பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

608 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கண்ணீரைப் பெருக்குவான் ஆதலின் அன்பினை யடைக்குங் கதவுவொன்றில்லை யென்பது கருத்து.

(வி.) சருவசீவர்களையு மடித்துத் தின்னும் துஷ்டப்புலியேயாயினும் தனது குட்டிகளுடன் அன்புபொருந்தக் கூடிவிளையாடும். சகல மக்களுக்குந் துன்பத்தை விளைவிக்கும் விஷத்தேளேயாயினுந் தன்னினத்துடன் அன்பு பொருந்த வாழும். விஷம்பெற்றப் பாம்புகளேயாயினும் தன்னினத்துடன் அன்பு பொருந்தி விளையாடும். ஆட்டுக்கொலை, மாட்டுக்கொலை, மனிதக்கொலைபுரியுங் கொலைஞர் கூட்டத்தோரேயாயினும் அவர்கள் உரவின்முறையோருடன் அன்புபொருந்தியே வாழ்வார்கள். அன்னியமக்கட் பொருளை அடித்துபரிக்குங் கள்ளர்கள் கூட்டத்தோர்களேயாயினும் தங்கடங்கள் கூட்டத்தோர்களுடன் அன்புபொருந்தியே வாழ்வார்கள். ஆதலின் சருவசீவர்களின் விருத்திக்குங் காரணம் அன்பென்றே கண்டுணர்ந்த நமதையன் அன்பினையடைக்கு மோர் தாளில்லையென்பதைத் துணிந்து கூறியுள்ளா ரென்பது விரிவு.

2.அன்பிலா ரெல்லாந் தமக்குரியரன்புடையா
ரென்பு மூரியர் பிறர்க்கு.

(ப.) அன்பிலா - உழுவிலார், ரெல்லாந் - எல்லவரும், தமக்குரிய - தமக்குரியவர்களுக்கே வுபகாரிகளாவர், ரன்புடையா - அன்பின் மிக்கோர், பிறர்க்கு - அன்னியர்களுக்கு, ரென்பு முரியர் - தங்களன்பையும் உரியதென வருள்வாரென்பது பதம்.

(பொ.) அன்பின் மிகுத்த மேலோரது என்பும் பிறருக்கு வுபகாரிகளாக விளங்கும். அன்பிலாக் கீழோர் தங்களுக்குரியவர்களுக்குமட்டிலும் உபகாரிகளாவரென்பது பொழிப்பு.

(க.) சருவசீவர்களையும் அன்பு பொருந்தி காப்பவர்கள் எலும்புந்தோலுமாக மெலிவுறினும் பிறர்க்குபகாரஞ்செய்வதையே நோக்குவர். அன்பிலார் தன சம்பத்தைப்பெற்று தடிசோம்பலுற்றிருப்பினும் தனது சுற்றத்தோருக்கே வுபகாரிகளாக விளங்குவார்களென்பது கருத்து.

(வி.) சீவகாருண்யமற்ற அன்பிலார்கள் தங்களுக்குரிய சுற்றத்தோர் களுக்கே உபகாரிகளாக விளங்குவார்களன்றி ஏனைய மக்களையும் ஏனைய சீவப்பிராணிகளையும் நோக்கார்கள். சீவகாருண்யமும் அன்பும் நிறைந்தவர்கள் என்பேவோருருவென மெலிந்திருப்பினும் ஏனைய மக்களுடையவும் ஏனைய சீவப்பிராணிகளுடையவுந் துக்கங்களையே நீக்கி ரட்சிப்பார்கள். இதற்குச் சான்றாய் மூவாயிரவருடங்களுக்குமுன்பு அன்பே வோருருவெனத்தோன்றி சிவனென்னும் பெயரும்பெற்று அவலோகிதனென விளங்கிய சித்தார்த்தி சக்கிரவர்த்தியை தகனஞ்செய்த யென்பும் அன்புகொண்டுள்ளதென்பதை தற்கால பிரிட்டிஷ் ஆட்சியார் பிஷவாரென்னுந் தேசத்துப் புராதனக் கட்டிடத்தை தோண்டியகால் கண்டெடுத்த சித்தார்த்தரது என்பினை கண்டு அன்புருகி அகிலமெங்கும் அறிவித்ததினால் அவ்வென்பின்மீது அன்பார்ந்தவோர் பர்ம்மியவம்மை சிறந்த கட்டிடங்கட்டி அதனுள் வைக்கவேண்டுமென ஒருலட்ச ரூபாய் உடனுக்குடன் அனுப்பிய அன்பின் மிகுதி என்பினதுதோற்றமா அன்றேல் அன்பினது தோற்றமா என்றாராயுங்கால் அன்பின்மிகுத்த சிறந்த வுருவினது என்பின் தோற்றமேயாதலின் அன்பின் மிக்கோர் என்பும் பிறருக்குரிய தாகுமென்பது விரிவு.

3.அன்போ டியைந்த வழக்கென் பவாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு.

(ப.) வாருயிர்க் - தோற்று மக்களுக்கு, கென்போடியைந்த - எலும்பினோடமைந்த, தொடர்பு - விட்டகுறை யாதெனில், அன்போடியைந்த - அன்பினோடு பொருந்திய, வழக்கென்ப - இயல் பென்பது பதம்.

(பொ.) சருவ வுயிர்களின் தோற்ற நல்லொழுக்கங்களுக்கும் ஆதாரமாக நின்று விளங்குவது பூர்வ என்பென்னும் உருவக அன்பின் வழக்கே விட்டகுறைவில் வந்து தோன்றுமென்பது பொழிப்பு.