பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 619

சார்பாய் அருங்கலைச்செப்பு “இறந்துமின்மொழி மாறாதிளவல், மறந்தும் வன்மொழியாளான்” என்பது கண்டு இன்மொழி சுகங்கண்டோன் மறந்தும் வன்மொழி கூறான் என்பது விரிவு.

10.இனிய வுளவாக லின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

(ப.) இனிய - இன்பமடையுமொழி, வுளவாக - உள்ளவனாயிருந்தும், லின்னாககூறல் - கொடு மொழியைக் கூறுவானாயின், கனியிருப்பக் - கனிந்த பழமிருக்க, காய்கவர்ந்தற்று - காயைப்புசிப்பதற்கொக்குமென்பது பதம்.

(பொ.) இனியமொழியையுள்ளவன் கடுமொழி கூறுதல் கனியிருக்கக் காயைப் புசித்தலுக்கு ஒக்கும் என்பது பொழிப்பு.

(க.) தனக்குள்ள இனிய மொழிகளால் அடைந்த பயனை உணர்ந்தும் வன்மொழிகளைப் பேசுவதாயின் தன்னிடமுள்ளக் கனியைத் தவிர்த்துக் காயைப் புசித்தலுக்கு ஒக்கும் என்பது கருத்து.

(வி.) உள்ளத்தில் இனியவை உள்ளதை உணர்ந்தும் இல்லா கொடுமொழி கூறுவதாயின் இனியக் கனியை உருசித்து உண்டும் இனிப்பில்லாக்காயைப் புசித்தலுக்கு ஒக்கும் என்பதற்குச் சார்பாய் அறநெறிதீபம் “இனிய வுளத்துள்ளிருந்து மின்னாசொற் கூறுதலும், பனியகற்றி சூடடையும் பாங்கெல்லைக் கேகுதலும், தனிமெயடைந் தூவோரை தானகற்றி உண்பனவுங், கனியிருக்கக் காயுண்ணுங் காட்சியதன்பயனாகும் என்னும் ஆதாரங்கொண்டு உள்ளத்திலினியவை இருந்து கொடுமொழி கூறல் கனியிருந்துங் காயைப் புசித்தலுக்கு ஒக்கும் என்பது விரிவு.

11. செய்நன்றி அறிதல்

ஒருவர் செய்த உபகாரத்தை எக்காலும் மறவாதிருத்தலே அதன் பிரிதிபலன் என்றறிந்த பெரியோன் இனிய மொழிக்குப் பின் செய்நன்றியை மறவாதிருத்தலை விவரிக்கின்றார்.

1.செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.

(ப.) செய்யாமற் - தனக்கோருதவியுங் கோறாது, செய்த வுதவிக்கு - தான் செய்த வுபகாரத்திற்கு, வையகமும் - பூவுலகத்தையும் , வானகமும் - விண்ணுலகத்தையும், மாற்றலரிது - பிரிதிபலனாக ஈயினும் பொருந்தா என்பது பதம்.

(பொ.) பிரிதிபலனைக் கருதாது செய்யும் உதவிக்கு விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் பிரிதிபலனாக வீயினும் பொருந்தா என்பது பொழிப்பு.

(க.) எதிரியின் பலனைக் கருதாது காருண்யத்தாற் செய்யும் உதவிக்கு நிகராக வானுலகத்தையும், பூவுலகத்தையும் தானமாகக் கொடுக்கினும் பொருந்தாவென்பது கருத்து.

(வி.) கருணையினது மிகுதியால் இனியமொழிகொண்டு ஈய்யும் உபகாரத்திற்கு மேலாய உதவி ஏதொன்றும் இல்லையாதலின் கெடுவார் செயலை அகற்றி இடுவார்ச் செயலை விளக்குவதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம். “தண்டாமம் பொய்வெகுளி பொச்சாப்பழுக்காறென், றைந்தேகெடுவார்க் கியல்பென்ப பண்பாளா, யீதலறித லியற்றுதலின் சொற்கற், றாய்தலறிவார் தொழில்" என்னும் மேன்மக்கட் செயலை செய்யாமற் செய்யும் உதவியில் விளித்த விரிவு.

2.காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது.

(ப.) காலத்தினாற் செய்த - வேண்டுங்காலமறிந்து செய்த, நன்றி - உபகாரமானது, சிறிதெனினு - சொற்பமாயினும், ஞாலத்தின் - பூமியின்கண், மாணப்பெரிது - மிக்க மேலாயதென்பது பதம்.

(பொ.) எதிரிக்குச் செய்த உதவி சிறியதாயினும் அவனுக்கு வேண்டுங்