பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 617


(க.) மற்றோரை இரஞ்சு கேட்கவேண்டியச் செயலும், தனக்குண்டாகுந் துன்பங்களும் அணுகாவாம். யாவர்க்கென்னில், எக்காலத்தும் இனிய மொழியைப் பேசுவோர்களுக்கு என்பது கருத்து.

(வி.) தன்னவர் அன்னியரென்னும் பேதம்பாராது யாவரிடத்தும் முகமலர்ந்து இனிய மொழியைப் பேசுவோர்களைத் துன்பங்கள் அணுகாமலிப்பதுடன் மற்றவர்களுக்கு பயந்தும் ஒடுங்கியுங் கேட்கவேண்டியக் குறைகள் யாதும் வாராது என்பதற்குச் சார்பாய் நீதிநெறிவிளக்கம் “கண்ணோக்கரும்பா நகைமுகமே நாண்மலரா, மின்மொழியின் வாய்மெயே தீங்கனியாம் - வண்மெ, பலமா நலங்கனிந்த பண்புடையாரன்றே, சலியாத கற்பதரு" என்னும் ஆதாரங்கொண்டு இன் சொல்லின் பயனை இனிது விளக்கிய விரிவாம்.

5.பணிவுடைய னின்சொ லதனா லொருவற்
கணியல்ல மற்றுப் பிற.

(ப.) னின்சொலதனா - இனிய மொழிகளையுடையதினா, லொருவற் - ஒருவன், பிற - அன்னியரால், பணிவுடைய - வணங்கப்பெறுவான், மற்றுப் - வேறு, கணியல்ல - ஆபரண மணிந்தோனைப் பணியாரென்பது பதம்.

(பொ.) இனிய மொழிகளை உடையோனை சகல மக்களும் பணிவார்கள். அணிபூண்ட ஒருவனை சகல மக்களும் வணங்கார் என்பது பொழிப்பு.

(க.) சிறந்த அணிகலம்பூண்ட சீமானாயினும் அவன் சகலராலும் வணங்கப்பெறான். இனியவாக்குடைய பெரியோனை சகலரும் பணிவார்கள் என்பது கருத்து.

(வி.) பலரறிய பல அணிகளைப் பூண்பவன் டம்பச்செயலையும், டம்ப மொழியையும் உடையவனாதலின் சகலராலும் வணங்கப் பெறான் என்றும், சகலரிடத்தும் முகமலர்ந்து இனியமொழி கூறுவோன் சகலராலும் வணங்கப்பெறுவான் என்றுங் கூறியுள்ளவற்றிற்குச் சார்பாய் பாசமாட்சி "புன்சொல்லு நன்சொல்லும் பொய்யின்றுணர்கிற்பார், வன்சொல்வழியராய் வாழ்தலுமுண்டாமோ, புன்சொலிடர்படுப்பதல்லாலொருவனை, யின்சொ லிடர்படுப்பதில்" என்னும் புன்சொல்லாற் கேடும் இன்சொல்லால் சுகமும் உண்டென்பதைக் கண்ட பெரியோன் இன்சொலுடையோனை சகலரும் வணங்குவார் எனக் கூறிய விரிவு.

6.அல்லவை தேயவறம் பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்.

(ப.) அல்லவை - இல்லையென்னும் லோபமொழி, தேய - அகல, வறம்பெருகு - தன்மம் வளரும், நல்லவை - அந்நல்லறம், நாடியினியசொலின் - தேடி யினியமொழிகூறி கொடுப்பதாலென்பது பதம்.

(பொ.) உலோபகுணத்தை அகற்றி இனியமொழியுடன் தன்மஞ் செய்வானாயின் அத்தருமம் வளரும் என்பது பொழிப்பு.

(க.) ஈயாத உலோபகுணத்தைப் பெற்றவன் அக்குணத்தைத் தேய்த்து இனியமொழியுடன் நல்லறத்தை நடாத்துவானாயின் அந்நல்லறம் மேலும் மேலும் வளரும் என்பது கருத்து.

(வி.) உடாதும் உண்ணாதும் அறஞ்செய்யாதும் உள்ளலோபிகள், தங்களது அலோபகுணத்தை அகற்றி தன்ம குணங் கொண்டு இனிய மொழியும் முகமலர்ச்சியும் உடையவனாய் நல்லறத்தை நடத்துவானாயின் செல்வம் பெருகி மேலும் மேலும் ஈவானென்பதற்குச் சார்பாய் அருங்கலைச்செப்பு "கொடாத வுலோபிக் கொடுத்துண்டு வாழின், விடாதுவறத்தின் செயல்" என்னும் ஆதாரங்கொண்டு அல்லவை தேய்ந்து இனியமொழியுண்டாயின் அறம்வளரும் என்பது விரிவு.