பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 651


9.அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

(ப.) களவல்ல - அன்னியர் பொருளையபகரிக்கலாகாதென, தேற்றாதவர் - சொல்லியுங் கேளாதவர், மற்றைய - ஏதுக்குமஞ்சாது, அளவல்ல - நீதிநெறியற்ற, செய்தாங்கே - செயல்களைச்செய்து, வீவர் - கெடுவரென்பது பதம்.

(பொ.) அன்னியர் பொருளை அபகரிக்கலாகாதென சொல்லியுங் கேளாதவர் எதுக்குமஞ்சாது நெறியற்ற செயல்களைச் செய்து கெடுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) களவுசெய்வது கொடிது என்று கூறியும் அவற்றை உணர்ந்தறியாதோர் யாதொன்றுக்கும் அஞ்சாது கொடுஞ் செயல்களைச்செய்து கேடுண்டு அலைவார்கள் என்பது கருத்து.

(வி.) களவாகாது என்பதே களவல்ல என மறுவியுளதால் அன்னியர் பொருளை அபகரிப்பது தீங்கை விளைவிக்குமென தேற்றக்கூறியுந் தேறாத வன்னெஞ்சினர் ஏதுக்குமஞ்சாது மற்றுங் கொடுந் தீங்குகளைச்செய்து தீவினைக்குள்ளாகி மாளாதுன்புற்று கெடுவார்களென்பது விரிவு.

10.கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தே ளுலகு.

(ப.) கள்வார்க்குத் - களவாணிக்கப்படரை, தள்ளு - அகற்றும், முயிர் நிலை -உண்மெய், கள்ளார்க்கு - களவாணிக ளல்லோரை, தள்ளாது - அகற்றாது, புத்தேளுலகு - புத்ததேவ னுலகமென்பது பதம்.

(பொ.) களவாணிக்கப்படரை உண்மெ நிலை அகற்றும் களவாணிக ளல்லோரை புத்ததேவன் உலகம் அகற்றாது என்பது பொழிப்பு.

(க.) அன்னியர் பொருளை அபகரிக்குங் கள்ளரை அவர்களுள் உண்மெ நிலையாம் உயிர்நிலையே அகற்றும். அன்னியர் பொருளை அபகரிக்காதோரை அகற்றாது புத்ததேவன் உலகுய்க்கும் என்பது கருத்து.

(வி.) உயிர்நிலையே உண்மெய்யனாம் புத்ததேவன் உலகாதலின் அந்நிலை உணராது அன்னியர் பொருள்மீது அவாக்கொண்டு அலைவோரை சுகநிலை கெட அகற்றும். அவ்வவா அற்றோரை உயிர்நிலையாம் புத்ததேவன் உலகம் அகற்றாது சேர்த்து சுகம்பெறச்செய்யும் என்பது விரிவு.

20. கள்ளுண்ணா மெய்

இல்லறத்தோன் தனது வாழ்க்கை ஒழுக்கத்தில் எத்தகைய நிதானமுற்றிருப்பினும் வழுவுற்று அலைவது இயல்பாதலின் அத்தகையோன் தனது அறிவை மயக்கும் கள்ளினை அருந்துவானாயின் முற்றும் அறிவு மயங்கி பாழடைவானாகலின் அக்கள்ளினை அருந்துவோனது கேடுகளை விளக்குகின்றார்.

1.உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.

(ப.) கட்காதல் - கள்ளின்மீதவா, கொண்டொழுகுவார் - கொண்டலைவோர், ரெஞ்ஞான்றும் - எக்காலத்தும், உட்கப்படாஅ - தங்கள் நாணமற்று, ரொளியிழப்ப - கீர்த்தியையு மழித்துக்கொள்ளுவார்களென்பது பதம்.

(பொ.) கள்ளின்மீது அவாக்கொண்டு அலைவோர் எக்காலத்தும் தங்கள் நாணமற்று கீர்த்தியையும் அழித்துக் கொள்ளுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) கள்ளை அருந்தும் ஆசைகொண்டு அலைவோர் எந்தகாலத்தும் வெட்கமென்பது அற்று தங்கள் புகழையுங் கெடுத்துக் கொள்ளுவார்கள் என்பது கருத்து.

(வி.) தனது அறிவை மயக்குங் கள்ளென்று அறிந்தும் அதன்மீது காதல்கொண்டு அலைவோர் தான்கற்றக் கல்வியிலுங் கைத்தொழிலிலும் உண்டாயக் கீர்த்தியும் அழிந்து எக்காலுங் கேடுற்று அலைவார்கள் என்பது விரிவு.