பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 633


(க.) ஒருவன் தான் செய்யும் நற்கருமங்களினால் எல்லோராலும் புகழப்படுவான். மற்றொருவன் தான் செய்யுந் துற்கருமங்களினால் எல்லோராலும் இகழப்படுவானென்பது கருத்து.

(வி.) உலகத்தில் தோன்றியுள்ள மக்கள் தாங்கள் தாங்கள் செய்துவரும் நல்லொழுக்கச் செயல்களினால் சருவசீவர்களாலும் மேன்மக்களெனக் கொண்டாடத்தக்கப் புகழைப் பெறுவர். மற்றுமுள்ளோர் மக்களென்னும் மனுகுலத்தில் தோன்றியும் கருணையற்ற தீயொழுக்கமாங் கொறூறச் செயல்களினால் சருவசீவர்களாலுங் கீழ்மக்களெனத் தூற்றுவதன்றி பழிப்புக்கு ஆளாகுவரென்பது விரிவு.

8.நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கத்தீ யொழுக்க
மென்று மிடும்பை தரும்.

(ப.) நன்றிக்கு - செய்நன்றிக்கு, வித்தாகு - விதையாவது, நல்லொழுக்கந் - நன்றியை மறவாதிருத்தலேயாம், தீயொழுக்க - அன்னன்றியை மறப்பது, மென்று - எக்காலத்தும், மிடும்பைதரும் - துன்பத்தைக் கொடுக்குமென்பது பதம்.

(பொ.) ஒருவர் செய்த நன்றியை மறவாதிருத்தலே நல்லொழுக்க வித்தென்னப்படும். அதனை மறத்தலே துன்பத்தை வளர்க்கும் வித்தென்பது பொழிப்பு

(க.) ஒருவர் செய்த உபசாரத்தை என்றும் மறவாதிருத்தலே நல்லொழுக்க விதையென்னப்படும். அவ்உபகாரத்தை மறக்குஞ் செயலே சகல துன்பங்களையும் விளைவிக்கும் வித்தென்பது கருத்து.

(வி.) உலகத்தில் தோன்றியுள்ள மக்களுள் ஒருவர் செய்த வுபகாரத்தை என்றும் மறவாது அவர்களுக்குப் பிரதிவுபகாரஞ் செய்யாவிடினும் நல்லவனாக நடந்துக்கொள்ளலே மற்றவர்கள் உதவிக்கு முறித்தாய் நல்லொழுக்க விதையினது பலனைத்தரும். அங்ஙனஞ்செய்த உபகாரத்தை மறந்து அவர்களுக்கே தீங்கை விளைவிப்பதாயின் அத்தீங்கின் விதையே தீவினையாக வளர்ந்து மற்றோர் உபகாரத்தையுமிழந்து அல்லலுற்று அலைவிப்பதுடன் ஆற்றொணா துன்பத்திற்கு ஆளாக்கும் என்பது விரிவு.

9.ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயற் சொலல்.

(ப.) ஒழுக்கமுடையவர்க் - நல்லொழுக்க நெறியினிற்பவர்கள், வழுக்கியும் - தன்னைமறந்தும், தீய - கொடிய மொழிகளை, வாயாற்சொல்ல - நாவினால் மொழிதற்கு, கொல்லாவே - முடியாவா மென்பது பதம்.

(பொ.) நல்லொழுக்க நெறியில் நிற்போர் தங்களை மறந்தும் நாவினால் கொடுமொழிகளைக் கூறாரென்பது பொழிப்பு.

(க.) அப்பிரயோசன வார்த்தைகளைப் பேசாது அடங்கலே ஒழுக்கமுடையோர் உள்ளுணர்வாதலின் இழுக்குடைய வார்த்தைகளை என்றும் மொழியாரென்பது கருத்து.

(வி.) தேகவடக்கம், மனோவடக்கம், வாக்கடக்கமுள்ள நல்லொழுக்க நெறியில் நிற்போர் தங்களை மறந்தும் ஒருவரைக் கொடுமொழிக் கூறி புண்படச் செய்யார்களென்பது விரிவு.

10.உலகத்தோ டொப்ப வொழுகல் பலகற்றும்
கல்லா ரறிவிலா தார்.

(ப.) உலகத்தோடொப்ப - உலகமக்களுடன் கூடி, வொழுகல் - நல்லொழுக்கங்களை, பலகற்றும் - பலவகையாகக் கற்றும், கல்லார் - அவற்றை யுணராதவர்கள், ரறிவிலாதார் - விவேகமில்லார்களென்பது பதம்.

(பொ.) நல்லொழுக்க நெறியில் நின்றொழுகும் மக்களுடன் கூடியுலகத்தில் வாழினும் அவர்களது நன்னெறியைக் கல்லாத மக்கள் கற்றுங் கல்லாத அவிவேகிகளென்னப் படுவார்களென்பது பொழிப்பு.