பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

644 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) இல்லார் குறைகளை அறிந்து ஈயுந் தன்மத்தைக் கெடுக்கும் உலோபியானவன் தனக்கு உண்பதற்கு சோறு கிடையாமலும், உடுப்பதற்கு வஸ்திரங் கிடையாமலும் அல்லலடைவதுடன் தனது உரவின்முறையோருங் குலபழக்கத்தால் கேடுற்று அவர்களும் துன்பத்தை அனுபவிப்பார்கள் என்பது விரிவு.

7.அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்.

(ப.) தழுக்காறுடையானைச் - ஆறழுக்கினையுடையவனின், அவ்வித் - அவன் சந்ததியினது, செய்யவ - செய்கைகளினால், இவ்வையைக் - முன்குல வழியை, காட்டிவிடும் - விளக்கிவிடுமென்பது பதம்.

(பொ.) ஆறழுக்கினை உடையவனது சந்ததியின் செய்கைகளினால் அவனது குலவழி விளங்கிப்போம் என்பது பொழிப்பு.

(க.) ஆறு அழுக்கினை உடையவனின் துற்செயல் அவனிடத்து விளங்குவதுமன்றி பின் தோன்றும் புத்திர பௌத்திரரிடத்தும் விளங்குமென்பது கருத்து.

(வி.) அவ்வித்தாம் புத்திரர் பௌத்திரர் தோன்றி பிரபல வாழ்க்கைப் பெற்றுரினும் தனது தாதையினது அழுக்காறாம் அவ் வளப்பத்தைக் காட்டி சகலருக்கும் விளங்கவைக்குமென்பதற்குச் சார்பாய் காக்கைபாடியம் “தந்தை குலத்தின் செயல்வழிதான்பெறு, மைந்தருஞ்சென்று மாள்வர் மதியதிலார், சிந்தைச்செயலை சீர்பெறநோக்கிடில், அந்தரசாரிக ளருநிழலுறுமே" என்பதற்குச் சார்பாய் முன்தோற்றத் தாதையின்செயலை பின்தோற்ற மைந்தர் விளக்குவார் என்பது விரிவு.

8.அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்.

(ப.) அழுக்காரென - ஆறழுக்குடையான் செயலை, வொருபாவி - மற்றவனும் பாவித்துநடப்பானாயின், திருச்செற்றுத - அவனுக்குள்ளச் செல்வமு மடிந்து, தீயுழி - கொடிய துன்பத்தில், உய்த்துவிடும் - சேர்த்துவிடுமென்பது பதம்.

(பொ.) ஆறழுக்கினை உடையோனை பாவித்து மற்றவனும் நடப்பானாயின் அவனுக்குள்ள செல்வமும் மடிவதுடன் கொடிய துன்பத்திற்குங் கொண்டு போய்விடும் என்பது பொழிப்பு.

(க.) நல்லொழுக்கத்தில் வாழ்ந்திருந்த ஒருவன் தீயொழுக்க முடையோனை பாவித்து விடுவானாயின் உள்ள செல்வம் நசிந்துபோவதுடன் மீளா துன்பத்திலும் அழுத்திவிடும் என்பது கருத்து.

(வி.) அறுவகை அழுக்கினை உடையோன் செயலாம் லோபத்தால் பொருள்சேர்ப்பதைக்கண்டு மற்றுமுள்ளோனும் அவனை பாவித்து பொருள் சேர்க்க முயலுவானாயின் தான் முன் சேகரித்தப் பொருளுமழிவதுடன் மீளா துன்பத்திற்குங் கொண்டுபோய்விடுமென்பது விரிவு.

9.அவ்விய நெஞ்சத்தானாக் கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கப் படும்.

(ப.) அவ்விய - மேற்களங்க நிறைந்த, நெஞ்சத்தா - மனதையுடையான், னாக்கமுஞ் - செல்வத்தைக்கண்டு, செவ்வியான் - நல்வழியோனதைக் கருதுவது, கேடுநினைக்கப்படும் - தனக்குள்ள சொத்துங் கெடுவதற் கெண்ணுகிறானென்பது பதம்.

(பொ.) மனமாசுள்ளோன் சொத்துக்களைக்கண்டு அவ்வழி பொருள்சேகரிக்க மனமாசு அகன்றுவருவோனும் சிந்திப்பது தனது சொத்துங் கெடுவதற்கு எண்ணுகிறான் என்பது பொழிப்பு.

(க.) வஞ்சினத்தாலும் சூதினாலும் சம்பாதித்துள்ளப் பொருளைக் கண்டு வஞ்சினமும் சூதுமற்றவன் அவ்வழி கருதுவது தனது பொருளுங் கெடுவதற்கு எண்ணங் கொள்ளுகிறான் என்பது கருத்து.