பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 613


(க.) தலைவனுந் தலைவியும் அன்பு பொருந்தி செய்யுந் தானமே விசேடித்ததாகும். இவற்றுள் தலைவி முகமலர்ச்சியின்றி தலைவன் முகமலர்ச்சிக் கொண்டு செய்யுந் தானமானது பலன்தராவென்பது கருத்து.

(வி.) அகனமர்வில்லாதவளாம்உள்ளன்பு இலாதவளுடன் முகனமர்ந்த வனாம்முகமலர்ச்சியுள்ளோன் கலந்து விருந்தோம்புதல் வீணேயாதலின் தலைவனுந் தலைவியும் அகமுகமலர்ந்து செய்யுந்தானமே விருந்தோம்பலிற் சிறந்ததென்பவற்றிற்குச்சார்பாய் பெருந்தேவனார் பாரதம் "மலர்ந்தமுகத்தானு மதுரவுரையாளு, நலந்தந்திடுவர்கணல்லோர் - புலந்திருந்த, இன்னாமுகத்தா னருளாதிடும்பொருள்கள், தன்னாற்ப யனுண்டோதான்" எனும் ஆதாரங் கொண்டு இல்லாள் அகமலராது தான் முகமலர்ந்து விருந்தோம்புதல் வீணேயென்பதுவிரிவு.

5.வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலன்.

(ப.) வித்துமிடல் வேண்டும் - விதைவிதைத்தல்வேண்டும், கொல்லோ - ஆயினும், விருந்தோம்பி - வருவிருந்தினரைக் காப்பதாயின், புலன் - விளைநிலத்தில், மிச்சின் - மிகுதியாய, மிசைவான் - பலனை யடைவானென்பது பதம்.

(பொ.) விருந்தோம்பி விதை விதைப்போன் மிக்க மேலாய பயனை யடைவானென்பது பொழிப்பு.

(க.) வரும்விருந்தினரைக் காக்கும் வேளாளனது விளைநிலம் வேணபலனை யளிக்குமென்பது கருத்து.

(வி.) பூமியைத் திருத்தி பயிறுசெய்யும் வேளாளனது யீகை இல்லாளுடன் விருந்தோம்பலில் லயிக்குமாயின் அவன் செய்யும் விவசாயம் மேலாயபலனைத் தருவதுடன் வருவிருந்தும் பெருகுமென்பதற்குச் சார்பாய் அறநெறித்தீபம் “உருளாதவிழுநிதியமொன்பதிற்குந் தலைவனா, யிருளாத பெருங்குலத்துக் கிறைவனாய்த் தோன்றுதலுந், தெருளாத களிரூர்ந்து தேசமீக்கூறுதலும், பொருளாக விருந்தினரைப் போற்றியவன் பயனாகும்" என்னும் ஆதாராங்கொண்டு அன்பு பொருந்த விருந்தோம்புவோன் விளைநிலம் விசேடபலனைத் தருமென்பது விரிவு.

6.செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு.

(ப.) செல்விருந்தோம்பி - வந்த விருந்தை யுபசரித்தனுப்பிவிட்டு, வருவிருந்து-இனிவரும்விருந் தெப்போது வருமென பார்த்திருப்பா - எதிர்பார்த்திருப்பவன், வானத்தவர்க்கு - புத்தேளுலகத்தவர்க்கு, நல்விருந்து சிறந்தக் கூட்டுரவினனாவனென்பது பதம்.

(பொ.) தன்னை நாடிவரும் விருந்தினரை யுபசரித்தனுப்பிவிட்டு இனிவரும் விருந்து எப்போதுவருமென யெதிர்பார்த்திருப்பவனை வானவர்களுந் தங்களுடன் எப்போது விருத்தமடைவானென் றெதிர் பார்ப்பார்களென்பது பொழிப்பு.

(க.) வந்தவிருந்தினரை முகமலர்ச்சியுடன் உபசரித்தனுப்பிவிட்டு இனி வரும் விருந்து எப்போது வருமென் றெதிர்பார்த்து வுபசரிப்பவனை வானவர் உபசரித்தற்கு யெதிர்பார்த் திருப்பார்களென்பது கருத்து.

(வி.) அறஹத்துக்களாம் தேவர்களுக்கும், தென்புலத்தோராம், சமண முனிவர்களுக்கும், உரவின்முறையோர்களுக்கும் நேயர்களுக்கும், ஆதுலர்களுக்கும் உண்டி கொடுத்து வுயிரளிப்போர் அன்புமிகுத்துப் பற்றறுப்பவர்களாதலின் தலைமெய்ச் சேர்க்கையாம் தேவர்சபையைச் சேருவா ரென்பதற்குச் சார்பாய் ஆசாரக்கோவை"முறுவலினிதுரை கானீர்மனைபாய், கிடக்கையோ டிவ்வைந்து மென்பதலைச்சென்றார்க், கூணோடு செய்யுஞ் சிறப்பு” என்னும் ஆதாரங்கொண்டு அன்பு, யீகை, சாந்தம் மூன்றுந் திரண்டு விருந்தோம்பிய பலன் வானவர்களுடன் சடுதியில் சேர்க்குமென்னும் வித்தாகிய விரிவு.