பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

650 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) அழியாக் கருணையைக் கருதி சிவநிலையமாதல், அழியும்பொருளை நோக்கி யிச்சிப்பவரிடத்து இரா என்பது கருத்து.

(வி.) அன்னியரது பொருளினை இச்சித்து அதையே நோக்குவோரிடத்து அருளைவிரும்பி அன்பில் நிலைக்கும் நோக்கமிராது என்பது விரிவு.

6.அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர்.

(ப.) அளவின்க - நீதிநெறியில், ணின்றொழுக - ஒழுக்கத்தில், லாற்றார் - ஆறுத லடையாதவர்கள், களவின்கட் - அன்னியர் பொருளை யபகரிக்கும் வழியில், கன்றிய - வெதும்பிய, காதலவர் - அவாமிகுத்தவர்களாவரென்பது பதம்.

(பொ.) நீதிநெறியின் ஒழுக்கத்தில் ஆறுதலடையாதவர்கள் அன்னியர் பொருளை அபகரிக்கும் வழியில் வெதும்பிய அவா மிகுத்தவர்களாவர் என்பது பொழிப்பு.

(க.) நீதிநெறி ஒழுக்கத்தின் சுகநிலை அறியாதவர்கள் அன்னியர் பொருளை அபகரிக்கும் வழியில் மனம் வெதும்பி அவாகொண்டு அலைவார்கள் என்பது கருத்து.

(வி.) அன்னியரது பொருளை அபகரிக்கும் எண்ணத்திலேயே மனங்கன்றி அவாமிகுத்தவர்களுக்கு நீதிநெறி ஒழுக்கத்தின் செயலால் உண்டாம் ஆறுதலும் அதன் பயனும் விளங்காது என்பது விரிவு.

7.களவென்னுங் காரறி வாண்மெ யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ளில்

(ப.) களவென்னுங் - அன்னியர் பொருளை அபகரிப்பதென்னும், காரறி - அஞ்ஞான, வாண்மெ - அகங்கரிப்பு, யளவென்னு - நீதிநெறி யொழுக்கத்தால், மாற்றல் - ஆறுதல், புரிந்தார்களில் - அடைந்தவர்களிடத் திராவென்பது பதம்.

(பொ.) அன்னியர் பொருளை அபகரிப்பதென்னும் அஞ்ஞான அகங்கரிப்பு நீதிநெறி ஒழுக்கத்தால் ஆறுதலடைந்தவர்களிடத்து இரா என்பது பொழிப்பு.

(க.) நீதிநெறி யொழுக்க அளவில் ஆறுதலடைந்தோருக்கு அன்னியர் பொருளை அபகரிப்போம் என்னும் அஞ்ஞானமாய அகங்கரிப்பு இரா என்பது கருத்து.

(வி.) நீதியில் நடக்க வேண்டிய அளவும் நெறியில் நிற்கவேண்டிய அளவுங் கடக்காது ஒழுகி ஆறுதலடைந்து உள்ளார்க்கு அன்னியர் பொருளை அபகரிக்க வேண்டும் என்னும் அஞ்ஞானமாகிய அகங்கரிப்பு உள்ளத்தில் மறந்தும் எழாது என்பது விரிவு.

8.அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் காவு.

(ப.) அளவறிந்தார் - நீதிநெறி யளவுகடவாது நின்றோர், நெஞ்சத - உள்ளத்தின்கண், தறம்போல நிற்குங் - ஆனந்தம் நிலைத்திருப்பதுபோல, களவறிந்தார் - அன்னியர் பொருளை யபகரிப்போரது, நெஞ்சிற் - உள்ளத்தின் கண், கரவு - துக்கம் நிலைத்திருக்குமென்பது பதம்.

(பொ.) நீதிநெறி அளவுகடவாது நின்றோர் உள்ளத்தின்கண் ஆனந்தம் நிலைத்திருப்பதுபோல அன்னியர் பொருளை அபகரிப்போரது உள்ளத்தின்கண் துக்கம் நிலைத்திருக்கும் என்பது பொழிப்பு.

(க.) நீதிநெறியின் அளவறிந் தொழுகுவோர் இதயத்தில் ஆனந்தம் நிலைத்திருப்பதுபோல கள்ளர்களிடத்து துக்கம் நிலைத்திருக்குமென்பது கருத்து.

(வி.) நீதிநெறியின் ஒழுக்க அளவுகடவாத தன்மப்பிரியர்களுக்கு ஆனந்தம் நிலைத்திருப்பதுபோல அன்னியர்பொருளை அபகரிக்கும் வஞ்ச நெஞ்சினர்களுக்கு மாறா துக்கமும் பயமும் நிலைத்திருக்கும் என்பது விரிவு.