பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 593

போகந்தருதலாற் பொன்னே அறத்துணையோ, டேகமாமற்றொன்றுமில்” என்பது கண்டு அறத்தின் பெருக்கமே அழியா பேரின்பத்திற்கு ஆதாரமென்பது விரிவு.

10.செயற் பாலதோரு மறனே யொருவற்
குயற் பாலதோரும் பழி.

(ப.) செயற்பால தோரு - பலகாரியங்களை முடிக்குங்காலங்களிலும், யொருவற்கு - மற்றவோ ராதுலற்கு, அறனே - தன்மஞ்செய்தே யாரம்பித்தல் வேண்டும், தோரும் - பலகாரியங்களை செய்யுந்தோரும் உயற்பால - தன்னை உயர்ந்தோனென்றெண்ணி தன்மஞ்செய்யாமற்போவானாயின், பழி - நிந்தைக் குள்ளாவானென்பது பதம்.

(பொ.) ஈயாத லோபி எடுத்தகாரியம் இடிந்தென்ன முடிந்தென்னவென்பது பொழிப்பு.

(க.) ஒவ்வோர் காரியங்களை எடுத்து முடிக்குங்காலங்களிலெல்லாம் ஆதுலருக்கு அன்னமூட்டிச் செய்வது செய்தொழில் முட்டின்றி முடியு மென்பதாம். அங்ஙனம் ஆதுலரை நோக்காது அரியகாரியத்தைச் செய்தல் அவர்கள் நிந்தையாற்படுமென்பது கருத்து.

(வி.) செய்யுங்காரியங்கள் எவற்றிலும் தன்மத்தை முன்னிட்டுச் செய்வதே சித்தியும் அங்ஙனம் தன்மநிலை கொள்ளாது செய்யுங்காரியங்களிற் பழியுமுண்டாமென்பதற்குச் சார்பாய் அறநெறி தீபம் "செய்தொழிலே சித்திக்க செல்லுக நல்லறநெறியில், உய்த்தவமு முண்மெ நிலையாவதுவுமதுவதுவாம், மெய்த்தவமே கோறியற நெறிதவரி வாழ்வதெனில், பொய்த்தவமேயென்றுபழி பலநாவுந் தூற்றுமதோ” என்று கூறியுள்ளவை ஆதாரங்கொண்டு தன்மத்தை முன்னிட்டே சகலகாரியங்களிலும் சித்திப்பெற வேண்டுமென்பது விரிவு.

5. இல்வாழ்க்கை

சாக்கைய முநிவரால் போதித்துள்ள இல்லற துறவற ஒழுக்கங்களில் இல்லறத்தையே முதலாகக்கெண்டு சீலமிகுத்துத் துறவறமாஞ் சங்கஞ்சேர்ந்து வீடுபெறும் சுகவழி வகுத்துள்ளதைக்கண்ட இன்னூலினாக்கியோன் தானும் இல்லறவாழ்க்கையில் நல்லொழுக்கத்தை இனிது வகுத்திருக்கின்றார்.

1.இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை.

(ப.) இல்வாழ்வா னென்பா - இல்லறத்தானென் றழைக்கப்படுவோன், னியல்புடைய - வழக்கமாக வுடைய, மூவர்க்கு - துறந்த சங்கத்தோர்களுக்கும், துறவா ஆதுலர்களுக்கும், மரித்தோர்களுக்கும் ஆகிய மூவர்களுக்கும், நல்லாற்றி - நல்லசுகவழியில், னின்ற - நிலைத்த, துணை - உதவியாவரென்பது பதம்.

(பொ.) துறந்துள்ள சமணமுநிவர்களுக்கும், துறவா கூன் குருடு சப்பாணி முதலியவர்களுக்கும், திக்கற்று மரணமடைந்தோர்களுக்கும் குடும்பத்துடன் வாழ்ந்துள்ளவனே நிலையான துணையென்பது பொழிப்பு.

(க.) இல்லறப் பற்றினை ஒழித்து ஞானசாதனத்தில் இருப்பவர்களுக்கும், யாதாமொரு தொழிற்செய்வதற்கும் இயலா அங்கவீனராம் பிணியாளர்களுக்கும் திக்கற்றப் பிணங்களுக்கும் நிலையாக நின்று உதவிபுரிவோர் இல்லறவாசிகளாம் நல்லறக் குடும்பிகளென்பது கருத்து.

(வி.) இல்லறவொழுக்கத்தைத் தனது இல்லாளுடன் நல்லறமாக நடாத்தும் இல்வாழ்வோன் இல்லந்துறந்த சங்கத்தோர்களாம் சமணமுநிவர்களுக்கும், அஞ்ஞானக் களங்கமமைந்த ஆதுலர்களாம் அங்கவீனர்களுக்கும், அநாதைப் பிணங்களுக்கும் ஆதரவாக நிலைத்துள்ளவனெனக்கூறியுள்ளவற்றிற்குச் சார்பாய் அறநெறித்தீபம் "இல்லறத்தி னிழுக்காற்றி யில்வாழ்வோன் பயனென்னில், வல்லறவோர் சாதனத்தை மாதவத்திலாழ்த்துவதும், புல்லுரவாமா துலர்க்குப் புசிப்பீய்ந்து காப்பதுவும், முல்லுரவற்றிறந்தோராம் மூவர்க்குந் துணையாமால்" என்னும் ஆதாரங்கொண்டு இயல்பாகவரும் சங்கத்துசமண முநிவர்களுக்குத், ஆதுலருக்கும், இறந்தோர்க்கும் இல்வாழ்வோனே துணையென்பது விரிவு.