பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

648 / அயோத்திதாசர் சிந்தனைகள்


9.அதனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு.

(ப.) அதனறிந்து - கேட்டி னிலைகளையுணர்ந்து, வெஃகாமெ - வெதும்பாத, வறிவுடையார்க் - விவேகமுடையாரின், திறனறிந் - நெறியினை யறிந்து, தாங்கே - அவர்களிடம், திரு - செல்வமானது, சேருந் - அடையுமென்பது பதம்.

(பொ.) கேட்டின் நிலைகளை உணர்ந்து வெதும்பாத விவேக முள்ளாரின் நெறியினை அறிந்து அவர்களிடம் செல்வஞ் சேரும் என்பது பொழிப்பு.

(க.) கேட்டின் வழிகளை உணர்ந்து வெதும்பலற்று நீதிநெறியில் நிற்கும் விவேகமிகுத்தோரது செல்வம் அழியாது சேரும் என்பது கருத்து.

(வி.) உள்ளவெதும்பலால் உண்டாகுங் கேடுகளை உணர்ந்த விவேகிகளின் நீதிநெறியை அறிந்து மென்மேலும் சுகச்செல்வஞ் சேருவதுடன் அஃது கள்ளர்களாலும், வஞ்சகர்களாலும், சூதர்களாலும் அழியாது தன் சந்ததியைக் காக்குந் திருவென விளங்கும் என்பதும் விரிவு,

10.இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமெ யென்னுஞ் செருக்கு

(ப.) இறலீனு - கேட்டினை யுணர்ந்தும், மெண்ணாது - அதனைக் கருதாது, வெஃகின் - வெதும்புவதாயின், விறலீனும் - பேரமுதை யீயினும், வேண்டாமெ - அதனைக் கருதாத, யென்னுஞ் செருக்கு - அகங்கரிப்புக் கொப்பாமென்பது பதம்.

(பொ.) கேட்டினை உணர்ந்துங் கருதாது வெதும்புவதாயின் பேரமுதைக் கொடுக்கினும் வேண்டாமென்று அகங்கரிப்பதற்கு ஒக்கும் என்பது பொழிப்பு.

(க.) இதனால் இக்கேடுண்டாயதென்று உணர்ந்தும் அவற்றைக் கருதாது மற்றும் பேரவாவால் வெதும்புவதாயின் பேரமுதை ஒருவர் ஈயினும் அதனை வேண்டாமெனத் தடுக்குஞ் செருக்குடையோனுக்கொப்பாம் என்பது கருத்து.

(வி.) காமிய வெதுப்பல், கோப வெதுப்பல், பேரவா வெதுப்பல், பசியின் வெதுப்பல்களால் உண்டாங் கேடுகளை உணர்ந்த நிலையே அமுதத்திற் கொப்பாயதாதலின் அதனைக் கருதாது மறந்தும் வெதும்புறுவதாயின் பேரமுதை யொருவர் அளித்தும் அதனைத் தனது செருக்கால் வேண்டாமென்று அகற்றியதற் ஒக்கும் என்பது விரிவு.


19. கள்ளாமெய்

இவைகள் யாவும் இல்லறத்தோன் ஒழுக்கங்களாதலின் அவ்வாழ்க்கையில் அன்னியன் பொருளை யிச்சிப்பவனது கேட்டையும் இச்சியாதோன் சுகத்தையும் இவ்விடம் விளக்குகின்றார்.

1.எள்ளாமெ வேண்டுவா னென்பா னெனத்தோன்றுங்
கள்ளாமெ காக்கத்தன் னெஞ்சு.

(ப.) எள்ளாமெ - மற்றவர் நிந்தைக்கூடாதென, வேண்டுவா - கோறுவோன், னென்பா - என்னப்படுவோன், னெனத்தோன்றுங் - தனக்குத் தோன்றும், கள்ளாமெ - அன்னியன்பொருளை யிச்சியாதவனென, தன்னெஞ்சு - தனதுள்ளத்தைக், காக்கத் - காக்கக் கடவ னென்பது பதம்.

(பொ.) மற்றவர் நிந்தைக் கூடாதெனக் கோறுவோன் காணும் அன்னியர்பொருளை இச்சியாதவ னெனத் தனதுள்ளத்தைக் காக்கக்கடவன் என்பது பொழிப்பு.

(க.) அன்னியரால் தன்னை நிந்திக்காமல் கார்த்துக்கொள்ள வேண்டியவன் அன்னியர் பொருளைக்கண்டு இச்சியாது தனதுள்ளத்தைக் கார்க்கக்கடவது என்பது கருத்து.

(வி.) இவன் திருடன், இவன் அயோக்கியன் எனப் பலராலும் நிந்திக்கப்படாமல் வாழ்கவேண்டு மென்னும் விருப்பமுடையோன் தனது உள்ளத்தின்கண் அன்னியன் பொருளை இச்சிக்குங் குணம் எழாமல் காத்துக்கொள்ள வேண்டுமென்பது விரிவு.