பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 645


(வி.) அறுவகை அழுக்கையுடையான் தனக்குள்ள லோபத்தாலும், வஞ்சினத்தாலும், சூதினாலும், பொருள் சேகரிப்பதைக் கண்ட ஓர் களங்கமில்லானும் அவன் பொருள் சம்பாதிக்கும் வழியைக் கருதுவது தனக்கு முன்புள்ளப் பொருளையுங் கெடுத்துக் கொள்ளுவதற்கு எண்ணுகிறான் என்பது விரிவு.

10.அழுக்கற் றகன்றாரு மில்லையஃ திலார்
பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்

(ப.) அழுக்கற் - அறுவகை மனக் களங்கங்களை யறுத்து, றகன்றாரு - துறந்தவரும், மில்லை - இல்லை , யஃதிலார் - அத்தகைய களங்கில்லார், பெருக்கத்திற் - முத்திபேற்றை, றீர்ந்தாருமில் - அடைந்தாருமில்லையென்பது பதம்.

(பொ.) அறுவகை மனமாசுகளற்று துறவுபூண்டாரும் இல்லை. அவ்வகை அறுத்து முத்திபேறு பெற்றாரும் இல்லையென்பது பொழிப்பு.

(க.) மனமாசுக்களாம் ஆறழுக்குகளையும் அறுத்து இல்லம் துறந்தாரையுங் காண்பதற்கு இல்லை. அவ்வகைத் துறந்தும் வீடுபேற்றைப் பெறுவதையுங் காணுவதற்கில்லையே என்னும் இரங்கற் கருத்து.

(வி.) உலக மக்கள் செயல்களைக் கண்டுணர்ந்த தெய்வப்புலவர் தனது மனமிரஞ்சி அறுவகை மனக்களங்கங்களையும் அறுத்து இல்லந்துறப்பவர்களைக் காண்பதற்கில்லையே அவ்வகைத் துறந்தும் முத்திபேறு பெற்றாரென்றறிவதற்கும் இல்லையேயென்று இரங்கிக்கூறிய விரிவு.


18. வெஃகாமெய்

இவ்வெஃகல் எனும் மொழி, வேதல், வெதும்பலென்னு மொழியினின்று தோன்றியது. காம வெதும்பல், கோப வெதும்பல், பேரவா வெதும்பல், பசி வெதும்பல் என்னும் வெப்பத்தை உணர்ந்தவையன்றி காம வெஃகல், கோபவெஃகல், பசியின் வெஃகலால் உண்டாங்கேடுகளை விளக்குமாறு வெகுளிக்குப் பீடமாம் வெஃகலை விளக்குகின்றார்.

1.நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.

(ப.) நடுவின்றி - சமநிலையின்றி, நன்பொருள் - இச்சிக்கும் பொருளைக்கண்டு, வெஃகில் - வெதும்பில், குடிபொன்றிக் - தன்குடி யொடுங்குவதன்றி, குற்றமு - பலகுறைகளும், மாங்கே தரும் - அதுவே கொடுக்குமென்பது பதம்.

(பொ.) தனது இச்சையை சம நிலையில் வையாது பேரவாவால் வெதும்பல் தன்னைக் கெடுப்பதுடன் அதுவே பலவகைக் குறைகளையும் உண்டாக்கும் என்பது பொழிப்பு.

(க.) பேரவாக்கொண்டு இச்சித்தப்பொருள் கிட்டாது வெதும்பல் தன் குடியிருப்பையே கெடுப்பதுடன் பலவகைக் குற்றங்களுக்கும் ஆளாக்கிவிடும் என்பது கருத்து.

(வி.) தனக்குக் கிடைத்த வரையிற் போதுமென்னும் நடுநிலைபெறாதும் இச்சித்த நன்பொருள்பெறாதும் வெதும்புவதினால் பேரவாக்கொண்ட உள்ளம் நிலையாது அலைந்து தன் குடி கெடுவதுடன் பலவகைத் துன்பத்தையுந் தருமென்பதற்குச் சார்பாய் குறுந்திரட்டு "கூறிடு காமவெஃகல் கேடுறுங்குற்றஞ்சாறும், சீறிடுங்கோபவெஃகல் சினையுறு துன்பங்காட்டும், ஆறிடா பசியின் வெஃக லகத்துயிர் போக்குங்கண்டீர், கோறிட கிடைத்தல் போற்றல் குற்றமென்றில்லையாமே" என்பது கொண்டு நடுநிலையற்று நன்பொருள் கிட்டாது வெதும்பலுங் குற்றம் என்பது விரிவு.

2.படுபயன் வெஃகிப் பழிபடுவ செய்யார்
நடுவன்மெ நாணு பவர்.

(ப.) நடுவன்மெ - பொதுவாய நிலையில், நாணுபவர் - ஒடுங்கிநிற்பவர், படுபயன் - கேட்டைத்தரும் பொருளை யிச்சித்து, வெஃகி - அவைகிட்டாது