பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 641


(க.) எதிரிக்குள்ளக் கோபத்தின் மிகுதியால் மிக்கத் துன்பத்தைக் கொடுப்பினும் அவற்றைப் பொறுத்துக்கொள்ளுவதே அவனை வென்றதற்கு அறிகுறியாமென்பது கருத்து.

(வி.) எக்காலுங் கோபத்தையே வளர்த்துக்கொண்டு மிக்கத் துன்பமாங் கொடுஞ்செயல் புரிவோருடன் தாங்களும் எதிர்த்துக் கொண்டு கொடுஞ்செயல் புரியாது அத்தீங்குகள் யாவையும் பொறுத்து அவர்கட்கு இதம்புரிவதாயின் அதுவே அவர்களை வென்ற அடையாளமாதலின் கோபத்தைக் கோபத்தால் வெல்லலாகாது சாந்தத்தால் வெல்லலாமென்பது விரிவு.

9.துறந்தாரிற் றூய்மெ யுடைய ரிறந்தார்வா
யின்னாச்சொ னோற்கிற் பவர்

(ப.) துறந்தாரிற் - இல்லந் துறந்தவருள், றூய்மெயுடைய தூயதேகிகளைக் காண்பதினும், ரிறந்தார் - இல்லறத்தோர், வாயின்னாச்சொ - நாவி லுண்டாங் கொடுமொழிகளை, னோற்கிற்பவர் - நோக்கிக்காப்பாரென்பது பதம்.

(பொ.) துறந்தவர்களது தூயதேகத்தைக்கண்டு களிப்பதினும், இல்லற வாசிகளது கொடுமொழிகளைக் கண்டு பொறுப்பது மேலாம் என்பது பொழிப்பு.

(க.) இல்லந் துறந்து மரணத்தை ஜெயித்துக்கொண்ட தூயதேகிகளைக் கண்டு மகிழ்வதினும் மரணத்திற்குள்ளாம் இல்லறவாசிகளது கொடு மொழிகளைக்கேட்டும் பொறுப்போரே மேலோர்கள் என்பது கருத்து.

(வி.) பாசமந்தப் பற்றுக்களைவிட்டு சாது சங்கஞ்சார்ந்து பிறப்பு பிணி, மூப்பு, சாக்காட்டை வென்ற சுத்ததேகிகளைக் காண்பதினும் இறப்புக்குரிய பாசபந்த இல்லறவாசிகளது மிருதுவாம் மொழிக்கு எதிரடையாய கொடியமொழிகளை உலகத்தோர் நாவினின்று எழாமற் காக்கவேண்டும் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “எள்ளிப் பிறருரைக்கு மின்னாச்சொல் தன்னெஞ்சில், கொள்ளிவைத்தாப்போல் கொடிதெனினு - மெள்ள, அறிவென்னு நீரா லவித்தொழுக லாற்றின், பிறிதெனினும் வேண்டாந் தவம்" என்பது விரிவு.

10.உண்ணாது நோற்பார் பெரியர்பிறர் சொல்லு
மின்னாச் சொன்னோற் பாரிற்பின்.

(ப.) உண்ணாது - அதியாகாரம்புசியாது, நோற்பர் - நோன்பி னிலைப்பர், பெரியர் - மேலோர்கள், பிறர்சொல்லு - அன்னியரால் மொழியப்படும், மின்னாச்சொ - கொடியமொழிகளை, னோற்பாரிற்பின் - காப்பவரினும் வேறுளரோ வென்பது பதம்.

(பொ.) மேலோர்கள் மிதாகாரம் புசித்துத் தங்கள் நோன்பினைக் காப்பர். மற்றோர் பிறர்களது கொடிய மொழிகளைக் காப்பார்கள் என்பது பொழிப்பு,

(க.) விவேகமிகுத்தப் பெரியோர் மிதபுசிப்பால் தங்கள் விரதத்தைக் காப்பார்கள், மற்றுமுள்ளோர் அன்னியரது கொடுமொழிகளைப் பொறுத்து காப்பதினும் வேறுளதோ என்பது கருத்து.

(வி.) பெரியோர்களாம் அறிவின் மிக்கோர் தங்கள் காம, வெகுளி, மயக்கங்களை அறுக்குமாறு சங்கஞ்சேர்ந்து மூவேளை உண்பினையை ஒடுக்கி ஒருபொழுதுண்டு தங்கள் விரதமாம் நோன்பினை நோற்பார்கள். மற்றும் உலக மக்களோ அன்னியர்களது கொடிய மொழிகளைப் பொறுத்து காப்பதினும் வேறுநோன்புளவோ என்பது விரிவு.


17. அழுக்காறாமெய்

இஃது பொறையுடையான் சுகத்தையும், பொறையிலான் கேட்டையும் விளக்கியதன்பின் வஞ்சினம், பொறாமெ, குடிகெடுப்பு, லோபம், சூது, பேரவாவாம் மனக்களங்குகள் ஆறினையும் அகற்றுவோன் சுகத்தையும், அகற்றாதோன் கேட்டையும் விளக்குகின்றார்.