பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 585


(பொ.) பொறிவாயல் ஐந்தினையும் அவித்தவனது சுகநிலையை அறியவேண்டின் புத்தேளுலகுக்கு அதிபதியாம் புத்தரே போதுஞ் சாட்சி யென்பது பொழிப்பு.

(க.) பொய்தீர் ஒழுக்கத்தினின்று பொறிவாயல் ஐந்தினையும் அவித்து ஆதிதேவனாக விளங்கி அவரால் தெய்வநிலை அடைந்த வானவர்கள் யாவருக்கும் அரசனாக விளங்குவதை ஆதிசாட்சியாகக்கொண்டு ஐந்தவித்தலின் ஆற்றலுக்கு இந்திரனேபோதுஞ் சாட்சி என்பது கருத்து.

(வி.) மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தினையும் அவித்த வல்லபங்கொண்டு ஐந்திரர் என்னும் பெயர்பெற்று ஐ,அ.ஆகத்திரிந்த வடவட்சர பேதத்தால் இந்திரரென வழங்கியதும் அப்புத்தபிரானாகிய இந்திரரே வானவர்களாம் தேவர்களுக்கெல்லாம் அரசனுங் குருவாகவும் விளங்கியதுமன்றி இத்தேசமெங்கும் புத்தபிரானையே இந்திரரென பூசித்து அரசமரத்தடியிலும் அறப்பள்ளிகளிலும் இந்திரவிழாக்கள் கொண்டாடிவந்த ஓர் பேரானந்தத்தால் இந்திரரைக் கொண்டாடியக் குடிகளை இந்தியர்களென்றும், கொண்டாடுந் தேசத்தை இந்தியதேசமென்றும் சிறப்புப்பெற வழங்கியவற்றிற்குப் பகரமாக சார்பு நூலார் அருங்கலைச்செப்பு "இந்தியத்தை வென்றான் றொடர்பாட் டோடாரம்ப, முந்தி துறந்தான் முநி" என்றும், அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார் "இந்தியக் குஞ்சரத்தை ஞானப் பெருங்கயிற்றால், சிந்தினைத் தூண்பட்டிச் சேர்த்தியே - பந்திப்பர், இம்மெப்புகழும் இனிச்சொல் கதிப்பயனும், தம்மெத்தலைப்படுத்துவார்” என்றும், மணிமேகலை ஆக்கியோன் சாத்தனார் “இந்திர ரெனப்படு மிறைவநம்மிறைவன், தந்த நூற் பிடகமாத்தி காயமதன்" என்றும், ஐம்பொறிகளை அவித்துப் பெண்ணாசையை ஒழித்தவர்களுக்கே இந்திரரென்னும் பெயர்வாய்க்கும் என்பதை சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கத்தேவர் "ஆசையார்வமோடைய மின்றியே, யோசை போயுலகுண்ண நோற்றபி, னேசுபெண்ணொழித் திந்திரர்களாய்த், தூயஞானமாய்த் துறக்கமெய்தினார் என்னும் ஆதாரங்கொண்டு ஐந்தவித்தவர்களின் சிறப்பை அறியவேண்டில் இந்தியத்தை வென்ற வானவர்க்கரசனாம் இந்திரரே போதுஞ்சாட்சியென்பது விரிவு.

6.செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

(ப.) பெரியர் - விவேக மிகுத்தோர், செயற்கரிய - யாவரும் செய்யற்கியலா ஞானசாதனங்களை, செய்வார் - முகிப்பார்கள், சிறியர் - விவேக மில்லாதவர்களோ, செயற்கரிய - செய்தற்கரிய ஞானசாதனங்களை, செய்கலாதார் - செய்யார்களென்பது பதம்.

(பொ.) விவேகமிகுத்தோர் செய்தற்கரியக் காரியங்கள் யாவையுஞ் செய்வார்கள். விவேகமில்லாதவர்களோ எளிதிற் செய்யக்கூடிய காரியங்களையும் செய்யார்களென்பது பொழிப்பு.

(க.) அறிவின் விருத்தி பெற்ற பெரியோர்கள் புலன் தென்பட உசாவி தென்புலத்தோராகி சகலராலுங் கொண்டாடப்படுவார்கள். அறிவின் விருத்தியற்ற சிறியோர்கள் எடுத்த காரியங்களையே முடிக்கவியலாது சகலராலும் இழுக்கடைவார்களென்பது கருத்து.

(வி.) ஞானமென்னும் அறிவின் மிகுத்தோர்களையே பெரியோர் களென்றும், அஞ்ஞானமென்னும் அறிவிலிகளையே சிறியோர்களென்றுங் கலை நூலோர் கூறியவற்றிற்கியைய வழிநூலாரும் ஞானமிகுத்தப் பெரியோர் செயற்கரியக் காரியங்கள் யாவையும் எளிதில் முடிப்பார்களென்றும் அஞ்ஞானிகளாகிய சிறியோர்கள் எளிதில் முடிக்குங் காரியங்களையு முடிக்கார்களென்பதற்குச் சார்பாக முதுமொழி.

ஞானமின்றிச் செய்தவந் தவமுமன்று / நயஞானமில்லாத தருமந் தருமமன்றே
ஆனதெருண ஞானமிலாத் தவமேசெய்தல் / அழுக்கறவிற் கழுவுதலு மாகுமின்னும்
மானமுறு ஞானமிலாத் தரும மிக்க / மறுவுள்ள மணியாக விருக்குமென்று
மோனமுறுந் தவமுனிவர் முன்னந்தானே / முயற்சியுடன் கண்டறிந்த முறைமெயாமே