒழுக்கத்து - ஒழுக்கத்து நின்று, நீத்தார் - பற்றை அகற்றினவர்களது, பெருமெ - உண்மெய் சிறப்பு ஏதெனில், பனுவல் - புத்தாகமத்தை, வேண்டும் - உசாவிய, துணிவு - தீவிரமென்பது பதம்.

(பொ.) ஆசையை அகற்றி ஒழிக்கினின்று பற்றற்று உண்மெய் உணருஞ் சிறப்பு யாதெனில்: புத்தாகமத்தை ஆழ்ந்துவிசாரித்தத் துணிபென்பது பொழிப்பு.

(க.) பனுவலாம் புத்தாகமத்தை ஆழ்ந்து விசாரித்த அதிதீவிரத்தால் மூவாசைகளுமற்று ஒழுக்கத்தினின்று நீத்து. பெருமெயாம் உண்மெ யுணர்ந்தார்கள் என்பது கருத்து.