பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 637


(பொ.) இல்லற வாழ்க்கையை உடையோன் நல்லறஞ் செய்யாதவனாயினும் அன்னியன் தாரத்தை இச்சியாது வாழ்பவனே அவ்வாழ்க்கைக்கு உரியோன் என்பது பொழிப்பு.

(க.) தனக்குரிய இல்லாளுடன் கூடி இல்வாழ்வோன் என்னப்படுவோன் யாதொரு தர்மஞ் செய்யாவிடினும் அன்னியன் மனையாளை இச்சியாது வாழ்வதே ஓர் தர்மமாம் என்பது கருத்து.

(வி.) இல்வாழ்வோன் என்போன் சகல நல்லறங்களை வழுவாது நடத்தியும் அன்னியன் இல்வாழ்க்கைக்கு உரியாளை இச்சித்து அவன் குடியை கெடுப்பானாயின் அவன் செய்துவந்து நல்லறங்கள் யாவும் கெட்டு பகையும், பழியும், பாவமும், அச்சமும் அடைகின்ற படியால் இல்வாழ்வோன் பல தர்மங்களைச் செய்யாவிடினும் அன்னியன் மனையாளை இச்சியாது வாழ்தலே பெருந்தர்மமாம் என்பது விரிவு.

8.பிறன்மனை நோக்காத பேராண்மெ சான்றோர்க்
கறனொன்றே வான்ற வொழுக்கு.

(ப.) பிறன்மனை - அன்னியன் மனையாளை, நோக்காத கண்ணெடுத்துப்பாராத, பேராண்மெ - புருஷச்செயல், வான்ற வொழுக்கு - நல்லொழுக்கமாயினும், சான்றோர்க் - மேலோர்க்குச் செய்யும், கறனொன்றோ - தன்மத்திலுமொன்றாகாவோவென்பது பதம்.

(பொ.) பிறன்மனையாளைக் கண்ணெடுத்துப்பாராத புருஷர்செயல் நல்லொழுக்கங்களில் ஒன்றாயினும் மேலோராம் அறஹத்துக்களுக்குச் செய்துவரும் தன்மங்களிலும் ஒன்றாகாவோவென்னும் உறுதிமொழி பொழிப்பு.

(க.) நல்லொழுக்கங்களில் பிறன் மனையாளை இச்சியாத புருஷதன்மம் ஒன்றிருக்கினும் அஃது அறஹத்துக்களுக்குச் செய்துவரும் தன்மங்களிலும் ஒன்றாகுமன்றோ என்பது கருத்து.

(வி.) சான்றோர்களாம் சமணமுநிவர்களால் ஓதிவரும் சீலங்களில் பிறன்மனையாளை இச்சியாதே என்பதும் ஓர் தன்மமாதலின் அவர்கள் அளிக்கும் சீலம்பிறழாது நடத்தலையும் ஓர் தன்மமாகக்கொண்டு அன்னியன் மனையாளைக் கண்ணெடுத்துப் பாராததே புண்ணியப் புருஷச்செயலாதலின் குருவினது போதனைக்கு உள்ளடங்கி நடக்குந் தன்மங்களில் ஒன்றாகப் பிரிதிநன்றி கருதி சான்றோர்க்கு அறனொன்றோ மற்றுஞ் சுகமுண்டென்பது விரிவு.

9.நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறர்க்குரியா டோடோயா தார்.

(ப.) நலக்குரியார் - நன்மெய்க் கடைபிடித் தொழுகுவோர், யாரெனி யாவரென் றறியவேண்டின், னாமநீர் - சமுத்திரநீர் சூழ்ந்துள்ள, வைப்பிற் - பூமியின்கண், பிறர்க் குரியாடோ - அன்னியன்மனையாளுடன், டோயாதார் - கலவாதவர்களே யென்பது பதம்.

(பொ.) நன்மெய் கடைப்பிடித் தொழுகுவோர் யாவர் என்றறிய வேண்டின் நீர் சூழ்ந்த பூமியின்கண் அன்னியன் மனையாளை சேராதவர்களே என்பது பொழிப்பு.

(க.) கடல்நீர் சூழ்ந்த பூமியின்கண் அன்னியன் மனையாளுடன் கலவாதவர்கள் யாரோ அவர்களே நன்மெய்க்கடைப்பிடித்தொழுகுவோராவர் என்பது கருத்து.

(வி.) சகல நன்மெ சொரூபிகளாக விளங்கவேண்டுமென்பது புத்தரது இரண்டாம் பேதவாக்கியம் ஆதலின் அந்நலத்துக்குரிய சொரூபிகள் யாவரென்று ஆராயுங்கால் அன்னியன் மனையாளை இச்சித்து அவளுடன் தோயாதவர்களே யாவர் என்பது இச்சையினால் உண்டாம் சகல கேட்டிற்குங் காம இச்சையே மூலமாதல் கொண்டு பூமியின்கண் அன்னியன் மனையாளுடன் சேராதவர்களே சகல நன்மெகளுக்கும் உரியோர்களாவர் என்பது விரிவு