பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

626 / அயோத்திதாசர் சிந்தனைகள்



8.சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல மைந்தொருபாற்
கோடாமெ சான்றோர்க் கணி.

(ப.) சமன்செய்து - தராசு தட்டிற் சமநிறையேற்றி, சீர்தூக்குங் - நிறைபார்க்குங், கோல்போல் - துலாக்கோல்போல, லமைந்தொருபாற் - ஒருபக்கம், கோடாமெ

போல சாயாதிருப்பதே, சான்றோர்க்கு - மேன்மக்களுக்கு, அணி - அழகாமென்பது பதம்.

(பொ.) தராசு தட்டிற் பொருளேற்றி கோல் எப்புறமுஞ் சாயாது நிலைக்கப்பார்ப்பதுபோல் மக்கள் நடுநிலைமெ சாயாது நிற்பதே அழகு என்பது பொழிப்பு.

(க.) பொன்னொருதட்டிலும் படிக்கல்லொருதட்டிலும் இட்டு கோல்தூக்கி சமநிறைபார்ப்பதுபோல் கனவானையும் ஆதுலனையும் நடுவுநிலை மெயிற் சீர்தூக்கி ஆள்வதே மேலோர்களது செயல் என்பது கருத்து.

(வி.) தராசு கோலைக் கையிலேந்தி பொற்கல்லுக்கும் எடைக்கல்லுக்குங் குறைவு நிறைவின்றி சமன்செய்து பார்ப்பது போல் மக்களாற் செய்யப்படும் இன்பதுன்பங்களை நடுவுநிலைமெயில் ஆராய்ந்து நீதியளிப்பதே சான்றோர் செயலாதலின் அந்நடுவுநிலைமெ யுற்றோர் தராசுகோல் சமநிலைபோல் நிற்பரென அவர்களது சிறப்பைக் கூறிய விரிவாம்.

9.சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மெ பெறின்.

(ப.) வுட்கோட்ட - உள்ளத்தின்கண், ஒருதலையா - நடுவுநிலைமெயற்ற வொருசார்பு, மின்மெபெறின் - இல்லாமெ யுற்றிருக்கின், செப்ப - கூறுவோரால், சொற்கோட்ட - சொற்குற்றம், மில்லது - நிகழாவென்பது பதம்.

(பொ.) உள்ளமானது நடுவு நிலைமெயுற்றிருக்கில் அவர்களது வாய்மொழியும் நடுவுநிலைமெ யுற்றிருக்கும் என்பது பொழிப்பு.

(க.) மனத்தின்கண் மாசகற்றியுள்ளவன் மொழியும் மாசற்ற நடுவுநிலைமெயுற்றிருக்கும் என்பது கருத்து.

(வி.) உட்குற்றமாம் மனமாசு கழுவியவன் செயலும் அவன் மொழியும் மாசகன்றிருக்கும் என்பது திண்ணமாதலின் உள்ளக் களங்கமற்றோன் ஒருதலையாய நியாயமற்று நடுவுநிலைமெயில் நிற்பான் என்பது விரிவு.

10.வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தம்போற் செயின்.

(ப.) பிறவுந் - அன்னியரையும், தம்போற் - தங்களைப்போற், பேணிக் - கருதி, செயின் - செய்வதாயின், வாணிகஞ்செய்வார்க்கு - வியாபாரம் நடத்துவோருக்கு, வாணிகம் - செட்டுவிருத்தி பெறுமென்பது பதம்.

(பொ.) வணிகன் நடுவுநிலைமெயுள்ளவனாய் கொடுக்கவேண்டிய பொருளைச் சரிவரக் கொடுத்துவருவானாயின் வணிகமாம்செட்டு விருத்தி பெறும் என்பது பொழிப்பு.

(க.) வியாபாரியானவன் தான் வாங்கிய பணத்திற்குத் தக்கப் பொருளை குறைவுநிறைவின்றி சரியாக ஈய்ந்துவருவானாயின் அவனது வியாபாரம் நாளுக்குநாள் விருத்திபெறும் என்பது கருத்து.

(வி.) நாயன், தராசுகோலின் நடுவுநிலைமெயை விளக்கி அத்தராசுகோல் ஏந்தும் வணிகன், செட்டி, ரெட்டி என்னுந் தொழிற்பெயர்கொண்ட வியாபாரியும் விருத்திபெறல் வேண்டி ஒன்றைக்கொடுத்து மற்றொன்றை வாங்குவதில் குறைவு நிறைவாம் பேதமின்றி கொடுக்கல் வாங்கலை நடுவுநிலைமெயில் நடாத்துவானாயின் வாணிபமும் விருத்திபெற்று செட்டும் நிலைக்குமெனக் கூறிய விரிவு.

13. அடக்கமுடைமெய்

அதாவது திரிகரண சுத்தமாம் மனோவடக்கம், நாவடக்கம், தேகவடக்கமாம் மூன்றினையும் விளக்குமாறு நடுவுநிலைமெக்குப் பின் அடக்கமுடைமெயை விவரிக்கின்றார்.