பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 627


1.அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமெ
யாரிரு ளுய்த்து விடும்.

(ப.) அடக்க - ஒடுக்கமானது, மமரரு - வானவர்களுடன், ளுய்க்கு - சேர்ப்பிக்கும், மடங்காமெ - ஒடுக்கமில்லாமெ, யாரிரு - பிறவிசாகரமாம் நிரையத்து, ளுய்த்துவிடும் - சேர்த்துவிடுமென்பது பதம்.

(பொ.) ஒடுக்க முடையவர்கள் உயர்ந்தோராம் வானவர்களைச் சேர்வார்கள். ஒடுக்கமில்லாதவர்கள் இருள் நிலையாம் பிறவிசாகரத்தில் உழன்று அவதி உறுவார்கள் என்பது பொழிப்பு,

(க.) மனவொடுக்கம், நாவொடுக்கம், தேகவொடுக்க முடையோர் உலகத்தில் சுகவாழ்க்கைப் பெறுவதுடன் முத்திநிலையாம் வானவரோடு அமைந்து நித்திய வாழ்க்கையைப் பெறுவார்கள். அத்தகைய ஒடுக்கமில்லாதோர் மாறாப்பிறவியிற் சுழன்று தீரா துக்கசாகரத்தில் ஆழ்வார்கள் என்பது கருத்து.

(வி.) அடக்கமென்பதில் நாவடக்கம், மனோவடக்கம், தேகவடக்கமாந் திரிகரணசுத்தத்தை வால வயதாம் பதினாறு வயதினின்று சாதிப்பானாயின் அதுவே மக்களின் மேலான சாதனமென்பதற்குச் சார்பாய் நாலடி நானூறு "இளையானடக்கங் கிளைபொரு, ளில்லான் கொடையே கொடைப்பய மடக்கனெல்லா, மொறுக்கு மதுகையுரனுடையாளன், பொறுக்கும் பொறையே பொறை" இவற்றிற்குப் பகரமாக அறநெறிச்சாரம் “தன்னைத்தன்னெஞ் சங்கரியாகத் தானடங்கின், பின்னைத்தா னெய்தானலனில்லை-தன்னைக் குடிகெடுக்குந் தீனெஞ்சிற் குற்றேவல் செய்தல், பிடிபடுக்கப்பட்டகளிறு" என்னும் ஆதாரங்கொண்டு அடக்கமே நித்திய சுகத்திற்குக் கொண்டுபோம் வழியென்றும் அடக்கமின்மெயே மாறா துக்கத்திற்குக் கொண்டுபோம் வழியுமாம் என்பது விரிவு.

2.காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூவுங் கில்லை யுயிர்க்கு.

(ப.) வடக்கத்தை - அடக்கத்தையே மேலாயப் பொருளாகக்கருதி, காக்க - காத்தல்வேண்டும், மதனினூஉங் - அடக்கத்தினுமேலாய, யாக்க - செல்வம், யுயிர்க்கு - மக்களுக்கு, கில்லை - இல்லையென்பது பதம்.

(பொ.) மக்களுக்கு அடக்கத்தினும் மேலாய செல்வம் உலகத்தில் இல்லை என்பது பொழிப்பு.

(க.) தனச்செல்வம் தானியச் செல்வமாம் பொருளினும் அடக்கமுடைமெயாம் பொருளே மேலாம் என்பது கருத்து.

(வி.) ஒருவனுக்கு நாவொடுக்கம், மனோவொடுக்கம், தேகவொடுக்க மாகிய மூன்றும் இருக்குமாயின் சகல சுகமும் பொருந்திய வாழ்க்கை உடையவன் அவனேயாதலின் தனப்பொருள், தானியப்பொருள் யாவற்றிற்கும் அடக்கமுடைமெயாம் பொருளே மேலாயது என்பது விரிவு.

3.தெறிவறிந்து சீர்மெ பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.

(ப.) மறிவறிந்தாற்றி - விவேகவிருத்தியாற்றணிந்து, னடக்கப் - ஒடுங்க, பெறின் - பெறுவானாயின், தெறிவறிந்து - நிலைபெற்ற, சீர்மெ - சுகத்தை, பயக்கு - அளிக்குமென்பது பதம்.

(பொ.) அறிவின் விருத்தியால் ஆற்றலுற்று அடங்கியவன் நிலையான சுகபயனை அடையலான் என்பது பொழிப்பு.

(க.) விவேக விருத்தியால் தணிந்தடங்கியவன் அழியா சுகப்பயனை அடைவானென்பது கருத்து.

(வி.) அறிவின் மிக்கோர் ஆற்றலடைந்து திரிகரண வொடுக்கம் பெறுவார்களாயின் வாக்காலும், மனதாலும், தேகத்தாலும் யாதொரு தீங்குகளும் எழாது என்றுமழியா சுகவாழ்க்கையைப் பெறுவார்கள் என்பது விரிவு.