பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மநுக்களை மயக்கி அதினால் வருந் தட்சணை திரவியங்களையும் அபிஷேக உணவுகளையும் அனுபவித்தல்.

இத்தகைய விக்கிரகத்தொழுதல் செய்யுங் கட்டிடங்களுக்குள் பறையர்களென்றழைக்கும் ஓர் வகுப்பினரை மட்டும் உள்ளுக்குச் சேர்க்காமல் இருப்பதுடன் தவரிவந்துவிடுவார்களென்னும் நோக்கமுமுண்டு.

காரணம், தாமரை தடாகங்களும் - அரசமரம், வேப்பமரம் வைத்துள்ள கட்டிடங்களும் - யோகசயன சிலாரூப அறப்பள்ளிகளும் பூர்வ புத்தசங்கத்தோர் மடங்களாதலின் பூர்வக்குடிகள் அக்கட்டிடத்தினுள் வருத்துப்போக்கிலிருப்பார்களானால் புத்ததன்ம சங்கத்தோர் சீலசமாதிகளையுஞ் சரித்திர பூர்வங்களையுந் தெரிந்து கொண்டு தங்கள் சுதந்திரங்களை விளக்கி மடங்களைக் கைப்பற்றிக் கொள்ளுவார்களென்னும் பீதியேயாம்.

ஞானமென்னும் வாக்கியத்துடன் சரியைக் கிரியை யோகமென்னும் மூன்று வாக்கியங்களைச் சேர்த்துத் தங்கள் சீவன உபாயங்களைச் செய்தபோதிலும் விவேகிகள் அவற்றையுங் கண்டித்திருக்கின்றார்கள்.

பிரம கீதை

சரிதை யாதியொரு மூன்றுஞ் சாதிப்பதுவோ பயனில்லை
அறியும்பிரமரானாலும் அறிதற்கரியதாரணங்கள் உரையுமில்லை
முடிவரிய வொன்றாய்நின்ற தனி ஞானப்
பொருளை இருளும் வெளியுமிலா போகமருவிக் களியென்றான்.

பிரபுலிங்க லீலை

உரைசெயிற் பரமஞானமொன்றுமே முத்திக்கேது
சரியைநற்கிரியை யோகந் தாமொரு மூன்றுமிங்கு
மருவுதற் கேதுவென்றே மனமுவந்துரைக்குமிந்தக்
கருவியைப் பொருளென்றெண்ணி சளிப்பவர் கயவரன்றோ.

இதிற் சரியை, கிரியை, யோக, ஞானமென்னும் வார்த்தைளுதித்த ஏதுக்கள் யாதென்பீரேல் சரி, சரியை, சரிதை என்னும் வார்த்தைக்கு சீர், சீர்பெறச் சீர்தூக்கி எனும் பொருளைத் தரும்.

கிரியை, கிரியாவிருத்தி, கிரியாபலன் எனும் வார்த்தைக்கு செயல், வினைவிருத்தி, கருமபலன் எனும் பொருளைத்தரும்.

(இரண்டு வரிகள் தெளிவில்லை )

ஞானம், ஞானி எனும் வார்த்தைக்கு அறிவு அறிவுள்ளான, விவேகம், விவேகியெனும் பொருளைத்தரும்.

இவ்வார்த்தைகளை புத்தசங்கத்தோர் எவ்வகையில் வழங்கி வந்தார்களென்றால்.

எடுக்கும் விஷயங்களை சரிவர சீர்தூக்கி கிரியை என்னும் ஓர் செயலை முடிப்பார்களாயின் யோகம் என்னும் பாக்கியம் பெருகி ஞானமென்னும் அறிவுவிருத்தியடையுமென்பதேயாம்.

எடுக்குங் காரியங்களை சரிவரச் செய்பவனுக்கு பாக்கியமுண்டாகி அறிவு பெருகும் என்னுங் கருத்தாலாண்டு வந்தார்கள்.

பூர்வ வேதாந்திகளாகும் அறஹத்துகள் நீங்கலாக தற்காலம் வேதாந்திகளென வெளிவந்திருப்போர் சரியை என்னும் விக்கிரகாராதனைச் செய்வோர் மறு ஜென்மத்தில் கிரியை என்னும் மந்திரத்தை உருவேற்றுவார்களென்றும், கிரியை என்னும் மந்திரத்தை உருவேற்றி வந்தவர்கள், மறு ஜென்மத்தில் யோக மென்னும் மூச்சை அடக்குவார்களென்றும், யோகமென்னும் மூச்சை அடக்குவோர் மறு ஜென்மத்தில் ஞானமென்னும் மனமடக்கி மௌனமடைவார்களென்றும் மூக்கறியன் கதை சொல்லி விடுகின்றார்கள். சுயம்பாகி வேலையை விடாமுயற்சியாக செய்தவன் மறு ஜென்மத்தில் உபாத்தி வேலை செய்யமாட்டான். உபாத்திவேலை செய்தவன் மறு ஜென்மத்தில் தொம்பரவத்தொழில் செய்யமாட்டான். தொம்பரவத் தொழில் செய்தவன் மறு ஜென்மத்தில் மாட்டைப்போல் பேசாமலிருக்க மாட்டான். அதுபோல் ஒரு விக்கிரகத்தை வைத்துப் பூசிப்பவன் மறு ஜென்மத்தில் மேலுமேலும் விக்கிரகபூசையைச் செய்வானன்றி வேறு செய்கையிற் பிரவேசிக்கமாட்டான்.