பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஈய்ந்து அவர்கள் ஞானப்பேற்றை விருத்தி செய்வதுடன் சீவிக்க சக்தியற்ற ஆதுலருக்கீய்ந்து ஆதரித்தல்.

ஈஸ்வரபூசை - நீதி நெறியினின்று தீவினையை வெல்லுதற்கு அறவழியானை சிந்தித்தல்.

சித்தாந்த சிரவணம் - ஞான சங்கத்தோரை வணங்குதலும் அவர்கள் அறிவுரைக் கேட்குதலும்.

லஜ்ஜை - பொல்லாங்கான காரியங்களில் வெட்கமடைதல்.

மதி - ஒருவர் சொல்லுவதையும் எழுதிவைத்திருப்பதையும் தேறவிசாரித்து நம்புதல்.

செபம் - ஒழிந்த நேரங்களில் வீண்காலம்போக்காமல் பஞ்ச மந்திரங்களாகும் சீலங்களை சிந்தித்தல்.

விரதம் - மனோவாக்குக் காயங்கள் என்னும் திரிகரணங்களால் அன்னியருக்குத் தீங்கு நேரிடாமல் கார்த்தல்.

ஆசனம்

ஞானசாதனங்களை உட்கார்ந்து சாதிப்பதற்கு ஒன்பதுவகை ஆசனங்களை வகுத்தார்கள். அதாவது

சுவஸ்திகம் - கோமுகம் - பதுமம் - வீரம் - கேசரி - பத்திரம் - முத்தம் - மயூரம் - சுகம் என்பனவாம்.

சுவஸ்திகம் - வெண்ணிற வஸ்திரம் பூமியில் விரித்து உட்காருதல்.

கோமுகம் - பசுவின் சாணச் சாம்பலை ஒரு வஸ்திரத்தின்மேல் பறப்பி இன்னொரு வஸ்திரம் மேலிட்டு அதன்மீது உட்காருதல்.

வீரம் - புலித்தோலின் மீது உட்காருதல். கேசரி - புள்ளிமான் தோலின்பேரில் உட்காருதல். பத்திரம் - வில்வ இலையைப் பறப்பி அதன்மீது உட்காருதல். முத்தம் - வாயல் மத்தியில் வெளிதோன்ற உட்காருதல். மயூரம் - இரத்தின கம்பளம் விரித்து உட்காருதல். சுகம் - தனக்கு சாவகாசமும் சுகமும் தோன்றுமிடத்தில் உட்காருதல்.

பிராணாயாமம்

மேற்கூறியுள்ள ஆசனங்களில் ஒன்றில் உட்கார்ந்துக்கொண்டு பஞ்சபொறிகளின் பிராணாதாரங்களை நோக்குதல்.

பிரத்தியாகாரம்

அந்நேரத்தில் தன் மனதை உலகவிவகாரங்களிற் செல்லவிடாமல் ஆசானருளிய உபநயனபீடத்தில் நிறுத்தல்.

தாரணை

உடலை தளராதிருத்தி உபநயன உள்விழி பார்வையால் ஊடுருவி நிற்றல்.

தியானம்

நித்திறையை செயித்து ஆனந்த நித்திறையாம் சதாவிழிப்பினிற்றல்.

சமாதி

இத்தியாதி சாதனப்பெருக்கத்தால் அழியா பாக்கியம் பெற்று ஆதியில் தோன்றி ஞானநெறி விளக்கிய குருவுக்கு சமநிலையடைதல். ஆதிக்குச் சமமாவதே சம ஆதியென்றும் சமாதி என்றும் கூறப்படும்.

இந்த எட்டுவகை யோகங்களில் ஒருயோகம் மனிதனுக்குக் கிடைத்துப் பெருகுமாயின் அதனைக் கள்ளர்களேனும் மற்றவர்களேனும் அழிக்கமுடியாது. இவ்வியோகம் நாளுக்குநாள் பெருகி துக்கம் என்பது அற்று சதானந்தத்தை விளைவிக்கக்கூடியதாய் இருக்கின்றபடியால் மேற்கூறியுள்ள பூ யோகம், தனயோகம், மனைவியோகம் மூனறையுஞ் சிறப்பிக்காமல் எட்டுவகை அழியா யோக பாக்கியத்தை அருளிச் செய்தார்கள். அழியா யோகம் அஷ்டயோகமும் ஆனந்தபோகம் அருள் நிறைவுமாம். - 1:25; டிசம்பர் 4, 1907 -