பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 595


(வி.) மெய், வாய்க், கண், மூக்குச், செவி என்னும் ஐம்புலனுகர்ச்சியின் பீடம் ஈதீதென்றறிந்த தென்புலத்தோருக்கும், மக்களென்னும் ஆறாவது தோற்றங் கடந்து ஏழாவது தோற்றமாம் நிருவாணமுற்று தெய்வநிலையடைந்தவர் களுக்கும் ஒக்க விருந்தினர்களாயிருந்து அவர்களுக்குள்ளக் கருமக் கிரியைகள் யாவற்றிற்குந் துணையாகவுள்ள பௌத்த உபாசகர்களாம் நல்லறக் குடும்பிகளை செல்வமும் விவேகமுங் குறைவுற்ற மற்றும் இல்லறக்குடிகள் சிரமேந்தி ஓம்புவது இயல்பாதலின் உபாசகர்களாம் நல்லறக் குடும்பிகளின் சிறப்பை விளக்க ஐம்புல அவாவோர் ஓம்புந்தலையென்பதற்குச் சார்பாய் அறநெறித்தீபம் 'இல்லறமாநெறி நிற்போரியல்புடைய மூவர்க்கும், நல்லறமே துணைகொண்டு நற்றவத்தினுறுதி செயும், வல்லறத்தோர் வாழ்க்கைதனை மணணகத்தோர் கண்டோம்பி, சொல்லறத்தி நின்ற வரைசிரமேற்பர்சிரமேற்பர்” என்றும், அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார் பிச்சையுமையமுமிட்டுப் பிறன்றார, நிச்சலு நோக்காதுபொய்யொரீ இ-நிச்சலுங், கொல்லாமெ காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே, இல்வாழ்க்கை யென்னுமியல்பு, "செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப், பல்கிளையும் வாடாமற் பார்த்துண்டு - நல்ல தானமறவாத தன்மெயரேலஃதென்பார், வானகத்து வைப்பதோர் வைப்பு” என்றும், பெருந்திரட்டு"சூழ்வானெறியினியன் மூவர்க்குந் துணிபின் றுறுதுணையாய்த், தாழ்வானதிலாதேநின்றும் பரத்தனி வாழ்வருளித்தானாழ் வாருதிசூழுலகின் பொடுமற்றதனின்பும் பெறலால், வாழ்வானென்போனில் வாழ்பவனே மற்றயரஃதுளரோ” என்று கூறியவற்றின் ஆதாரங்கொண்டு ஐம்புல னவா மிகுத்தக் குடும்பிகள் உபாசகர்களை சிறப்பிக்கும் நிலையினது விரிவு,

4.பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.

(ப.) பழியஞ்சி - பிறர் நிந்தனைக்கஞ்சி, பாத்தூணுடைத்தாயின் நியாயவழியில் சம்பாதித்து உண்டுடுப்பானாயின், வாழ்க்கை - அவனது இல் வாழ்க்கையில், வழியெஞ்ச - எடுக்குந் தொழிலுக்குத் தடையுண்டாதல், லெஞ்ஞான்று - எக்காலத்தும், மில் - இல்லையென்பது பதம். - (பொ.) இல்வாழ்வோன் நியாயவழியில் சம்பாதித்துக் கொடுத்து உண்பானாயின் அவனது வாழ்க்கைக்கு எடுக்கும் முயற்சிகள் யாவும் முட்டின்றி முடியுமென்பது பொழிப்பு.

(க.) இல்லாளுடன் குடும்பியென வாழ்பவன் தனது தேகத்தை வருத்தி சம்பாதித்துத் தன்னையடுத்தவர்களையும் போஷித்து ஆதுலருக்கும் ஈய்ந்து ஆனந்த வாழ்க்கையோடு எடுக்குந் தொழில்கள் யாவும் எக்காலத்துந் தடையின்றி முடியுமென்பது கருத்து.

(வி.) எண்வகை வதுவையில் ஒன்றேற்று இல்வாழ்க்கையில் ஒழுகுவோன் சூதினாலுங் களவினாலும் பொய்யாலும் பாவவழியில் பொருளை சம்பாதிக்காது உழைப்பினாலும் நீதியினாலும் நெறியினாலும் புண்ணிய வழியில் பொருளை சம்பாதித்து தானுந் தனது உரவின் முறையோரும் புசிப்பதுடன், துறந்தார்க்குந் துறவாதவர்க்கும், இறந்தோர்க்கும் ஈய்ந்து இனிது செய்வோர் காரியங்கள் யாவும் இன்புற்று முடியுமென்பதற்குப் பகரமாக அறநெறித்தீபம் “பழிபாவம் வழியஞ்சி பார்த்துண்ணு மில்லோன்றன், அழியாத வறநெறியி லென்றென்று நின்றுசுகங், கழியாதுயில் வாழ்க்கைக் காமுறுவோர் செய்கையது, இழியாது யெக்காலு மீடேற்ற முறுமாமால்” என்று இல்வாழ்வோன் நீதியின்வழியால் சம்பாதித்தப் பொருளை நீதியும் நெறியும் வாய்மெயும் அமைந்த பெரியோர்க்கு இட்டுண்டு வாழ்பவன் எடுக்குஞ் செயல்கள் யாவும் இடுக்கின்றி முடியுமென்பது விரிவு.

5.அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது.

(ப.) அன்பு - கருணையும், மறனு - யீகையுமாய விரண்டும், முடைத்தாயி - பெற்றிருப்பானாயின், னில்வாழ்க்கை - குடும்பவியல்பிலேயே, பண்பும் - குணவமைதியும், பயனும் - அதன் பலனும், மது-அதுவே யென்பது பதம்.