பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 659


(பொ.) நிலையற்ற தேகியாயினுந் தூய மொழிகளால் களங்கமற்ற தென்பதாயின் நித்திய சுப்ரதேகியாக செய்விக்கும் என்பது பொழிப்பு.

(க.) பொய்யாய நிலையற்ற தேகத்தை எடுத்திருந்த போதினும் தனது தூய வாய்மொழியால் களங்கமறுவானாயின் நன்மெய்யனாம் நித்தியப் பிரகாசனாக விளங்குவான் என்பது கருத்து.

(வி.) நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான் என்னும் அநித்திய தேகத்தை உடையவனாயினும் தனது வாய்மெயாம் தூயமொழிகளால் மனமாசகலுவானாயின் என்றும் அழியா சுயம்பிரகாச தேகியாக உலாவுவான் என்பது விரிவு.

3.தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

(ப.) தன்னெஞ்சறிவது - தன்னைத் தானே அறிவது, பொய்யற்க - மரணத்தை ஜெயித்து நித்தியசீவனாகுக, பொய்த்தபின் - மறந்தும் மரிப்பானாயின், தன்னெஞ்சே - மறுமெயிற் றனதுள்ளமே, தன்னைச்சுடும் - தன்னை மாறா துக்கத்திற்கு ஆளாக்கும் என்பது பதம்.

(பொ.) தன்னைத்தான் அறிவது மரணத்தை ஜெயித்து நித்தியசீவனாகுக, மறந்தும் மரிப்பானாயின் மறுமெயில் தன்னுள்ளமே மாறா துக்கத்திற்கு ஆளாக்கும் என்பது பொழிப்பு.

(க.) தனது மனக்களங்கங்களைத் தானே ஆராய்ந்து அகற்றுதல் மறுபிறவியை ஜெயித்தற்கேயாம். அங்ஙனம் ஆராயாது பொய்த்துப் போவானாயின் அவனது மனமாசுகளே பிறவிகள் தோரும் மாறா துன்பத்தால் தகிக்கும் என்பது கருத்து.

(வி.) பொய் மொழியால் இன்னின்ன தீங்குகள் விளையுமென்றும் மெய்ம்மொழியால் இன்னின்ன சுகங்கள் விளையுமென்றும் தன்னெஞ்சைத் தானே ஆராய்ந்தறிவதினால் மனமாசகன்று பொய்யற்ற நித்திய உண்மெய்யனாவான். அங்ஙனந் தன்னெஞ்சைத் தானே ஆராய்ந்துணராமல் பொய்யனாம் மரணத்திற்குள்ளாவனேல் தீராப்பிறவியிற் சுழன்று மாறா துக்கமாம் சூடுண்டு அலைவான் என்பது விரிவு.

4.உள்ளத்தாற் பொய்யா தொழுகினுலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளன்.

(ப.) உள்ளத்தாற் - மனதிலும், பொய்யாதொழுகி - பொய் யென்ப தெழாது வாழ்வோன், னுலகத்தா - உலக மக்கள், ருள்ளத்துளெல்லா - எல்லோரிதயத்திலும், முளன் - எண்ணக்கூடியவ னாவனென்பது பதம்.

(பொ.) தன் மனதிலும் பொய் என்பது எழாது வாழ்வோன் உலகமக்கள் எல்லோரிதயத்திலும் எண்ணக்கூடியவ னாவன் என்பது பொழிப்பு.

(க.) தன் மனதிலும் பொய்யென்பது எழாது வாழ்பவன் உலகத்தோரால் மெய்யனென்று கொண்டாடப்படுவதுடன் அவரவர்கள் உள்ளத்திலும் நிலைத்திருப்பான் என்பது கருத்து.

(வி.) மனிதன் தனது உள்ளத்திலும் பொய்யென்பதை எழவிடாது காத்துக்கொள்ளுவானாயின் அவனை உலகத்தோர் பொய் சொல்லாப் பெரியோனென்று கொண்டாடுவதுடன் தங்களுக்குள் பொய்மொழி எழுங்காலெல்லாம் அம்மெய்யனைத் தங்கள் தங்கள் உள்ளங்களிற் சிந்தித்து மகிழ்வார்கள் என்பது விரிவு.

3.மனத்தொடு வாய்மெ மொழியிற் றவத்தொடு
தானஞ் செய்வாரிற் றலை.

(ப.) மனத்தோடு - தனதுள்ளமறிய, வாய்மெ மொழியிற் - நாவினால் மெய்ப்பேசுவோன், றவத்தோடு - நற்சாதனத்துடன், தானஞ்செய்வாரிற் - தருமஞ்செய்வோர்களிலும், தலை - முதல்வனாவனென்பது பதம்.

(பொ.) தன்னுள்ளம் அறிய நாவினால் மெய்பேசுவோன் நற்சாதனத்துடன் தன்மஞ்செய்வோர்களிலும் முதல்வனாவன் என்பது பொழிப்பு