பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

616 / அயோத்திதாசர் சிந்தனைகள்

யினியவை கூறலும், வனமதில் புக்கி மகத்துறவோங்கலும், கனமுறு மெய்ப்பொருள் காட்சியதாமே” என்னும் ஆதாரங்கொண்டு செம்பொருட் கண்டோர் என்பதை அவர்களது இனிய மொழிகளால் அறியலாம் என்பது விரிவு.

2.அகனமர்ந் தீதலி நன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.

(ப.) அகனமர்ந் - உள்ளன்புகொண்டு, தீதலி - கொடுத்தலில், நன்றே - மேலாயதியாதெனில், முகனமர்ந் - முகமலர்ச்சியுடன், தின் - இனிய, சொலனாகப் - சொற்களை யுடையவனென, பெறின் - கூறப்பெறுவதே மேலாமென்பது பதம்.

(பொ.) அகமகிழ்ந்து ஒருவருக்கு ஆனந்தமாக ஈவதினும் முகமலர்ந்து இனியமொழி கூறலே மேலாம் என்பது பொழிப்பு.

(க.) உள்ளன்பு கொண்டு தானம் ஈவதில் முகமலர்ச்சியுடன் இன்சொற்கூறி ஈவதே மேலாமென்பது கருத்து.

(வி.) யதார்த்தத்தில் அகமகிழ்ந்து தானம் ஈபவனாயினும், முகங்கடுத்து ஈவானாயின் அதன் பயனற்று போவான் என்பதை கண்ட பெரியோன், ஈவதினும் முகமலர்ந்து இனியமொழி கூறலே மேலென்று கூறியுள்ளவற்றிற்குச் சார்பாய் சிறுபஞ்சமூலம் "இன்சொலானாகுங் ளெமெயியல்பில்லா, வன்சொலானாகும் பகைமெமன-மென்சொலின், ஆய்விலாமாரருள வருளினாமனத்தான், வீவில்லா வீடாய்விடும்" என்னும் ஆதாரங்கொண்டு சகலவற்றிலும் அகமலர்ந்து இனியமொழி கூறலே மேலாம் என்பது விரிவு.

3.முகத்தா னமர்ந்தினிது நோக்கிய கத்தானா
மின்சொ லினிதே யறம்

(ப.) முகத்தானமர்ந் - முக மலர்ச்சியுடனும், தினிது நோக்கி - இனிய பார்வையுடனும், யகத்தானா - உள்ளன்புடனும், மின்சொலினிதே - அமுதமொழிகூறலே, யறம் - தன்மத்தின் பீடமென்பது பதம்.

(பொ.) முகமலர்ந்தும், அகமலர்ந்தும், குளிர்ந்த பார்வை மிகுந்தும் இனியமொழி கூறலே தன்மத்தின் ஆதியென்பது பொழிப்பு.

(க.) தன்மஞ்செய்வோன் முக மகிழ்ச்சியுடனும், கருணா நோக்கத்துடனும், உள்ளன்புடனும் இனிய மொழியுடனுஞ் செய்தலே சிறப்பு என்பது கருத்து.

(வி.) தன்மஞ்செய்வோன் தற்புகழ்ச்சியைக் கருதியும், டம்பத்தைக் கருதியும், சுயப்பிரயோசனத்தைக் கருதியுஞ் செய்யாது அகமுக மலர்ந்தும் அன்புடன் நோக்கியும் இனியமொழி கூறியும் ஈவதே தன்மமெனக் கூறியுள்ளவற்றிற்குச் சார்பாய் தண்டலையார் சதகம் "பொற் குடையும் பொற்றுகிலும் பொற்பணியுஞ் கொடுப்பதென்ன பொருளோவென்றும், நற்கமல முகமலர்ந்தே உபசார மிக்கவின்சொ நடந்தாலன்றோ, கற்கரையு மொழிபாகா தண்டலையார் வளநாட்டிற் கரும்பின்வேய்ந்த, சற்கரையின் பந்தலிலே தேன்மாரிபெய்துவிடுந் தன்மெதானே" என்னும் ஆதாரங்கொண்டு இனிய முகமும், இனிய உள்ளமும். இனிய பார்வையும், இனிய மொழியுமாயிருந்து ஈதலே தன்மம் என்னும் விரிவு.

4.துன்புறூஉந் துவ்வாமெ யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொல வர்க்கு.

(ப.) துன்புறூஉந் - துன்பமடையக்கூடியதும், துவ்வாமெ - இரஞ்சுக் கேட்கக் கூடியதும், யில்லாகும் - இல்லையாகும், யார்மாட்டு - யாவர்க்கென்னில், மின்புறூஉ - செவிக் கின்பங்கொடுக்கக்கூடிய, மின்சொலவர்க்கு - இனிய மொழிகளை பேசுவோர்கென்பது பதம்.

(பொ.) எக்காலும் இனிய மொழிகளைப் பேசுவோரிடம் துன்பம் அணுகாது இருப்பதுடன் மற்றோரை வணங்கிக் கேட்கவேண்டியச் செயலும் வாராது என்பது பொழிப்பு.