பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 657


(வி.) மனிதனது வாழ்நாளில் யாதாமோர் சீவப்பிராணிகளையுந் துன்பஞ்செய்யாது அவைகளின் மீது கருணைவைத்து காப்பானாயின் தனக்கு மரணத்துக்கு ஒப்பாய துன்பங்கள் யாதும் அணுகாது என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "பிரப்பு நீர்வையகத்துப்பல்லுயிர்கட்கெல்லாம், இரப்பாரில் வள்ளல்களுமில்லை - இரப்பவர், இம்மெப்புகழு மினிச்செல் கதிப்பயனும், தம் மெத் தலைப்படுத்தலால்" என்னும் சருவ உயிர்களின்மீதும் இரக்கமுற்றோருக்கு இம்மெய்யிற் புகழும் இனிசெல்லும் நற்கதியின் பயனும் உண்டாம் என்பது கொண்டு ஒரு உயிரையும் வதையாதோன் தன்னுயிர்த் துன்பம் அடையான் என்பது விரிவு,

7.தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.

(ப.) தன்னுயிர் - தனதுயிர், நீப்பினும் - நீங்குங்காலமாயினும், பிறிதுயிர் - மற்றும் சீவப்பிராணிகளினுயிரை, நீக்கும்வினை - போக்குஞ்செயலை, தான் - தானே, செய்யற்க செய்யாதகலுகவென்பது பதம்.

(பொ.) தனதுயிர் நீங்குங்காலமாயினும் மற்றும் சீவப்பிராணிகளின் உயிரை போக்குஞ் செயலைத் தானே செய்யாது அகலுக என்பது பொழிப்பு.

(க.) தன்னுயிர் நீங்கும் ஒத்தக்காலம் நேரினும் அக்காலத்தும் பிறிதோருயிரைத் தானே கொலைசெய்யலாகாது என்பது கருத்து.

(வி.) சில கூட்டத்தோருள் பெரியோருக்கேனும் சிறியோருக்கேனு ஓர் பிணியுண்டாயின் உயிர்போ மென்று அஞ்சிப் பிறிதுயிரினைக் கொல்லும் பேதையர்களின் செயலை உணர்ந்த பெரியோன் தன்தீவினையால் தனதுயிர் நீங்கும்படியான பிணியின் உபவத்திரவந் தோன்றியுள்ளதைத் தானேயுணர்ந்து அதற்கேதுவாய சிகிட்சைபுரியாது தன்னுயிர்காக்கப் பிறிதுயிரை வதைப்பதாயின் அத்தீவினையின் பயனே மேலும் மேலுந் துன்பத்தை விளைவிக்குமாதலின் தன்னுயிர் நீங்குங்காலம் நேரினும் அன்னியப் பிராணிகளுக்குத் துன்பத்தை உண்டுசெய்யலாகாது என்பது விரிவு.

8.நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை.

(ப.) நன்றாகு - சகல சுகத்தையுந்தரும், மாக்கம் - செல்வமே, பெரிதெனினும் - மேலாக விளங்கினும், சான்றோர்க்குக் - சாந்தரூபிகளுக்கு, கொன்றாகு - கொல்லாவிரதமாகும், மாக்கம் - செல்வமே, கடை - நிலையாமென்பது பதம்.

(பொ.) சகலசுகத்தையுந்தரும் செல்வமே, மேலாகவிளங்கினும் சாந்தரூபிகளுக்குக் கொல்லாவிரதமாகுஞ் செல்வமே நிலையாம் என்பது பொழிப்பு.

(க.) உலகமக்களுக்கு செல்வமே பெரிதாக விளங்கினும் மேன்மக்களாம் சாந்தரூபிகளுக்குக் கொல்லாவிரதச் செல்வமே பெரிது என்பது கருத்து.

(வி.) உலகத்தில் வாசஞ்செய்யும் மனுமக்கள் யாவருக்கும் செல்வமே ஆதாரமாயிருந்து விளங்குவதுபோல சான்றோர்களாம் மேன்மக்களுக்கு ஓருயிரையும் வதைச்செய்யா விரதச்செல்வமே பெரிதாகும் என்பது விரிவு.

9.கொலைவினய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மெ தெரிவா ரகத்து.

(ப.) புலைவினையர் - மாமிஷங் கொணர்ந்து விற்போராலும், புன்மெ - இன்புறபுசித்து, தெரிவாரகத்து - உணர்ந்தோர் வீடுகளாலும், கொலைவினையராகிய - கொல்லுந் தொழிலினையுடைய, மாக்கள் - மனுக்கள் தோன்றுகிறார்களென்பது பதம்.

(பொ.) மாமிஷங் கொணர்ந்து விற்போராலும் மாமிஷம் புசித்துணர்ந்தோர் வீடுகளாலும் கொல்லுந் தொழிலினையுடைய மனுக்கள் தோன்றுகிறார்கள் என்பது பொழிப்பு.

(க.) மாமிஷத்தைக் கொண்டுவந்து விற்பவராலும், உருசிகொண்டு அவற்றைப் புசிப்போர் வீடுகளாலும் உயிரினை வதைப்போர் உண்டாகின்றார்கள் என்பது கருத்து.