பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

598/ அயோத்திதாசர் சிந்தனைகள்

சுத்தசீலனாதற்கு இல்லறமே நல்லறமாகக் கண்ட ஆசான் கூறியவற்றிற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “மருவி யகாதன் மனையாளுந்தானும், இருவரும் பூண்டுயப்பி நல்லால் - ஒருவரால், இல்வாழ்க்கையென்னுமியல்புடையவான் சகடம், செல்லாது தெற்றிற்று நின்று” என்றுங் கூறிய ஆதாரங்கொண்டு அறமே இல்வாழ்க்கை, இல்வாழ்க்கையே அறமாதலின் அவ்வறத்தைப் பிறர்பழிப்பின்றி நடாத்தவேண்டுமென்பது விரிவு.

10.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்.

(ப.) வையத்துள் - பூமியின்கண், வாழ்வாங்கு - இல்வாழ்க்கைநெறி பிறழாது, வாழ்பவன் - வாழும்படியானவன், வானுறையுந் - அகண்டத்துறையும், தெய்வத்துள் - புத்தேளுலகத்துள், வைக்கப்படும் - எவ்விதத்துஞ் சேர்க்கப்படுவா ரென்பது பதம்.

(பொ.) இல்லறநெறி பிறழாது வாழ்பவன் எவ்விதத்தும் புத்தேளுலகைச் சேருவானென்பது பொழிப்பு.

(க.) இல்லாளோடுங்கூடி நல்வாழ்க்கை நடத்துவோன் இல்லற நெறியினேதுவால் நல்லற நிகழ்ச்சியாம் வானுறை தேவர்கதியின் தானங்கிடைக்கும் என்பது கருத்து.

(வி.) துணைநலங்கொண்டு வாழும் இல் வாழ்வோன் இல்லறநெறி பிறழாது துறந்துள்ளவர்களுக்கு வேண்டிய துணைக் கருவிபோலிருந்தும், துறவாத ஆதுலர்க்கு ஆதரணைக்கர்த்தனாகவிருந்தும் இறந்தோர்களை இல்லம் நீக்கி இடுகாடு சேர்ப்பதுமாய தன்மவாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்பவன் கூடிய சீக்கிரம் பாசபந்தக் கயிறுகளாம் வாணமற்று நிருவாணமுற்று வானவர்க்கரசனாம் புத்ததேவனது பதும பாதத்தைச் சேர்வானென்பதற்குச் சார்பாய் இஸ்காந்தம் “துறந்தவர்கள் வேண்டியதோர் துப்புறவுநல்கி, யிறந்தவர்கள் காமுறு மிருங்கடனியற்றி, யறம்பலவுமாற்றி விருந்தோம்பு முறையல்லாற், பிறந்த நெறியாலுளதோர் பேருதவியாதோ", அறநெறிச்சாரம் 'செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப், பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு - நல்ல, தானமறவாத தன்மெயரே லஃதென்பார், வானகத்து வைப்பதோர்வைப்பு” என்னும் ஆதாரங்கொண்டு இல்லறநெறியில் வழுவாது வாழ்பவன் துறவறநெறியிற் சுருக்கத்திலயித்துப் பரிநிருவாணமுற்று சுயம்பிரகாசனாகி வானவர்க்கு அரசனாம் ஆதிதேவனடியை அடைவானென்பது விரிவு.

6. மனையறமாம் வாழ்க்கைத் துணை நலம்

தலைவனும் தலைவியும் மனையறம் வழுவாது வாழ்தலின் சுகாசுகங்களை விளக்குகின்றார்.

1.மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

(ப.) மனைத்தக்க - தன தில்லத்திற்குத்தக்க, மாண்புடையளாகித் - கற்பிற்கினிய சிறந்தவளை, தற்கொண்டான் - தனக்கென்று சேர்த்துக் கொள்ளுவானாயின், வளத்தக்காள் - நீர்வளம் நிலவள முடையவளாகி, வாழ்க்கை -இல்லறச்சுகத்திற்கு துணை, வாழ்க்கைத் துணை - யாவா ளென்பது பதம்.

(பொ.) இல்லத்திற்குத் தக்க சிறந்தகுணத்தாளைத் தனக்குத் துணையாக சேர்த்துக்கொள்ளுபவன் நீர்வளம் நிலவளம் நிறைந்த சுகவாழ்க்கைப் பெறுவானென்பது பொழிப்பு.

(க.) கற்பிற்கினிய மாண்புடையாளைத் தனது இல்வாழ்க்கைக்குத் துணைவியாகச் சேர்த்துக்கொள்ளுவானாயின் அவளது கற்பின் வளமொல் நீர்வளம் நிலவளம் பெருகி சருவசீர்களுக்கும் உபகாரிகளாகி சுக வாழ்க்கை பெறுவான் என்பது கருத்து.

(வி.) இல்லறம் நடாத்துவதில் பிரமம், பிரசாபத்தியம், ஆரூடம், தெய்வம், கந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்னும் எட்டுவகை விவாகத்துள்