பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 601


(க.) காலையில் துயில்விட்டெழும்போதே தன் கணவனையே தெய்வமெனத்தொழுது இல்லறநெறி வழாது நடாத்துபவள் வானத்தை நோக்கிப் பெய்யவேண்டுமென்றால் பெய்யுமென்பது கருத்து.

(வி.) நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னுங் கற்பிநிலை பிறழாது தன் கணவனையே கடவுளெனக் கருதி வாழ்க்கைத் துணையாக நின்று புலன் தென்பட்டோராம் தென்புலத்தோருக்கும், அநாதை ஆதுலர்கட்கும், இறந்து இழிவடைவோருக்கும் துணையாயிருந்து துயில்நீற்று எழும்போதே தனது கொழுனனைத் தொழுது மனமாசகற்றி வாழும் பெண்மணியானவள் பூமிவளம் பெருக வானம் பெய்யவேண்டுமென்று கோறும்போதே தனக்கு யாதொரு பிரிதிபலனுங் கருதாது தனது கணவன்சொல் தவிறாது மூவர்க்குந் துணையாயிருந்து ஈபவளாதலின் அவளின் கோரிக்கை கூடுமென்பதற்குச் சார்பாய் அருங்கலைச்செப்பு "இல்லறவாழ்க்கைக் கினியாளகமுறில், சொல் லெல்லாஞ் செல்லுந் துணை", "வாழ்க்கைத் துணைநல முள்ளாள் தன் வாக்குப், பாழ்ப்போகாதென்றும்பகர்” “கற்புக்கினியாளாய் கணவனையே பேணும், பொற்புடையாள் வாக்கதனைக் காண்" என்னு மொழிகொண்டு வேறொரு தெய்வத்தையும் நம்பாது தனது கணவனையே தெய்வமென நம்பி அறநெறி வழுவாது நடாத்துபவளின் வாக்கு தவிறா தென்பது விரிவு.

6.தற்காத்துத் தற்கொண்டாற் பேணித்தகை சான்ற
சொற்காத்த சோர்விலாள் பெண்.

(ப.) தற்காத்து - தனது கற்புநிலையைக் காப்பதுடன், தற்கொண்டாற் - தன்னைக்கொண்டக் கணவனையும், பேணி - அன்புடனாதரித்து, தகைசான்ற - இருவருக்கு மோர் கவசத்திற் கொப்பாக, சொற்காத்து - தனது நாவைக்காத்து, சோர்விலாள் - கற்பின் நிலை பிறழாது வாழ்பவளே, பெண் - துணைவி யென்பது பதம்.

(பொ.) தனது கற்பின் நிலையைக் காத்துக்கொள்ளுவதுடன் தனது கணவனையுங் கவசம்போல் காத்து தனது நாவையுங்காத்து தானுங் கலங்காமல் நிற்பாளாயின் அவளையே கற்புநிறைப் பெண்ணென்பது பொழிப்பு.

(க.) பெண்ணென்னும் பெயர்பெற்றவள் தனது கற்பினைக் காப்பதிலும், தன் கணவனைக் காப்பதிலும், தன்னாவைக் காப்பதிலும் தளர்வுறாதிருப் பாளாயின் இல்வாழ்க்கைப் பெண்களில் அவளே சிறந்த கற்புடையா ளென்பது கருத்து.

(வி.) பெண்ணானவள் தனக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னுங் கவசத்தால் காத்துக்கொள்பவளாகவும், தனது கணவனுக்கு யாதொரு குறைவுமின்றி புசிப்பூட்டிக் காத்துக்கொள்பவளாகவும், தனது வாக்கினால் ஒருவரையுஞ் சுடச்சொல்லாது காத்துக்கொள்பவ ளாகவும் உள்ள நீதிநெறிக் கவசம்பூண்டு சோர்வுரா கற்புநிலையில் நிற்பவளே பெண்களிற் சிறந்தவளென்பதற்கு சார்பாய் குறுந்திரட்டு “தலைவனைக் காப்பதல்லால் தன்னையுங் காத்துகற்பி, நிலைதனிற் பிறழாநோன்பு நோற்பவ ளாவளென்னில், பலகலை பயின்றவில்லோன் பாக்கியவாளனென்னும், சிலைநுதல் விழியாள் வாழ்க்கை செவ்வையிற்செவ்வையாமே" என்னும் ஆதாரங்கொண்டு தன்னையும், தன் கணவனையும், தன் வாக்கையும் சீலகவசத்தால் மூடிக் காப்பவளே வாழ்க்கைத் துணை நலமாயப் பெண்ணென்பது விரிவு.

7.சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பதே தலை.

(ப.) சிறைகாக்குங் - பெண்களின் கற்பைக் காக்குங், காப்பெவன் - காவலனெவன், செய்யு - மனைத்தொழிலை நடத்தும், மகளிர் - பெண்களின், நிறைகாக்குங் - கற்பிற்குக் குறைவராது, காப்பே - காத்துக்கொள்ளுபவளே, தலை - இல்லின் தலைவியாவாளென்பது பதம்.

(பொ.) பெண்களின் கற்பைக் காப்பவனும், வேறொருவனுளனோ, இல்லை, வாழ்க்கைத் துணையாம் இல்லாளே தனது கற்பைக் காத்துக் கொள்ளுவதே தலையென்பது பொழிப்பு.