பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

634 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) உலகத்தில் நன்மார்க்க நெறியுள்ளோருடன் கூடி வாழ்ந்தும் தங்கள் தங்கள் துன்மார்க்கச் செயல்களை விடாது ஒழுகுவராயின் கற்றுங்கல்லாதவர்களும், தெரிந்தும் தெரியாதவர்களாகும் அறிவிலிகள் என்னப்படுவார்களென்பது கருத்து.

(வி.) உலகமென்பது உயர்ந்தோர்மாட்டேயென்பது விதியாதலின் அவ்வுயர்ந்தோராம் நல்லொழுக்க நெறியில் நிற்கும் விவேகிகளுடன்கூடியும் அவர்களது நன்னெறிகளைக்கற்றும் அவ்வழியில் நடவாது தங்கள் துற்செயலிலேயே நிற்பார்களாயின் பல நன்னெறிகளைக் கற்றும் உலகத்தோடு ஒக்க ஒழுகா அவிவேகிகளென்று எண்ணப்படுவார்களென்பது விரிவு.


15. பிறனில் விழையாமெய்

ஒழுக்கமென்பது ஈதீதென்று உணராதோர்க்கு அதன் அந்தரார்த்தத்தை விளக்குமாறு ஒழுக்கத்தின் பின்னர் அன்னியர் தாரத்தை இச்சிக்குங் கேடுகளையும் அதன் இழிவையும் விளக்குகின்றார்.

1.பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதமெ ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ளில்.

(ப.) பிறன் - அன்னியன், பொருளாட் - ஆளு மனையாளை, பெட்டொழுகும் - பெற்றணையும், பேதைமெ - அறிவிலிச்செயல், ஞாலத் - பூமியின்கண், தறம் - நல்லறச் செயலையும், பொருள் - மெய்ப்பொருளுணர்ச்சி யையும், கண்டார்க - அறிந்தவர்களிடத்து, ளில் - இல்லையென்பது பதம்.

(பொ.) அன்னியனுடைய மனையாளை இச்சித்து அணையுஞ் செயல் மெயயுணர்ச்சி மிகுந்த அறிவாளிகளிடத்து இராவென்பது பொழிப்பு.

(க.) தனது காமாக்கினியை தணித்தாள இயலாது அன்னியன் மனைவியை ஆளுஞ் செயல் விவேகமிகுத்த மெய்யுணர்வுள்ளோர்பால் இராவென்பது கருத்து.

(வி.) மனிதன் மிருகத்திற் கொப்பாயத் தனது அறிவிலிச் செயலால் தனது காமயிச்சை அடக்க இயலாது அன்னியனது தாரத்தை இச்சித்து அவனது குடியைப் பாழ்படுத்துஞ் செயல் விவேகமிகுதியால் தன்னையும் உணர்ந்து மெய்ப்பொரு ளுணர்வோரிடத்து இரா வென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "அறனுமறனறிந்த செய்கையுஞ் சான்றோர், திறனுடைய னென்றுரைக்குந்தேசும் - பிறனில், பிழைத்தானெனப் பிறரால் பேசப்படுமேல், இழுக்கா மொருங் கேயிவை" தன்னைத்தானுணர்ந்து மெய்யுணர்வுகொண்டோர் தங்களை மறந்தும் அன்னியன் மனையாளை இச்சியார்கள். தன்னைத்தா னறிவோ னென்னும் ஞானியென வேஷமிட்டும் அன்னியர் மனையாளை இச்சிப்பனேல் சகலராலும் இகழப்படுவானென்பது விரிவு.

2.அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.

(ப.) அறன்கடை - தன்மத்தின் முடிவையறிந்தோமென்று, நின்றாரு ளெல்லாம் - நிலைத்தோரெல்லவரும், பிறன்கடை - அன்னியன் மனையாள் வாயலில், நின்றாரிற் - சென்று நிலைப்பாராயின், பேதை - அவரினுமறிவில்லார், யாரில் - யாவருள்ளாரென்பது பதம்.

(பொ.) தன்மத்தின் முடிவுநிலையை அறிந்தோமென்போர் யாவரும் பிறன் மனையாளின் கடைவாயலிற் சென்று நிலைப்பாராயின் அவரினும் அறிவிலிகள் வேறுளரோ என்பது பொழிப்பு.

(க.) அறநெறியின் முடிவை ஆழ்ந்தறிந்தோமென்போர் பிறர்மனையாள் கடைவாயற் கார்ப்பாராயின் அவரினும் அவிவேகிகள் உலகத்தில் வேறில்லை என்பது கருத்து.

(வி.) தன்மத்தின் கடைவாயலாம் நன்மெய்கடைபிடித்து ஒழுகுகின்றோ மென்போர் அன்னியன் மனையாள் கடைவாயலிற் சென்று பயந்து நிற்பாராயின்