பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

660 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) நற்சாதனம் புரிவோரிலும் தருமஞ் செய்வோரிலும் தன் மனதாற நாவினால் மெய்ப்பேசுவோனே பெரியோன் என்பது கருத்து.

(வி.) நற்சாதனமாம் தவத்தில் ஒழுகுவோரிலும், தானமாம் வரையறக் கொடுப்போரினும் தன் மனமாற நாவினால் மெய்யினையே பேசுவோன் எவனோ அவனே மேற்கூறிய இருவருக்கும் முதல்வனாவான் என்பது விரிவு.

6.பொய்யா மெயன்ன புகழில்லை யெய்யாமெ
யெல்லா வறமுந் தரும்

(ப.) பொய்யாமெ - பொய்ப் பேசாதவனென, யன்ன - விளங்கினும், புகழில்லை - கீர்த்தியில்லை, யெய்யாமெ - பொய்மொழிகூறி மற்றவனைக் கெடுக்காதிருப்பதே, யெல்லாவறமுந் - சகல தன்மங்களையும், தரும் - கொடுக்குமென்பது பதம்.

(பொ.) பொய்ப்பேசாதவனென விளங்கினும் கீர்த்தியில்லை பொய்ம்மொழி கூறிமற்றவனைக் கெடுக்காதிருப்பதே சகல தன்மங்களையுங் கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) நாவினாற் பொய்ப்பேசாதவனென விளங்கினுங் கீர்த்தியில்லை. மற்றவனைப் பொய்ச்சொல்லிக் கெடுக்காமலிப்பதே கீர்த்தியாதலின் அஃது சகலதன்மங்களையுந் தானே கொடுக்கும் என்பது கருத்து.

(வி.) உலகத்தில் இவன் பொய்ப்பேசாதவனென உலாவினுங் கீர்த்தியில்லை. பொய்ம்மொழிகூறி மற்றவனுக்குக் கேடுண்டாக்காமலிருத்தலே மற்றய தன்மங்களைப் பெறுதற்கு ஆதாரமாயிருத்தலால் மற்றோர்க்குத் தீங்கிழைக்கா வாய்மெயே மேலென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “பொய்ம்மேற்கிடவாத நாவும் புறனுரையைத், தன்மேற்படாமெ தவிர்ப்பானு - மெய்ம்மேல், பிணிப்பண் பழியாமெ பெற்றபொழுதே, தணிக்குமருந்துதலை" என்பதுகொண்டு பொய்மேற்கிடவாத நாவே பெரிதென்பது விரிவு.

7.பொய்யா மெபொய்யா மெயாற்றி னறம்பிற
செய்யாமெ செய்யாமெ நன்று.

(ப.) பொய்யாமெ - மனதிலும் வாக்கிலும் பொய்யெழாமற் காத்து, பொய்யாமெ - மரித்தா னென்னும் பொய்த்துப் போகாது, யாற்றி - காம வெகுளி மயக்கங்களை தணித்துக்கொண்டோன், னறம்பிற - பிறருக்கு தன்மத்தை, செய்யாமெ - கொடாமலும், செய்யாமெ - போதியாதிருக்கினும், னன்று - நலமா மென்பது பதம்.

(பொ.) மனதிலும் வாக்கிலும் பொய்யெழாமற் காத்து மரித்தான் என்னும் பொய்த்துப்போகாது காமவெகுளி மயக்கங்களைத் தணித்துக் கொண்டோன் பிறருக்கு தன்மங்கொடாமலும் போதியாதிருக்கினும் நலமாம் என்பது பொழிப்பு.

(க.) அன்னியருக்கு தன்மத்தைப்போதியாமலுங் கொடாமலுமிருக்கினும் பெரிதல்ல, மனதிலும் நாவிலும் பொய் எழாமற் காத்து காம வெகுளி மயக்கங்களையாற்றித் தண்மெயுற்று உண்மெய்கண்டு மரணத்தை ஜெயிப்பதே நன்றென்பது கருத்து.

(வி.) அன்னிய மக்களுக்கு தன்மத்தைப் போதியாவிடினும், ஈயாவிடினும் பெரிதல்ல. ஒருவன் தன் மனதிலேனும் வாக்கிலேனும் பொய்யை எழவிடாமற் கார்ப்போன், உள்ளதை இல்லையென்னாதும், இல்லாததை இல்லையென்பதுந் துணிபாதலின் அவற்றை மறுத்து பொய்யை நாவிலும் மனதிலும் எழவிடாமற் காத்து கோபாக்கினி காமாக்கினி தணிந்து ஆற்றலுறுவோனே பொய்த்தானென்னும் மரணத்தை ஜெயித்து மெய்த்தோனென்னும் உண்மெயுணர்ந்து துக்கத்தைப் போக்கிக் கொள்ளுவான் என்பது விரிவு.

8.புறத்தூய்மெ நீரான மையு மகத்தூய்மெ
வாய்மெயாற் காணப் படும்.

(ப.) புறத்தூய்மெ - உடலினது சுத்தம், நீரானமையும் - அப்பினா லுண்டாம், மகத்தாய்மெ - உண்மெய்யின் சுத்தமானது, வாய்மெயாற் - நாவினாலெமூஉ மெய்ம்மொழிகளால், காணப்படும் - தோற்றப்படுமென்பது பதம்.