பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 603


(பொ.) கற்பினது புகழ்ச்சியில்லா மனையாளைச் சேர்ந்துள்ளவனுக்கு யாதொரு சுகமுமில்லாததுடன் தன்னை இகழ்வோர்முன் தனதுநடை வலுவுங்குன்றிப் போமென்பது பொழிப்பு.

(க.) இல்வாழ்க்கையில் புகழினைத்தரும் மனையாள் இல்லாதவனுக்கு சகல பாக்கியங்களுமிருந்தும் சுகமில்லாததுடன் தன்னை அவமதிப்போர் முன்பும் தனது வீரிய நடைக் குன்றிப்போமென்பது கருத்து.

(வி.) குணவதி, பதிவிரதி, கற்பிநிதி என்னும் புகழ்பெயரற்று நீலி யென்னும் பெயர்பெற்றவள் வாழ்க்கைக்குத் துணையாவளேல் பதிக்குப் பலபாக்கிய மிருந்தும் இல்லையென்பதுடன் தன்னை இகழ்வோரைக்கண்டு தலை குனிதற்கும் ஏதுவாகி தனது வீரிய நடையுங் குன்றி இழிவையும் பெறுவானென்பது விரிவு.

10.மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல னன்மக்கட் பேறு.

(ப.) மங்கல மென்ப - மங்கல மென்று கூறுமொழி, மனைமாட்சி - மனைவியினது கற்பின் சிறப்பு, னன்மக்கட்பேறு - இனிய மக்களைப் பெறுதலுமேயாம், மற்றத வேறொன்றும், னன்கல - மங்கலமல்லவென்பது பதம்.

(பொ.) மங்கலமென்று கூறுமொழியானது வாழ்க்கைத்துணைவியாம் இல்லாளினது கற்பின் சிறப்பும், இனிய மக்களைப் பெறுதலுமென்பதே பொழிப்பு.

(க.) இல்லத்தில் சகலவாத்திய முழங்குதலும், வாழைக்கமுகை நாட்டுதலும், மஞ்சள் குங்குமந் தீட்டுதலும் மங்களமாகாவாம். மனையாள் கற்பினது சிறப்பும், நன்மக்கட் பேறும் மங்களமென்பது கருத்து.

(வி.) இல்லந் திருத்தி சாந்திடுதலே மங்களமென்றும், தீபாலங்கிரதஞ் செய்வதே மங்களமென்றும், பற்பல வாத்தியகோஷ முழங்குவதே மங்கள மென்றும், கோடியுடுத்திக் குங்குமமஞ்சள் பூசுவதே மங்களமென்றும், பல்லாண்டு கூறுவதே மங்களமென்றுங் கூறுவர். அவைகள் யாவும் மங்களமாகாவாம். மங்கலமென்பதியாதெனில்:- தலைவனும், தலைவியும் ஒருமனப்பட்டு அன்புபொருந்தி வாழ்தலும், பெறுமக்கள், இனியவர், கல்வியாளர் உபகாரிகள், ஒழுக்கமுள்ளாரென்னும் சிறப்புப்பெயர் பெறுதலுமே மங்கலமொழியின் விரிவு.

7. புதல்வரைப் பெறுதல்

மக்களின் சந்ததி மறையாமலும், குடும்ப விருத்திக்குறையாமலும், தங்கள்வரன்முறையோர் பெயர் அழியாமலும் நீடிய வாழ்க்கைப் பெறுதற்கு மக்கட்பேறே பெரிதாதலின் அதனது சிறப்பையும் அன்பையும் இவ்விடத்து விளக்குகின்றார்.

1.பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற.

(ப.) பெறுமவற்றுள் - புத்திரரைப் பெறுவதுள், யறிவறிந்த - விவேகமுதிர்ந்த, மக்கட்பேறல்ல - புத்திரரையன்றி, பிற - வேறொன்றும், யாமறிவதில்லை - யாம் கண்டிலோமென்பது பதம்.

(பொ.) விவேக மிகுத்தப் புத்திரரைப் பெறுவதினும் வேறாரு சிறப்பும் இல்லை என்பது பொழிப்பு.

(க.) ஓர் குடும்பத்தில் அறிவு மிகுத்த புத்திரரைப் பெறுதல் மேலான பாக்கியமேயன்றி வேறுபாக்கியம் இல்லையென்பது கருத்து.

(வி.) இல்லத்தில் தனபாக்கியம், தானியபாக்கியம், நிறைந்திருப்பினும் விவேகமிகுத்தப்புத்திரபாக்கியம் ஒன்றில்லாமற் போமாயின் மற்ற பாக்கியங்கள் யாவும் அழிவதற்கு ஏதுவுண்டாமன்றி விருத்திப் பெறாதென்பது அநுபவ மாதலின் குடும்பத்தில் தோன்றும் புத்திரர்களில் அறிவு மிகுத்த ஒருவன் தோன்றுவானாயின் அவனினும் மேலாய பொருளில்லையென்பதற்குச் சார்பாய்