பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

632 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) ஒருவன் தனது நற்செயல்கள் ஈதீதென்றும் துற்செயல்களீதீதென்றுந் தன்னை மறந்திருப்பினுங் குற்றமில்லை. மானிடனென்னும் மேலாயப் பிறப்பில் தோன்றி அப்பிறப்பின் சிறப்பால் இஃது நல்வினை அஃது தீவினையென் உணர்ந்தும் நல்லொழுக்க நெறியில் குன்றுவானாயின் எண்ணறிய பிறவிதனில் மானிடப் பிறவியே மேலாயதென்னும் சிறப்புக்குன்றி விவேகமிகுத்தோரால் விலங்கோ, பேயோ, நரனோ என்று இகழப்படுவான் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம், "எப்பிறப்பாயினு மேமாப்பொருவற்கு, மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில், கற்றலுங் கற்றவை கேட்டலுங் கேட்டதன்கண், நிற்றலுங்கூடப்பெறின்." தொல்காப்பியம், “உயர்திணை யென்மனார்மக்கட் சுட்டே யஃரிணை யென்மனா வரலபிறவேயாயிருதிணையி னிசைக்குமென சொல்லே” என்பது கொண்டு மானிடனெனப் பிறந்தும், தன்னைத்தான் அறிய முயன்றும், ஒழுக்கங்குன்றுமாயின் கெடுவானென்பது விரிவு.

5.அழுக்கா றுடையான்க ணாக்கம் போன் றில்லை
யொழுக்க மிலான்க ணுயர்வு.

(ப.) அழுக்காறுடையான்க - அறுவகை மனமா சுள்ளவ னிடத்துள்ள, ணாக்கம் போன்றில்லை - செல்வமில்லாததுபோல், யொழுக்கமிலான்க - நல்லொழுக்கமில்லாதவனது, ணுயர்வு - சிறப்பெனப்படுவது பதம்.

(பொ.) மனமாசுள்ளவனிடத்து உள்ள செல்வம் பயன்படாததுபோல் உயர்ந்தோன் எனினும் ஒழுக்கமில்லாவிடின் சிறப்பில்லை யென்பது பொழிப்பு.

(க.) களங்கமுள்ளோனிடம் செல்வமிகுந்தும் பயன் தராததுபோல் ஒழுக்கமில்லானிடத்து யாதொரு மேம்பாடிருப்பினும் சிறப்பைத் தாராவென்பது கருத்து.

(வி.) பேராசை, வஞ்சினங், குடிகெடுப்பு, சூது, உலோபம், பொறாமையாம் மனக்களிம்புகள் ஆறும் நிறைந்தோனிடம் தனமிருப்பினும் இல்லாததுபோல் எத்தகைவுயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்றவனாயினும் நல்லொழுக்கமில்லாவிடின் சிறப்படையானென்பது விரிவு. குறுந்திரட்டு "வஞ்சினை பொறாமெ லோபம் வழு குடி கெடுப்பு சூது, துஞ்சும் பேராசை யீதே துறவியர்க் கழுக்காறாகும், எஞ்சிய சாந்தம் யீகை யிதக்க விம் மமுதமூன்றுந், தஞ்சுக மடைவோர்க்கென்று சாற்றினர் மேலோரென்பான்."

6.ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுப்பாக் கறிந்து

(ப.) ருரவோர் - உரவின் முறையார், ரிழுக்கத்தி - இடுக்கத்தின், னேதம் - வழுவால், படுபாக்கறிந்து - உறுந்துன்பங்களையுணர்ந்தோர், ஒழுக்கத்தி - நல்லொடுக்கத்தினின்று, னொல்கா - வழுவாரென்பது பதம்.

(பொ.) உறவின் முறையோரது வழுவால் இழுக்குறுவதை உணர்ந்தோர் தங்களது நல்லொழுக்கத்தினின்று பிறழார் என்பது பொழிப்பு.

(க.) தங்கள் தங்கள் வரன்முறையோர் துற்செயலால் படுந்துன்பங்களைக் கண்ணாறக் காணுவோர் தங்களுக்குள்ள நல்லொழுக்கமாம் நற்செயலினின்று என்றும் நீங்காரென்பது கருத்து.

(வி.) தங்கள் உறவினர்களும் அடுத்த நேயர்களும் தங்கள் தங்களிழுக்கால் படுந்துன்பங்களைக் கண்டுணர்வோர் அத்தகைய இழுக்காம் அழுக்காறுக்கு அஞ்சி சாந்தம் யீகை அன்பென்னு மூவொழுக்கத்தினின்றும் அகலாரென்பது விரிவு.

7.ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மெ யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.

(ப.) ஒழுக்கத்தி - நல்லொழுக்கத்தால், மேன்மெ - சிறப்பை, னெய்துவர் - பெறுவார்கள், யிழுக்கத்தி - துற்செயலால், யெய்துவ - பெறுவது, ரெய்தாப் - செய்யொணா, பழி - நிந்தையென்பது பதம்.

(பொ.) நல்லொழுக்கச் செயலால் சிறப்பைப் பெறுவர், தீயொழுக்கச் செயலால் நிந்தையைப் பெறுவா ரென்பது பொழிப்பு.